இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே மயிலாடி வருகை நாள் - சிறப்புக் கட்டுரை
கால்டுவெல்லின் எழுத்துகளில் ரிங்கல்தௌபே
யோ. ஞான சந்திர ஜாண்சன்
அருள்திரு. வில்லியம்
தொபியாஸ் ரிங்கல்தௌபே, மயிலாடியை
விட்டுச் சென்று 25 ஆண்டுகள் கழிந்த பின்னர், பேராயர்
இராபர்ட் கால்டுவெல் 1841 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடியை
வந்தடைகின்றார். கால்டுவெல், நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணியாற்றி வந்த அருள்திரு. சார்லஸ்
மால்ட் அவர்களின் மகள் எலிசாவை, நாகர்கோவில் கஸ்பா ஆலயத்தில் 1844 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ரிங்கல்தௌபே போதகர் மற்றும் அவரது தியாகம் நிறைந்த இறைப்பணிகளை கால்டுவெல் முழுமையாக
அறிந்திருந்தமையால், அவர் மீது மிக்க
மதிப்பு கொண்டிருந்தார். கால்டுவெல் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் உட்பட சுமார் 20 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில்
குறிப்பிடத்தக்க ஒன்று, 'திருநெல்வேலி
மிஷனின் தொடக்ககால வரலாறு' என்னும் நூலாகும். இந்நூல் சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் அன் கோ மூலம் 1881 ஆம் ஆண்டு வெளிவந்தது. 356 பக்கங்களை உடைய இந்நூலின் முழுமையான பெயர், "Records
of the Early History of the Tinnevelly Mission of the Society for Promoting
Christian Knowledge and the Society for the Propagation of the Gospel in
Foreign Parts" என்பதாகும்.
"எதிர் காலத்தில் திருநெல்வேலி மிஷன் வரலாற்றை எழுதும் உள்நாட்டு
மக்களுக்குத் துணை செய்யும் விதத்தில், தற்போது கிடைக்கும் பல சுவையான நிகழ்வுகளை
உள்ளடக்கிய பழைய ஆவணங்களைச் சேகரித்துப் பேணிப் பாதுகாப்பதே இந்நூல் எழுதுவதற்கான
என்னுடைய நோக்கமாகும்" எனக் கால்டுவெல் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் பதினொரு இயல்களையும் மூன்று
பின்னிணைப்புகளையும் கொண்டது.
"திருநெல்வேலி மிஷனின்
தொடக்ககால வரலாறு" என்னும் இந்நூலின்
நான்காவது இயல் "ரிங்கல்தௌபேயின் காலம்" (Ringeltaube's Period)
என்பதாகும். இவ்வியல்
மொத்தம் 46 பக்கங்களை (123-168) உடையது. ரிங்கல்தௌபே
1806 முதல் 1809 வரை திருநெல்வேலிப் பகுதிகளில் செய்த ஊழியங்களை அவரது
நாட்குறிப்பின் அடிப்படையிலும் சில கடிதங்களின் மூலமும் கால்டுவெல் விவரிக்கிறார். கால்டுவெல்
வரலாற்றாராய்ச்சியில் ஆழங்கால் பட்டவராதலால், வரலாற்றுக்
குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து இவ்வியலை எழுதியுள்ளார். ரிங்கல்தௌபேயின்
பிறப்பைக் குறிப்பிட்டு, அவர் தரங்கம்பாடி வந்ததிலிருந்து இவ்வியல் தொடங்குகிறது. மயிலாடியிலிருந்து
மகராசன் வேதமாணிக்கம் சிதம்பரம் மற்றும் தஞ்சாவூர் சென்றதும் கோலாப் போதகர் மூலம்
ஞானஸ்நானம் பெற்றதும் வேதமாணிக்கம் இரண்டாவது முறை தஞ்சாவூர் சென்றபோது
தரங்கம்பாடி சென்று ரிங்கல்தௌபேயை நேரில் சந்தித்து மயிலாடிக்கு அழைத்ததும் சற்று
விரிவாக எழுதப்பட்டுள்ளது. மேலும் வேதமாணிக்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்ட ரிங்கல்தௌபே, கப்பலில்
தூத்துக்குடியை வந்தடைந்து,
அங்கிருந்து பாளையங்கோட்டை, நாசரேத், எருசலேம், குலசேகரப்பட்டிணம், மணப்பார், ஆத்திக்காடு, விஜயராமபுரம், சாத்தான்குளம், உவரி, கரைச்சுட்டுக்
கிராமங்கள், முதலூர், நாசரேத் போன்ற
இடங்களிலுள்ள கிறித்தவர்களைச் சந்தித்து அங்குள்ள ஆலயங்களில் அருளுரையாற்றியும்
அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தும் சிலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தும்
இறுதியில் ஏப்ரல் 25 ஆம் நாள் மயிலாடியை வந்தடைந்தார். மயிலாடியில் சில
நாட்கள் தங்கியிருந்து ஆராதனை நடத்திவிட்டு, அங்கு ஆலயம்
கட்ட முடியாத சூழலில் மீண்டும் திருநெல்வேலி சென்றார்.
ஒருவர் திருமுழுக்கு
பெறுவதற்கானத் தகுதிகளையும் உபதேசிமார்களுக்கானத் தகுதிகளையும் வரையறுத்து, தொலைநோக்குப்
பார்வையில் ரிங்கல்தௌபே திருநெல்வேலிப் பகுதிகளில் ஊழியம் செய்தார். அவர்
தங்குவதற்கு தருவை என்னும் இடத்தில் 1807 ஆம் ஆண்டு ஒரு வீட்டைக்
கட்டினார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்குளம் என்னும்
பகுதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. கானானூரில்
ஒரு நிலம் வாங்கியிருந்தார். திருநெல்வேலியிலிருந்து மயிலாடிக்கு 1809 ஆம் ஆண்டு வரும்போது, தருவையிலுள்ள
வீட்டையும் கானானூரிலுள்ள நிலத்தையும் SPCK யிடம் ஒப்படைத்தார். இதுபோன்ற செய்திகள் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன.
இவ்வியலின் இறுதியில் கால்டுவெல்
இரண்டு முக்கிய கருத்துகளை முன்வைக்கிறார். ஒன்று
ரிங்கல்தௌபேயின் தன்னலமற்ற சேவை; மற்றொன்று ரிங்கல்தௌபேயின் முடிவு. முதலாவதாக ஹக்
(Hough)
எழுதிய History of Christianity in India, (Vol. I, Page 285) என்னும் நூலில்,
ரிங்கல்தௌபே குறித்து எழுதப்பட்ட பகுதிகளைக் கால்டுவெல் சான்றாகத் தருகிறார். அப்பகுதி
பின்வருமாறு:
"ரிங்கல்தௌபேயின்
அசாதாரணச் செயல்பாடுகள் அவரது ஊழியங்களுக்குப் பொருத்தமற்றச் செயல்களாகச் சில
வேளைகளில் தோன்றின. ஆனால் அவர் திருவிதாங்கூரில் தன்னலம் துறந்த ஊழியங்களை நிறைவேற்றி
வந்தார். அவர் பணியில் இருந்த காலத்திலும் மிக எளிய வாழ்வை மேற்கொண்டார். மேலைநாட்டில் தயாரிக்கப்பட்ட
ஆடைகளை மிக அபூர்வமாக எப்போதாவது ஒருமுறை அணிவார். அவரது நண்பர் கர்னல் ட்ரோட்டர் (Colonel Trotter) கொடுத்த மேல் சட்டையை
(Coat) பாளையங்கோட்டைக்குச் செல்லும்போது மட்டுமே அணிவார். பிற
நேரங்களில் அவர் அதை அணிவதில்லை. அவரது ஏழை மக்களின் நிலையை நோக்கும் போது, தனது தனிப்பட்ட
தேவைகள் குறித்த எண்ணங்கள் எதுவும் அவரது மனதில் தோன்றுவதே இல்லை. எளிமையாக, மன நிறைவோடு தனி
மனிதராக வாழ்ந்த அவர், ஏழை மக்களின் நடுவில் வாழ்ந்த போது, அவர்களைப் போலவே
வாழ்ந்து,
திடீரென்று அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். ஏன் அவ்வாறு சென்றார்
என்பது யாருக்குமே தெரியாது. அவரது வித்தியாசமான சிந்தனை கிழக்கே இதைவிடச் சிறந்த
பணி உள்ளது என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். சென்னையில் இருக்கும் போது எங்கு
தங்கியிருந்தாலும் அருள்திரு. மார்மாடியூக் தாம்சனைச் (Marmaduke
Thompson) சந்திப்பார். அவருடன் ஒரு மாலை நேரத்தைச் செலவிட்டார்.
அப்பொழுது மாறுபட்ட விதத்தில் உடை அணிந்திருந்தார். அப்பொழுதும் அவர் மேல் சட்டையை
அணிந்திருக்கவில்லை. கடல் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையிலும் அதே உடையில்தான்
இருந்தார். அவர் தலையில் உள்ளூரில் செய்யப்பட்ட
வைக்கோல் தொப்பியை வைத்திருந்தார். அவரது தோற்றம் முரட்டுத் தனமாக இருந்த
போதிலும் அருள்திரு. தாம்சனுடன் அவர்
பேசிய உரையாடல் சுவை மிகுந்ததாகக் காணப்பட்டது. அவரது பயணத்திற்குத் தாம்சன் உதவி செய்தார்.
அனுதாபத்திற்குரிய ரிங்கல்தௌபே எப்படித் தொடங்கினாரோ அப்படியே முடித்துக்
கொண்டார். அவரது மிஷனெரி ஊழியத்தை மேகம் மூடிக் கொண்டது. அவர்
எங்கு சென்றார் என்பது யாருக்குமே தெரியாது. அதற்குப் பின்னர் அவரைக் குறித்த
செய்தி எதையும் கேள்விப்படவும் இல்லை. தென்திருவிதாங்கூரின் மேல் சிறிது ஒளியைப்
பரவச் செய்திருந்தார். அவருக்குப் பின், அப்பகுதிக்கு ஊழியம் செய்யச் சென்ற
மிஷனெரிகள், அவரது
சீடர்களில் பலர், ஜீவ பாதையில் நடப்பதைக் கண்டனர்."
இரண்டாவதாக கால்டுவெல் குறிப்பிட்டிருப்பது, ரிங்கல்தௌபேயின் முடிவு பற்றியது. ரிங்கல்தௌபே 1816 ஆம் ஆண்டு மயிலாடியிலிருந்து கொல்லம் சென்று, பின்னர் கப்பல் மூலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கும் பின்னர் அங்கிருந்து இலங்கைக்கும் பின்னர் அங்கிருந்து மலாக்காவிற்கும் சென்றார். அங்கிருந்து ரிங்கல்தௌபே பட்டேவியாவிற்குச் செல்லும் வழியில் கடற் பயணத்தின் போது இறந்தார் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முடிபு. ஆனால் கால்டுவெல், "ரிங்கல்தௌபே மலேசிய தீபகற்பத்தின் உட்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்திய ஊழியங்களைத் துறந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது போர்னியோ (Borneo) என்னும் இடத்திலிருந்த ஒரு டச்சு அமைச்சரின் கடிதமாகும். கல்லூரியில் படிக்கும் நாட்களில் இருவருக்கும் நட்பு இருந்தது இதற்கு ஓர் ஆதாரமாகும். மோலுக்காஸ் (Moluccas) என்னும் பகுதியில் அந்நாட்டு மக்கள் மத்தியில் தொடங்கப்பட்ட ஒரு சமய இயக்கம் குறித்து அவர் விவரித்திருந்த செய்திகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்" என ரிங்கல்தௌபேயின் முடிவு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
கால்டுவெல் இந்த
இயலினைப் பின்வரும் கருத்துடன் நிறைவு செய்கிறார்:
"இந்தியாவின் எந்தப் பகுதியில் அவர் உழைத்தாரோ, அந்தப் பகுதியின் மக்கள் இவரை மிகவுயர்வாக மதித்துப் போற்றினர். அவர்தம் இயல்பு கடந்த பண்புகளை, எல்லை கடந்து மகிழ்வுற்ற அவர் களப்பணி செய்த திருவிதாங்கூர் பகுதி கிறித்தவரும், அம்மக்களின் கிறித்தவரல்லாத கல்வியறிவற்ற உறவினரும், அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தமையால் அவரிடம் அன்பு செலுத்தி, அவர் உடலுடனேயே விண்ணேற்றம் சென்றார் என்று தங்களுக்குள்ளே வியப்புடன் நம்பலாயினர்."
கட்டுரையாளர்
மயிலாடி சேகர சபையின் அங்கத்தினர்; சென்னைக் கிறித்தவக் கல்லூரித்
தமிழ்த்துறையின் மேனாள் தலைவர்.
No comments:
Post a Comment