Friday, 9 April 2021

பேராயர் கால்டுவெல்லின் கீர்த்தனையும் ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்பும்

 


யர்லாந்து நாட்டில் பிறந்த, ஸ்காட்லாந்து நாட்டினரான பேராயர் இராபர்ட் கால்டுவெல், 1838 இல் சென்னைக்கு வந்து, 1841 முதல் 1891 வரை இடையன்குடியை மையமாகக் கொண்டு இறைப்பணியாற்றினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற பல நூல்களை எழுதிய கால்டுவெல், கிறித்தவக் கீர்த்தனை இயற்றுவதிலும் ஞானப்பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் வல்லவராக விளங்கினார்.

தமிழில் கிறித்தவக் கீர்த்தனைகளை  (Lyrics)  முதன் முதலாக இயற்றிய பெருமை வீரமாமுனிவரையும் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து ஞானப்பாடல்களை  (Hymns)  தமிழில் மொழிபெயர்த்த பெருமை அருள்திரு. பர்த்தலோமேயு சீகன்பால்குவையும் சாரும். வீரமாமுனிவர் இயற்றிய "ஜகநாதா குருபரநாதா திருஅருள்நாதா ஏசுபிரசாத நாதா" என்னும் கீர்த்தனை நமது பேராய வெளியீட்டில் 121, 122   ஆவது பாடல்களாக அமைந்துள்ளது. இக்கீர்த்தனை அருள்திரு.  J.S.  சான்ட்லர் தொகுத்து 1938 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஞானக்கீர்த்தனைகள் என்னும் நூலிலும் இரண்டு (88,89) பாடல்களாக இடம்பெற்றுள்ளது. இன்று வேதநாயக சாஸ்திரியார், ஜான் பால்மர் போன்ற கீர்த்தனைக் கவிஞர்கள் இயற்றிய சுமார் 1600 கீர்த்தனைகள் காணக்கிடைக்கின்றன. கீர்த்தனைக் கவிஞர்களுள் வீரமாமுனிவர், அருள்திரு. J.S. சாண்ட்லர், அருள்திரு. எட்வர்ட் வெப், பேராயர் கால்டுவெல் ஆகிய நால்வரும் மேலைநாட்டினர்.

கீர்த்தனை இயற்றல்

        இறைப்பணியிலும் மொழி ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த கால்டுவெல்,  கீர்த்தனை இயற்றுவதிலும் தேர்ச்சி உடையவராகக் காணப்பட்டார். கால்டுவெல் சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மேற்கொண்ட தம் நடைப் பயணத்தின்போது தஞ்சாவூருக்குச் சென்று, அங்கு வேதநாயக சாஸ்திரியாரிடம்  உரையாடினார். அவர்களது உரையாடலில் கீர்த்தனை முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த உரையாடலின் தாக்கத்தினாலும் கீர்த்தனைகளை மக்கள் ஆர்வமுடன் பாடிவருவதாலும் கால்டுவெல்     "ஏசையா பிளந்த ஆதிமலையே மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே" என்னும் கீர்த்தனையை இயற்றினார். இக்கீர்த்தனையை இன்றும் சபைகளில் பாடிவருகின்றனர். இக்கீர்த்தனைக்கு 1938 ஆம் ஆண்டுப் பதிப்பில்  Rock of Ages எனத் தலைப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்பு

        சீகன்பால்கு தாம் மொழிபெயர்த்த பாடல்களை தரங்கம்பாடியில் 1713 ஆம் ஆண்டு Book of Hymns set to Malabaric Music   என்னும் பாடல் தொகுப்பு நூலாக வெளியிட்டார். இவை ஞானப்பாட்டுகள் (Hymns) என்று வழங்கப்படுகின்றன. இந்நூலில் 48 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. சீகன்பால்குவைத் தொடர்ந்து சூல்சே, வால்தர், பிரேசின், பெப்ரீசியஸ் ஆகியோர் தமிழில் ஞானப்பாடல்களை மொழிபெயர்த்தனர். இவர்களுள் பெப்ரீசியசின் பணி குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து கால்டுவெல்லும் பாடல்களை மொழிபெயர்த்தார். அப்பாடல்கள் பின்வருமாறு:

1. ஏதேனில் ஆதிமணம் உண்டான நாளிலே

2. சபையின் அஸ்திபாரம்

3. கேள் ஜென்மித்த ராயர்க்கே

4. அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்தது

5. தூய தூய தூயா! திரியேக தேவா!

 

1. ஏதேனில் ஆதிமணம் உண்டான நாளிலே

கால்டுவெல் தமது மூத்த மகள் இசபெல்லாவின் திருமணத்தின் போது பாடுவதற்காக  "The voice that breathed o'er Eden"   என்னும் ஆங்கிலப் பாடலைத் தமிழில் "ஏதேனில் ஆதிமணம்  உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே" என மொழிபெயர்த்தார். இடையன்குடியில் 1868 பெப்ரவரி 19 ஆம் நாள் நடைபெற்ற இத்திருமணத்தில் இப்பாடல் தமிழில் முதன் முதலாகப் பாடப்பட்டது.  சபை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்தனர். இன்று இப்பாடல் திருமண ஆராதனையை அலங்கரிக்கும் பாடலாகத் திகழ்ந்து வருகிறது.

2. சபையின் அஸ்திபாரம்

The Church's one foundation என்னும் ஆங்கிலப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு சபையின் அஸ்திபாரம் என்னும் ஞானப்பாடலாகும். இடையன்குடியில்  32 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த ஆலயத்தை, கால்டுவெல் 1880 ஜூலை 6 ஆம் நாள் அர்ப்பணம் செய்து வைத்தார். அன்று நடைபெற்ற அர்ப்பண ஆராதனையில் பாடுவதற்காக,  கால்டுவெல்  The Church's one foundation என்னும் ஆங்கிலப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இப்பாடலை அவரது இளைய மகளான மேரி அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். அன்று முதல் இப்பாடல் திருநெல்வேலி SPG    சபைகளில் 1938 ஆம் ஆண்டு வரைப் பாடப்பட்டு வந்தது. அதன் பின்னர், அருள்திரு. தாமஸ் வாக்கர் அவர்களால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அப்பாடல் தற்பொழுதுப் பாடப்பட்டு வருகின்றது. இப் புதிய மொழிபெயர்ப்புப் பாடல் 1938 ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் மூலம் வெளிவந்த ஞானப்பாட்டுகள் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நூல் தொகுப்பின் குழு கூட்டுநராக அருள்திரு.  J.S.  சான்ட்லர்  செயலாற்றினார். இக்குழுவில் அருள்திரு. தாமஸ் வாக்கர் உறுப்பினராகப் பணியாற்றினார். கால்டுவெல் மற்றும் வாக்கர் ஆகிய இருவரது மொழிபெயர்ப்பிலும் ஆங்காங்கே சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இன்று கால்டுவெல் மொழிபெயர்த்த பாடல் வழக்கில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

பிற பாடல்கள்

கால்டுவெல் கிறிஸ்து பிறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய பண்டிகை நாட்களில் பாடுவதற்காக  Hark! The herald angels sing என்னும் பாடலை "கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே!" எனவும், The Strife is o'er, the battle done என்னும் பாடலை "அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, இப்போது போர் முடிந்தது" எனவும் மொழிபெயர்த்தார். இப்பாடல்களை கால்டுவெல்லின் மகள்களான இசபெல்லா, லூயிசா, மேரி ஆகியோர் பாடகர் குழுவினருக்குப் பாடுவதற்கு பயிற்சி அளித்தனர். இதன் விளைவாக தமிழில் இப்பாடல்கள் முதன் முதலாக இடையன்குடி ஆலயத்தில் கிறிஸ்மஸ், உயிர்த்தெழுதல் ஆகிய நாட்களில் மகிழ்வுடன் பாடப்பட்டன. மேலும்   Holy, holy, holy, Lord God Almighty  என்னும் பாடலை "தூய தூய தூயா, திரியேக தேவா, உமக்கே எந்நாளும் சங்கீதம் ஏறுமே" என மொழிபெயர்த்தார். இப்பாடல்களை சபையார்  பாடி  மகிழ்ந்தனர்.

கால்டுவெல் மொழிபெயர்த்த இப்பாடல்கள்  கிறித்தவ வழிபாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ளன. கால்டுவெல் இன்னும் பல பாடல்களை மொழிபெயர்த்திருக்கலாம்; கீர்த்தனைகளை இயற்றியிருக்கலாம். ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.


                                                                                              யோ. ஞான சந்திர ஜாண்சன்


No comments:

Post a Comment