Wednesday, 8 July 2026

பன்னிரு புனிதர் காதை

 

 தமிழில் முதல் கிறித்தவக் காப்பியம் 

 

        கருவைநகர் கவிராயன் சிதம்பரநாதன் என்பவரால் 1603 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நூல், “பன்னிரு புனிதர் காதை என்னும் கிறித்தவக் காப்பியம் ஆகும். இதுவே தமிழில் இயற்றப்பட்ட முதல் கிறித்தவக் காப்பியம். கருங்குளம் அல்லது கரிவலம்வந்த நல்லூர் என்னும் ஊரே இக்கருவை நகர் என்பது சிலரின் ஊகம். இக்காப்பியம் இயேசு கிறிஸ்துவின் இறையடியார்கள் பன்னிருவரைப் பற்றிப் பாடப்பெற்றது. இவர்களுள் பதின்மர் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் (பேதுரு என்னப்பட்ட சீமோன், அந்திரேயா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, யோவான், தோமா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, கானானியனாகிய சீமோன்); மற்ற இருவர் அப்போஸ்தலராகிய பவுலடியார் மற்றும் தூய அலெசு ஆகியோர்.   பன்னிருவரின் வரலாறு இதில் பாடப்பெற்றிருந்தாலும், பாட்டுடைத் தலைவன் ஒருவரே. பன்னிருவரின் ஆற்றலும், அவர்கள் வாழ்வில் நடந்த மீமானுடச் செயல்களும் இயேசு கிறிஸ்துவின் அருளாலும் ஆற்றலாலும் மட்டுமே நிகழ்ந்தவை என்பதால், இயேசு கிறிஸ்து ஒருவரே இக்காப்பியத்தின் பாட்டுடைத் தலைவராக உள்ளார். வத்திகான் திருத்தூதர் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஓலைச்சுவடி வடிவிலிருக்கும் இந்நூல், அண்மையில் கண்டறியப்பட்டதன் மூலம், இக்காப்பியம் குறித்து அறியமுடிகிறது.

காப்பியம் படைக்க ஊக்கியவர் 

        திருமந்திர நகர் என வழங்கப்பெறும் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ஏழு கடல் துறை எனப் பெயர் பெற்ற கடற்கரைப் பட்டினங்களை அதிரியன் தெக்குரிசு என்பார் பரதகுலத் தலைவனாக ஆட்சிபுரிந்தார்.  அவரின் தம்பி சந்தக்குரிசு என்பவரின் முயற்சியால் இப்பன்னிரு புனிதர் காதை என்னும் காப்பியம் இயற்றப்பட்டது என்பதை,

    நீரார்புவி ஏழ்துறை வேந்தன் நீதிப் பரதகுலத் தேவன்

    பேரார் மனுவேல் பிழைபொறுக்கும் பெருமாள் அதருபே தெக்குரிசு

    தாரார் புயத்தான் திருத்தம்பி சந்தக் குரிசு முயற்சியினால்

    சீராரிப் பன்னிருவர் கதை செஞ்சொற் கவியாச் சிறந்தனவே

என்னும் செய்யுளால் அறியமுடிகிறது. 

தமிழில் முதல் கிறித்தவக் காப்பியம்

        பன்னிரு புனிதர் காதை என்னும் கிறித்தவக் காப்பியம் 1603 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஏழாம் நாள் இயற்றப்பட்டது என்பதை இந்நூலிலுள்ள,

        நாயகன் புகடச் சேசு நானிலத்துதித் தருள் ஆண்டு

        ஆயிரத் தறுநூற்று மூன்று ஆனியோர் ஏழில்

        பாயிரத் தொடுபன்னிரு புனிதர்தங் கதையும்

        ஏயுமெய்த் தவர் முன்னாங்கு ஏறிய தன்றே

 

என்னும் செய்யுள் மூலம் அறியமுடிகிறது. பாயிரத்தின் பத்தாவது செய்யுள் இதுவாகும். இது தமிழில் எழுதப்பட்ட முதல்  கிறித்தவக் காப்பியம். இந்நூல் எழுதப்பட்டு  125 ஆண்டுகளுக்குப் பின்னரே வீரமாமுனிவரால் தேம்பாவணி 1728 இல் இயற்றப்பட்டது.

காப்பிய அமைப்பு 

        இக்காப்பியம் பாயிரத்தைத் தொடர்ந்து 12 காதைகளைக் கொண்டது. அவை சுத்தமான சம் பேதுரு காதை, சுத்தமான பாவுலு காதை, சுத்தமான அந்திரூ காதை, சுத்தமான சிறிய தியோகு காதை, சுத்தமான சுவான் (யோவான்) இவாஞ்சலீத்தின் காதை, சுத்தமான சந்தோமை காதை, சுத்தமான பெரிய தீயோகு காதை, சுத்தமான பிலிப்பு காதை, சுத்தமான பொருத்தோலமே காதை, சுத்தமான மத்தேசு காதை, சுத்தமான சீமான் சூதேயு காதை, சுத்தமான அலெசு காதை என்பனவாகும். ஒவ்வொரு காதையிலும் ஒவ்வொரு புனிதர்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. இக்காப்பியம் சுமார் 500 செய்யுட்களைக் கொண்டது. புனிதர் என்னும் சொல்லுக்குப் பதிலாக அன்டிரிக் அடிகளாரின் நூல்களில் பயின்றுவரும் சுத்தமான என்னும் சொல்லை இக்காப்பியத்தில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.

பாயிரம் 

        இந்நூலின் தொடக்கத்தில்  பாயிரம் இடம்பெற்றுள்ளது. இப்பாயிரத்திலுள்ள பாடலில்,

            மூதறிவு உணர்ந்ததெய்வ முனிவர் பன்னிருவரீந்த

                             வேதநூல் அவனிமீது விளங்கிடப் புரிந்தகாதை

                             ஆதியாம் சேசுகூட்டத் தருந்தவ முயலுந்தூய

                             பாதிரிப் புனிதர்தந்த உரைப்படிப் பாடலுற்றேன் 

என்று கூறப்படுவதால், அன்டிரிக் அடிகளார் (1520-1600) என்னும் சேசுசபைப் பாதிரியாரின் ஊக்கமும், அவர் எழுதிய 669 பக்கங்களைக் கொண்ட “அடியார் வரலாறு (1856) என்னும் நூலும் இக்காப்பியத்தினை இயற்றக் காரணம் என்பதனை அறியமுடிகிறது. இப்பாயிரத்தில்,

                    நீர்பூத்த கடலன்ன நெடுங்கருணைக்

                            கடல்பூத்த நீலக் கண்ணாள்

                    தார்பூத்த கொந்தளகச் சந்தமரி

                            யீன்றெடுத்த தம்பி ரானைப்

                    பார்பூத்த உயிரனைத்தும் படைத்தினிது

                            காத்தருளும் பண்பி னானை

                    சீர்பூத்த திருவுருவைச் சேசுநாயகனை

                            யென்றுஞ் சிந்தை செய்வாம்

 

என்னும் இறைவணக்கப் பாடலுடன் 10 செய்யுட்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து இயேசுவின் திருச்சிலுவை (குரிசு) இப்பாயிரத்தில் போற்றப்படுகிறது.  இந்நூல் பன்னிரு இறையடியார்களின் மாண்பினை எடுத்தியம்புவதால் பன்னிரு புனிதர் காதை என்னும் பெயர் கொண்டது என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.  

சிலுவையின் சிறப்பு

        பாயிரத்திலுள்ள மூன்றாவது செய்யுள், திருச்சிலுவை வணக்கம் என்னும் தலைப்பில்,

பொன்னெடும் குரிசு விண்ணோர் போற்றிடும் குரிசு நம்பால்

துன்னிடும் துயரும் நோவும் தொலைத்திடும் குரிசு நாளும்

அன்னையும் பிதாவும் ஆகி அடியருக்(கு) இரங்கும் சேசு

மன்னவன் இருந்த தெய்வக் குரிசது வணக்கஞ் செய்வோம்

 

என இடம்பெற்றுள்ளது. இச்செய்யுள் சிலுவையின் சிறப்பை எளிமையாக நம் கண்முன் நிறுத்துகிறது.

1. சுத்தமான சம் பேதுரு காதை

        பாயிரத்தைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள முதல் காதை சுத்தமான சம் பேதுரு காதை எனப்படும். இக்காதையில் பேதுரு என்னப்பட்ட சீமோனின் வரலாறு எடுத்தியம்பப்பட்டுள்ளது. இக்காதையில் அமைந்த முதலிரண்டு செய்யுட்கள் இறைவாழ்த்தாக உள்ளன. அவற்றுள் ஒரு செய்யுள்,

கார்கொண்ட மழையென்னக் கருணைமழை

        பொழிந்துநெறி கடவா வண்மைப்

பேர்கொண்ட பெருந்தகைச் சம் பேதுருமா

        தவப்புனிதப் பெற்றியோன் முன்

நீர்கொண்ட கடலுலகிற் புரிந்தருள்

        காரணத்தை நெஞ்சில் நினைந்துபோற்றச்

சீர்கொண்ட கன்னிமரி பொன்னுதரத்

        துதித்தானைச் சிந்தை செய்வோம் 

என அமைந்துள்ளது. அடுத்துவரும் நான்கு செய்யுட்கள் நாட்டுச் சிறப்பு என்னும் தலைப்பில் அமைந்துள்ளன. இந்நாட்டுச்சிறப்புப் பகுதியிலுள்ள,

                  தேனரும்பு பொற்றாது புன்னையஞ் சினையின்

                    வானடைந்த காரெழிலி புக்குறங்க வண்டுறங்க

                    மீனருந்திய வொண்சிறைக் குருகு வீற்றிருக்கும்

                    கானங்கழி நெய்தல்சூழ் கலிலை நன்னாடு 

என்னும் செய்யுளில் கலிலேயா நாட்டின் வளம் கூறப்படுகிறது.  எஞ்சியுள்ள செய்யுட்கள் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான பேதுருவைப் பற்றியனவாக அமைந்துள்ளன.

2. சுத்தமான பாவுலு காதை

        இந்நூலில் இரண்டாவது காதையாகச் சுத்தமான பாவுலு காதை அமைந்துள்ளது.  இதனை,

    கடல்மன்னும் பெரும்புவியிற் கிரீசித்து

           வேதம்நிறுத்துங் கருணைத் தூயோன்

    திடன்மன்னு பாவுலுவின் பெருங்காதை

           செந்தமிழ் ஆசிரியோன் போற்ற

    உடல்மன்னு பெருங்குரிசில் அறையுண்ட

           பெருமானை யொப்பி லானை

    அடல்மன்னும் இறையவனைப் பொறையுடைய

           நாயகனை அகத்துள் வைப்பாம்

என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  திருத்தூதராகிய பவுலின் வரலாறு இக்காதையில் இடம்பெற்றுள்ளது.

3. சுத்தமான அந்திரூ காதை

        இந்நூலின் அமைந்த மூன்றாவது காதை இயேசு கிறிஸ்துவின் மீது அன்புகொண்டு அவர்வழி நடந்த அந்திரூ (அந்திரேயா) என்னும்  சீடரைப் பற்றியதாக அமைந்துள்ளது.  இதனை நூலசிரியர், “புயல்மன்னு நெடுங்கருணைச் சேசுநாயகனை அன்பு புரிந்து போற்றும் செயல்மன்னு மாதவத்தோன் அந்திரூயு அப்போசுத்தலுவாய்ச் சிறந்த காதை என்று கூறித் தொடங்குகிறார்.

4. சுத்தமான சிறிய தியோகு காதை

        நான்காவது காதை சுத்தமான சிறிய தியோகு காதை என்பதாகும். இக்காதையில் அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபுவின் வரலாறு எடுத்தியம்பப்பட்டுள்ளது.  இக்காதையை நூலாசிரியர் “ஏர்மலி சிறியதியோகு என்னும் முனிசரிதை தன்னைப் பார்மலி புகழினோங்கப் பைந்தமிழ்ப் பாடலுற்றேன் என்று குறிப்பிட்டுத் தொடர்கிறார்.

5. சுத்தமான சுவான் (யோவான்) இவாஞ்சலீத்தின் காதை

        ஐந்தாவதான காதை சுத்தமான சுவான் இவாஞ்சலீத்து காதை என்பதாகும். இக்காதை நற்செய்தியாளரான யோவான் குறித்துப் பாடப்பெற்றதாகும்.  யோவானும் அவரது சகோதரர் யாக்கோபும் இயேசு கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று, தங்கள் மீன்பிடித் தொழிலைத் துறந்து அவரின் சீடர்களாகப் பின்சென்றனர் என்பதை, 

               தந்தை தாயெனும் இருவரை ஒருவித் தந்தொழிலின்

                வந்த யாவையும் தவிர்த்துச் செந்தாமரை வதனச்

                சந்தமரி திருவயிற்றிடை உதித்த எந்தைசேசு

                நந்துணை யெனயிரு வருஞ்சென்றார் 

என்னும் செய்யுளின் வாயிலாக நூலாசிரியர் கூறுகிறார்.

6. சுத்தமான சந்தோமை காதை

        ஆறாவது காதை சுத்தமான சந்தோமை காதை என்பதாகும். இக்காதை இந்தியாவிற்கு முதன் முதலாக வந்து நற்செய்தி அறிவித்து, ஆலயங்கள் கட்டிய புனித தோமையரைக் குறித்து விவரிக்கிறது. இக்காதை,

        சீர்பெற்ற புவியனைத்துஞ் சென்று

               சென்று சேசுநாயகனார் வேதம்

        பேர்பெற்று நின்றோங்க நிறுத்தியிறந்து

               அருஞ்சுவர்க்கம் பெற்ற தூயோன்

        ஏர்பெற்ற தவப்புனிதன் சந்தோமை

               சொற்காதை இனிது போற்றத்

        தார்பெற்ற மன்னர்குலக் கன்னிமரி

               தன்னிருதாள் தலைமேற் கொள்வாம்

 எனத்  தொடங்குகிறது. 

7. சுத்தமான பெரிய தீயோகு காதை

     ஏழாவதான சுத்தமான பெரிய தீயோகு காதையானது செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு (சந்தியாகு)  குறித்து விவரிக்கிறது.  இக்காதை, “நீர்கொண்ட கடலுலகிற் கிரீசித்து வேதத்தின் நெறிநிலையாய்ச் சார்ந்து, தார்கொண்ட சுவர்க்கமெய்தும் பெரிய தீயோகு கதை தமிழாற் செய்ய என்ற தொடக்கத்துடன் அவருடைய வரலாற்றை எடுத்துரைக்கிறது.

8. சுத்தமான பிலிப்பு காதை

      சுத்தமான பிலிப்பு காதையானது பிலிப்பு குறித்து எடுத்துரைக்கிறது. பெத்சாய்தாவில் பிறந்த பிலிப்பு இயேசுவின் சீடராக வாழ்ந்து இயேசுவைப் போன்றே சிலுவையில் அறையப்பட்டார்.  இதனை இக்காதை “பெருந்தவப் புனிதனான பிலிப்புவைப் பீடை செய்து வருந்திடக் குருசின்மீதில் அறைந்து என்று  குறிப்பிடுவதைக் காணலாம்.

9. சுத்தமான பொருத்தோலமே காதை

       ஒன்பதாவதுள்ள சுத்தமான பொருத்தோலமே காதையானது, இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான பர்தொலொமேயு பற்றி விவரிக்கிறது. நத்தானியேல் என்பார் பர்த்தலோமேயு என்றும் அழைக்கப்பட்டார். நற்செய்திப்பணிக்காகச் சென்ற இவர், தோலுரிக்கப்பட்டு மறைசாட்சியாக உயிர் துறந்தார் என்பதை,

              உள்ளங்காலில் நின்றுச்சி மட்டாகவே யுரித்தார்

                வெள்ளங்கால் குருதிப்புனல் மேனியிலே வொழுக

                நள்ளுங் காதலாரச் சேசுநாயகனை நண்ணுத்

                தெள்ளும் பொறிவாளனும் இறந்துவிண் சேர்ந்தான்

என ஆசிரியர் பாடுகிறார்.   

10. சுத்தமான மத்தேசு காதை

        பத்தாவது காதை பன்னிரு சீடர்களுள் ஒருவரும் நற்செய்தியாளருமான மத்தேசு  (நற்செய்தியாளர் மத்தேயு) பற்றிப் பாடுவதாக அமைந்துள்ளது. ஆசிரியர் மத்தேயுவைக் குறித்து,

    தொழுபத்தியினால் மிக்கதோர் மத்தீயசு தூயோன்

    வழுவற்றிடு அப்போசுத்துலு வாகினார் அதன்முன்னம்

    பழுதற்ற பிரானைத் தொழுபண்பின் மிகுமன்பாம்

    எழுபத்திரு சீஷர்க்குளும் ஒருவன் இவனாகும்

 

எனக் குறிப்பிடுகிறார்.

11. சுத்தமான சீமோன் சூதேயு காதை

     பதினொன்றாவதான சுத்தமான சீமோன் சூதேயு காதையானது, இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான கானானியனாகிய சீமோன் குறித்து எடுத்துரைக்கிறது. சீமோன் சூதேயு என்பவர் தீவிரவாதி சீமோன் என்றும் அழைக்கப்பட்டார்.  சூதேயு என்பது அவர் யூதேயாவைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

12. சுத்தமான அலெசு காதை

    பன்னிரெண்டாவது காதை சுத்தமான அலெசு காதை எனப்படும். காப்பிய ஆசிரியர் இக்காதைக்கானக் கதையை அன்டிரிக் அடிகளாரின் அடியார் வரலாறு நூலிலிருந்து எடுத்தாண்டுள்ளார். புனித அலெக்ஸ், அலெக்சியுஸ், ரோமையின் அலெக்சிஸ் அல்லது எடிஸ்ஸாவின் அலெக்சிஸ் என்று அழைக்கப்படுபவரைப் பற்றிப் பாடப்பட்டது சுத்தமான அலெசு காதை ஆகும்.  இவர் திருமணத்தை வெறுத்து, ஏழை மக்களுடன் பிச்சை எடுத்து வாழ்ந்ததாகவும், பின்னர் ரோமையில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.  இக்காதை,

               பூமன்னும் புதுநீர்வாவிப் புயல்மன்னும் கனகமாடம்

                ஆமன்னும் தொடையல்வீதி வளமல்கச் செல்வமோங்கும்

                காமன்னும் ரோமைநீதி அலெசுவின் கதைநடாத்தத்

                தேன்மன்னும் உலகம்போற்றுஞ் சேசுவைச் சிந்தைசெய்வாம்.

என்ற செய்யுளுடன் தொடங்குகிறது.

        ஏட்டுச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூல், நுண்பட (microfilm)   வடிவில் படியெடுக்கப்பட்டு, வத்திக்கான் நகரில் அமைந்துள்ள ‘வத்திக்கான் திருத்தூதர் நூலகத்தில் (Biblioteca Apostolica Vaticana)  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டுவரும் தனிநாயக அடிகள் தமிழியல்  நிறுவனத்தின் இயக்குநர்   அருள்தந்தை முனைவர் அமுதன் அடிகளார் உரோமைக்குச் சென்றிருந்தபோது, அதனைப் பெற்றுக்கொண்டு வந்து, காப்பியத்தைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  இக்காப்பியம் விரைவில் நூலாக வெளிவரும்.

 

முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

 

 

 

No comments:

Post a Comment