Sunday, 11 April 2021

ரிங்கல்தௌபே போதகரின் கடற் பயணம்

 

 

விசுவாசிகளின் தகப்பன் என அழைக்கப்படும் ஆபிரகாம் வாழ்ந்த  'ஊர்' என்னும் ஊரில் அகழ்வாய்வு செய்த போது, அங்கு சேர நாட்டிலுள்ள தேக்கு மரத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழகம் பிற நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு இது ஒரு தொன்மையான சான்று. கி.பி. 45 இல் 'ஹிப்பலோ' என்பவர் கடலில் வீசும் பருவக் காற்றுகளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வெளியிட்டமையால், பருவக்காற்றுகளை அடிப்படையாகக் கொண்டு கடற் பயணங்களும் வியாபாரங்களும் அதிகமாயின. இதன் பயனாக இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் கி.பி. 52 இல் தமிழகம் வந்தார். 1498 இல் வாஸ்கோட காமா இந்தியாவிற்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடித்ததன் விளைவாக, இயேசு சபைத் துறவியரும் அதனைத் தொடர்ந்து சீர்திருத்தத் திருச்சபை இறைத் தொண்டர்களும் தமிழகம் வந்தனர். தமிழகம் வந்த  சீர்திருத்தத் திருச்சபையின் முதல் இறைத்தொண்டர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வருகை புரிந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிங்கல்தௌபே தரங்கம்பாடி வந்தடைந்தார்.

ரிங்கல்தௌபே போதகர் பாய்மரக் கப்பலில் பயணம் செய்து வந்தார். பருவக் காற்றை ஆதாரமாகக் கொண்டு பயணம் செய்யும் கப்பல் பாய்மரக் கப்பல் என அழைக்கப்படுகின்றது. இக்கப்பலில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். அமெரிக்கா 1819 இல் முதன்முதலாக நீராவிக் கப்பலைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தொடங்கியது. 1866 ஆம் ஆண்டிற்குப் பின்னர்  தொலைதூரத்திற்கு நீராவிக் கப்பல் இயக்கப்பட்டது.  கடல் பயணத்தின்போது Sea Sick எனப்படும் கடல் நோய் ஏற்படும். அதாவது கப்பலின் அசைவினால் பயணிக்கு தலை சுற்றி வாந்தி ஏற்படும். வாந்தி தொடர்ந்து வந்து இறுதியில் இரத்தம் வரும். எனினும் உணவு உண்ணாமல் இருக்கக் கூடாது. சில நாட்களில் உடல், கடல் பயணத்திற்குப் பழகி விடுவதால் நோய் சரியாகிவிடும். இத்தகைய துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு ரிங்கல்தௌபே கடற் பயணம் செய்தார். அவரது கடற் பயணம் குறித்த செய்திகள் அவரது கடிதங்களின் மூலம் தெரியலாகின்றன. அவருடைய கடற் பயணங்கள் வருமாறு:

1.இலண்டனிலிருந்து கொல்கத்தா

2.கொல்கத்தாவிலிருந்து இலண்டன்

3.டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடி

4.கொல்லத்திலிருந்து சென்னை

5.சென்னையிலிருந்து கொழும்பு

6. கொழும்பிலிருந்து மலாக்கா

7.மலாக்காவிலிருந்து பட்டேவியா

முதல் கடற் பயணம்

ரிங்கல்தௌபே போதகர் இலண்டனிலிருந்து கொல்கத்தா சென்றடைய நான்கு மாதங்கள் ஆயின. இந்த முதல் கடற் பயணம் குறித்த விபரங்கள் அதிக அளவில் தெரியவில்லை. ஆனால் முதன் முதலாகக் கடற் பயணம் செய்தமையால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனினும் பயணத்தின் போது நீக்ரோ சிறுவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்ததுடன் நற்செய்தியையும் அறிவித்தார். ரிங்கல்தௌபே பயணம் செய்த கப்பலின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கப்பலிலிருந்த பயணிகள் 'ஸ்கர்வி' என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இறக்கும் நிலையிலிருந்த ஒருவருக்கு ரிங்கல்தௌபே இறைச்செய்தியை வழங்கினார். இந்த பயணத்தின்போது தமது தங்கைக்கு ஒரு கடிதம் எழுதினார். கொல்கத்தா வந்தடைந்த ரிங்கல்தௌபே இராஜ்மகால் பகுதியில் இறைப்பணியாற்றினார். ஓராண்டு பணியாற்றிய ரிங்கல்தௌபே பலவிதமான துன்பங்களால் அவதிப்பட்டு மீண்டும் இலண்டனுக்குப் பயணமானார்.

டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடி

        ரிங்கல்தௌபே இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு 'கிறௌன் பிரின்சஸ் மேரியா' என்னும் கப்பலில் 1804 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் டென்மார்க்கிலுள்ள கோபன்கேகன் என்னும் துறைமுகத்திலிருந்து புறப்பட்டார். டேனிஷ் நாட்டிற்குச் சொந்தமான இக்கப்பல் அடிமை வாணிபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. அவர் எட்டு மாதங்கள் பயணம் செய்து 1804 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் தரங்கம்பாடி வந்தடைந்தார். எட்டுமாத இக்கடற் பயணம் குறித்து, அவர் நன்னம்பிக்கை முனையிலிருந்தும் நிக்கோபார் தீவிலிருந்தும் எழுதிய கடிதங்கள் மூலம் விபரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கப்பலில் ரிங்கல்தௌபேயுடன் அருள்திருவாளர்கள் டிஸ்கிரான்கேஸ், ஜார்ஜ் கிரான், வோஸ், எப்ஹார்ட் ஆகிய இறைத்தொண்டர்களும் பயணித்தனர். ரிங்கல்தௌபே கடற் பயணத்தின்போது போர்ச்சுக்கீசிய மொழியைக் கற்றுக் கொண்டார்.

அடைந்த துன்பங்கள்

        ரிங்கல்தௌபே இந்த கடற் பயணத்தின்போது பல துன்பங்களை எதிர் கொண்டார். குறிப்பாக, கடல் சீற்றத்தின் காரணமாக பயணத்தில் மிகுந்த தொல்லைகள் ஏற்பட்டன. ரிங்கல்தௌபே பயணம் செய்த கப்பல் ஐரிஸ் கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர் காற்று பலமாக வீசியதால், கப்பலில் பயணம் செய்த அனைவரும் துன்பத்திற்குள்ளாயினர். பதினைந்து வாரப் பயணத்திற்குப் பின்னர், கப்பல்  சைமன் விரிகுடாவைச் (சைமன் டவுன், தென் ஆப்பிரிக்கா) சென்றடைந்தது. அங்கு ஒரு மாத காலம் கப்பல் நிறுத்தப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டு, உணவு சேகரிக்கப்பட்டது. மேலும் நன்னம்பிக்கை முனைக்கும் பிரான்ஸ் ஐஸ்சில் மெரிடியனுக்கும் நடுவில் புயல் ஏற்பட்டது. பின்னர்  சுமத்திரா தீவின் அருகில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. புயல் கடுமையாக வீசியது. கடல் அலைகளின் நுரை கப்பலின் நடுத்தூண் உச்சிக்கு வீசி எறியப்பட்டது. உயரமான அலை மற்றும் கடல் அலைகளின் சுழற்சியால் மனிதர்களும் கப்பலிலிருந்த பொருட்களும் ஒரு மூலைக்கு அடித்துச் செல்லப்பட்டனர். நிக்கோபார் தீவுக்கு செல்ல நினைத்த கப்பல், அகன்ற அலை, எதிர் நீரோட்டம், எதிர் காற்று ஆகியவற்றால் மலேயக் கடற்கரையைச் சென்றடைந்தது. இவ்வாறு கப்பலில் பயணம் செய்த அனைவரும் இத்தகைய இயற்கைச் சீற்றங்களால் அச்சமும் பாடுகளும் அடைந்தனர்.

சந்தித்த மனிதர்கள்

       கப்பல் சைமன் விரிகுடாவில் நிறுத்தியிருந்த பொழுது, ரிங்கல்தௌபே சற்று தொலைவிலுள்ள நன்னம்பிக்கை முனைக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு அவர் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினார். குறிப்பாக அருட்திருவாளர்கள் ரெய்ட், கெஸ்டர் என்னும் இரண்டு இறைத்தொண்டர்களைச் சந்தித்தார். ஒரு கருப்பின மனிதனின் உதவியுடன்  ஆற்றைக் கடந்தார். அதற்காக அவனுக்கு ஒரு ஷில்லிங் கொடுத்தார். அவனுடன் செல்லும்போது அவனுக்கு நற்செய்தியினை அறிவித்தார். அதே நாளில் மற்றுமொரு கருப்பின மனிதனைச் சந்தித்தார். அவனுக்கும் நற்செய்தியினை அறிவித்தார். மட்டுமன்றி ஆற்றின் மறுகரையில் ஒரு டச்சுக்காரனையும் ஜெர்மானியனையும் சந்தித்தார். அவர்களிடமும் நற்செய்தியினை அறிவித்தார். மற்றொருநாள் ரிங்கல்தௌபே ஓர் இறைத்தொண்டரின் மனைவியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அப்பெண்மணி தமது வாழ்க்கையின் அனுபவங்களைச் சாட்சியாகக் கூறியதுடன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே சமாதானம் கிடைக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் மொறேவியர்கள் பலரையும் சந்தித்தார்.

பழங்குடி மக்களின் வாழ்வு நிலைகள்

      ரிங்கல்தௌபே நன்னம்பிக்கை முனைப் பகுதிகளில் சுமார் ஒரு மாதம் சுற்றித் திரியும் நேரங்களில், அங்குள்ள மக்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். கப்பல் சுமத்திரா தீவைக் கடந்து செல்லும் போது, மலைகள் நிறைந்த பகுதியில் மலேய இசுலாமியர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தின் உட்புறப் பகுதிகளில் பசிபிக் தீவுகளில் காணப்படும் பழங்குடிகள் போன்ற மக்கள் வாழ்ந்தனர். நிக்கோபாரின் கிழக்குப் பகுதியில் காணப்பட்ட நாவ்கௌரி என்னும் இடத்தில் கப்பல் சில நாட்கள் நின்றது. அப்போது அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து அம்மக்களின் வாழ்க்கை நிலைகளை ரிங்கல்தௌபே தெரிந்து கொண்டார்.

அங்குள்ள மக்கள் இடையில் நீல நிறத் துண்டும் தலையில் பச்சை இலைகளும் தவிர அவர்கள் உடலில் வேறு எதையும் அணிந்திருக்கவில்லை. அவர்கள் கைகளில் வெள்ளி வளையல்களும் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருந்தனர். அசாதாரணமான அளவிற்கு அகன்ற மூக்கும் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு வெற்றிலைக்கறை நிறைந்த வாயும் உடையவர்களாகக் காணப்பட்டனர். அவர்களின் வீடுகள் மூங்கிலால் அலங்கரிக்கப்பட்டு, அதன் இலைகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. மாலை நேரத்தில் மீனவர்கள் கட்டு மரங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

மூங்கில் குழாய்களில் குடிப்பதற்குப் பனை மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள் கொடுத்தனர். அந்த மக்கள் இரும்பு ஆயுதங்களோடு மீன் எலும்புகளால் செய்யப்பட்ட ஈட்டிகளையும் வைத்திருந்தனர். வீடுகளின் அருகில் தேங்காய் ஓடுகளும் கடல் சிப்பிகளும் குவியலாகக் கிடந்தன. எங்கும் பன்றிகள் திரிந்து கொண்டிருந்தன. பெரிய கூடுகளில் பறவைகள் அடைக்கப்பட்டு வீடுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன. வீடுகளின் உட்புறம் மிகவும் சுத்தமாகக் காணப்பட்டது. சுவரில் ஆயுதங்கள், நீண்ட ஈட்டிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. நீண்ட மரத் துண்டுகளைத் தலையணைகளாகப் பயன்படுத்தினர். வேக வைக்கப்பட்ட சேனைக் கிழங்கு, பல்வேறு கிழங்கு வகைகள், பல வகையான இறைச்சிகள் ஆகியவையே அவர்கள் உண்ணும் உணவு வகைகளாகும்.

     கிராமத்தின் பின்பகுதியில் இறந்தோரைப் புதைக்கும் இடம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளில் கொக்கோ மரங்கள் நிறைந்திருந்தன. அங்கு காட்டுப் புறாக்கள், பச்சை நிறப் பறவைகள், பெரிய சாம்பல் நிறப் பறவைகள், குக்கூ பறவைகள், கிளிகள், மைனாக்கள் ஆகிய பறவைகளும் எருமை மாடுகள், பன்றிகள், நாய்கள் போன்ற விலங்குகளும் காணப்பட்டன. பெரிய இலைகளில் பழுப்பு, நீல நிறங்களில் ஓவியம் வரைந்திருந்தனர். அதில் படகுகள், மனிதர்கள், மீன்கள், பாறைகள், மரங்கள் ஆகியன வரையப்பட்டிருந்தன. கப்பல் பயணிகளிடம் தீவிலுள்ள பல பொருட்களை விற்றனர். இயற்கை அழகு மிக்க இத்தீவில் ரிங்கல்தௌபே மகிழ்வுடன் காணப்பட்டார். ரிங்கல்தௌபே கடற் பயணத்தின்போது இறைப்பணியாற்றியதுடன் தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அப்பகுதிகளின் இயற்கையழகையும் கண்டு இரசித்தார்.

இறுதிக் கடற் பயணம்

   பத்து ஆண்டுகள் மயிலாடியிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் இறைப்பணியாற்றிய ரிங்கல்தௌபே, தாயகம் செல்ல விரும்பி, கொல்லத்திலிருந்து சென்னைக்கு கடலில் பயணத்தை மேற்கொண்டார். பின்னர் சென்னையிலிருந்து கொழும்புவிற்கும் அங்கிருந்து மலாக்காவிற்கும் இறுதியாக அங்கிருந்து பட்டேவியாவிற்கும் பயணம் செய்தார். இப்பயணம் அவருக்குத் துன்பம் நிறைந்த பயணமாகவே இருந்தது. உடலில் நோய், மனதில் குடும்பத்தாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், போதிய பணமின்மை, உடையின்மை, சோர்வு ஆகியவற்றால் மனந்தளர்ந்து காணப்பட்டார். இந்த கடற் பயணமே அவரது இறுதிப் பயணமாக அமைந்தது. ஆம், கடற் பயணத்தின்போது இறந்தமையால் கடலில் அடக்கம் பண்ணப்பட்டார்.

    இவ்வாறாக, தமிழகம் வந்த சீர்திருத்தத் திருச்சபைத் தொண்டராம் ரிங்கல்தௌபேயின் கடற் பயணம் பற்றி இதுகாறும் விளக்கப்பட்ட செய்திகள், எப்பாடுபட்டேனும் எத்தியாகம் செய்தேனும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் வழியாக அக்காலத் தமிழகத்தில் வாழ்ந்த மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் தியாக வாழ்வையும் வெளிப்படுத்துகின்றன. அத்தோடு, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போக்குவரத்து முறைகள், வணிகத் தொடர்புகள், பழங்குடி மக்களின் வாழ்வு நிலைகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைக்கும் ஆவணமாகவும் இஃது அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

                                                                                             யோ. ஞான சந்திர ஜாண்சன்

No comments:

Post a Comment