Sunday, 11 April 2021

ஒரு மாமனிதரின் மனக்குமுறல்கள்

  

        ருட்பணியாளர் ரிங்கல்தௌபேயின் (1770 - 1816)  இறைப்பணி பரிசுத்தமானது; தன்னலமற்றது. அவர் நமக்கு தியாகச் சுடராக விளங்கினார்.   அவரது வாழ்வினை முழுமையாகப் படிக்கும் சூழலில்,  குறிப்பாக அவர் எழுதிய தினக்குறிப்புகள்,  உடன்பிறந்தவர்களுக்கு எழுதிய கடிதங்கள்  போன்றவற்றின் வாயிலாக  அவருடைய உள்ளத்து உணர்வுகளை, மனக்குமுறல்களை, துன்பங்களை, சோர்புகளை, சோகங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அவர் நமக்காக தமது உறவுகளை, வாழ்க்கையை, அழகு கொழிக்கும் ஜெர்மன் நாட்டை விட்டு  விட்டு இங்கு வந்து  கடினமாக உழைத்தார்; தமது வாழ்வை நமக்காக அர்ப்பணம் செய்தார்.  இன்றைய கன்னியாகுமரிப் பேராயமும் தென் கேரளப் பேராயமும் கொல்லம் கொட்டாரக்கரா பேராயமும் அதற்குச் சான்றுகளாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

   ரிங்கல்தௌபேயின் அடிப்படை நோக்கம் இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி அறிவிப்பதாகும். ரிங்கல்தௌபே மொறேவியன் பிரிவைச் சார்ந்தவர். மொறேவியன் பிரிவினர் எங்கு சென்றாலும் பிறருக்கு நற்செய்தியை அறிவிப்பது அவர்களது தலையாக கடமையாகும்.   இவரது பெற்றோருக்கு இவரே மூத்த மகன். இவர் இயல்பாகவே  தமது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் பாசம் உடையவர். தமது சகோதரன் எர்னஸ்ட் தன்னுடன் இறைப்பணியாற்ற வரவேண்டும் என்று மிக்க ஆவலுடையவராகக் காணப்பட்டார். ரிங்கல்தௌபேயின் பெரும்பான்மையானக் கடிதங்கள் தமது தங்கையான அன்னாவுக்கு எழுதப்பட்டவைகளாகும். இக்கடிதங்களின் வாயிலாக அவரது மனக்குமுறல்கள் வெளிப்படுகின்றன.

        ரிங்கல்தௌபேயின் காலத்தில் தகவல் தொடர்பு என்பது மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது. அவரால் எழுதப்பட்ட கடிதங்கள் ஜெர்மனியைச் சென்றடைவதற்குச் சுமார் ஓர் ஆண்டு ஆகும். அதிலும் பல கடிதங்கள் தாயகம் சென்றடையவில்லை. பல கடிதங்கள் வங்காளத்தில் கைப்பற்றப்பட்டன. பலவிதமான ஏக்கங்களுடன் ரிங்கல்தௌபே தமது தங்கைக்கும் தம்பிக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர்கள் ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள்  ஒன்றும் இன்று நம் பார்வைக்கு இல்லை.    ரிங்கல்தௌபேயின் கடிதங்கள் மூலம், அன்னா எழுதிய கடிதங்களிலுள்ள செய்திகளை நம்மால் அறியமுடிகின்றது.

   ரிங்கல்தௌபே இறைப்பணியுடன் சமூகப்பணி மற்றும் கல்விப்பணியைத் திறம்பட செய்து வந்தாலும் அவர் முகத்தில் சோக உணர்வுகள் எப்போதும் படர்ந்திருந்தன. இதற்கு ஒரு சான்று அவரது படம். ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்து வந்த அவரிடம்,  எப்போதும் சோர்வு குடிகொண்டிருந்தது. அதற்குக் காரணம் குடும்ப உறுப்பினர்களை விட்டு வந்தது, தனிமைத் துயரம், உடல் நலமின்மை, பயணங்களின் போது ஏற்பட்ட துன்பங்கள், போதுமான ஆடையின்மை எனப் பலவற்றைக் கூறலாம். எனினும் அவரது மனக்குமுறல்கள் அவரது இறைப்பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

 

      இறைவனுக்காகத் துன்பப்படும்போது வாழ்வில் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். 1806 முதல் 1816 வரையிலான காலகட்டங்களில் கடினமாக உழைத்ததினால் உடல் பலவீனமானது. 'தனக்கு 40 வயதுதான் ஆகின்றது. ஆனால் மக்கள் தன்னைக் "கிழவன் ரிங்கல்தௌபே" என அழைக்கின்றனர்' என அங்கலாய்க்கின்றார். அவரது நெற்றியில் வயதுக்கு மீறிய சுருக்கங்கள் காணப்பட்டன; தலை முடி நரைக்கத் தொடங்கிவிட்டது.  கடிதங்களில் தன்னை அதிர்ஷ்டமில்லாத, பரிதாபத்திற்குரிய  பிரம்மச்சாரி என தன் மனக்குமுறல்களை வெளிக்காட்டுகிறார். ரிங்கல்தௌபே திருமணம் செய்து கொண்டு, தன் மனைவியோடு இணைந்து இறைப்பணி செய்யவும் தனக்கு உதவியாகவும் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவர் தேவை என்று பெரிதும் விரும்பியிருக்கிறார். அது நிறைவேறவில்லை. காரணம், போதுமான வருமானம் இல்லை. அவருக்குக் கிடைத்த குறைந்த ஊதியத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் விரக்தியோடு தனித்து வாழ்ந்தார்.  ஊதியம் முழுவதையும் இறைப்பணிக்காகவே செலவிட்டார். அவரது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் புத்தகம், சமுதாய அமைப்பு போன்றவை இல்லாமையால் மனம் மிகவும் வருந்தியது. ஐரோப்பிய நண்பர்களின் உறவும் தொடர்பும் இல்லாமல் தனிமையில் தவித்தார். தனிமை வாழ்க்கை அவருக்குக் கசப்பாகவே இருந்தது. 

        எளிய கந்தை ஆடைகள் அணிந்த திருச்சபை மக்களின் ஏழ்மையான நிலையினைக் குறித்து அவர் அடிக்கடி கவலை கொண்டார். அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவுவதன் மூலம் ஓரளவு மன அமைதி பெற்றார். எனினும் அவர்களின் நிரந்தரமான வாழ்வின் மேம்பாட்டுக்காக அவரால் உதவ முடியவில்லை. சபை மக்களின் துயரத்தைத் துடைப்பதற்காகப் பலரிடமும் உதவி பெற்று மக்களுக்கு உதவினார். பாளையங்கோட்டையிலிருந்த  லெப்டினெண்ட் கர்னல் ட்ரோடர் அவர்கள் ரிங்கல்தௌபேக்கு ஆடைகளையும் பிற உதவிகளையும் செய்து வந்தார். அவற்றையும் ஏழைகளுக்குக் கொடுப்பது அவரது வழக்கம்.

        ரிங்கல்தௌபேயின் தாய் மற்றும் சகோதரனின் இறப்பு அவருக்கு மிகுந்த மனக்கவலையை அளித்தது. குடும்பத்தின் தலைமகனாக இருந்தும் தன்னால் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லையே என்னும் மனக்குமுறல் அவரிடம் இயல்பாகவே காணப்பட்டது. தனது தங்கைக்குக் கடிதம் எழுதும்போது, " நீ இப்பொழுது நம் பெற்றோருடன் மேஜையில் ஒன்றாய் அமர்ந்திருப்பாய். நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். அவர்களுடைய முதிர் வயதில் நீயே அவர்களுக்கு ஆனந்தமும் ஆறுதலுமாக இருக்கிறாய்" எனவும், "எனது உள்ளான வேதனைகளை விவரித்துச் சொல்ல இயலாது. கர்த்தரின் வாக்குத்தத்தமும் இயேசு கிறிஸ்துவின் ஐக்கியமும் அவரது உண்மையும் இரக்கமும் இல்லாதிருந்தால் துயரத்தின் மிகுதியில் எனக்கு ஒரு சிறிது ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

        ரிங்கல்தௌபே பலவிதமான மனவருத்தங்களுடன் வாழ்ந்ததுடன் உடல் நலிவுற்றும் காணப்பட்டார். ஆதரவின்மையும் தனிமையும் அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்தது. ஆஸ்துமா நோய் அவரது உடலை வருத்தியது. உடல்நலத்தைக் கவனிக்க ஓர் உதவியும் இல்லாததால் அவருடைய ஆரோக்கியம் சீர்குலைந்தது. அவருக்கு சமுதாயத்திலிருந்து எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. அவர் மயிலாடியை விட்டு செல்வதற்கு அவரது உடல் நலமின்மையே அடிப்படைக் காரணமாகும். "முதுகை மறைக்க ஓர் அங்கியில்லாத ஜெர்மானிய மிஷனெரி" என இவரை மெக்கன்சி துரை குறிப்பிடுவதிலிருந்து ரிங்கல்தௌபேயின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

  ரிங்கல்தௌபே தமது மனக்குமுறல்களைச் சமுதாயத்தில் வெளிப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் உண்மையான, உத்தமமான, தன்னலமற்ற இறைப்பணியாகும். இத்தகைய உண்மையான இறைப்பணி செய்தமையால் அவருக்கு இயேசு கிறிஸ்து இறுதி நற்கருணையில் பயன்படுத்திய புனிதமானப் பாத்திரத்தின் (Holy Grail) காட்சி கிடைத்தது. இதிலிருந்து  இறைமகன் தம்முடன் இருப்பதாக ரிங்கல்தௌபே உறுதியுடன் விசுவாசித்தார். தமது மனக்குமுறல்களை ஜெர்மனியிலுள்ள உடன்பிறந்தவர்களிடம் வெளிப்படுத்தி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆயிரக்கணக்கான அலைகளைத் தாண்டி பயணித்த அருட்தோணியான ரிங்கல்தௌபே, ஏராளமான வலிகளைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு ஒளியாகத் திகழ்ந்தார். இத்தகைய ஒரு மாமனிதரை நாம் மறந்துவிடக் கூடாது.

யோ. ஞான சந்திர ஜாண்சன்


               

No comments:

Post a Comment