Wednesday, 6 August 2014
கிறிஸ்தாயனம்
கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883) அவர்களால் இயற்றப்பட்டக் கிறித்தவக் காப்பியம் “கிறிஸ்தாயனம்” என்பதாகும். இந்நூல் 1865 இல் கிறித்தவ கலாவிருத்திச் சங்கத்தாருக்காக நாகர்கோவில் இலண்டன் மிஷன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு முதல் பதிப்பாக வெளியானது. இந்நூலின் இரண்டு மற்றும் மூன்றாம் பதிப்புகள் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தின் வழியாக 2008 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளது. ஜான் பால்மர் மயிலாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அருள்திரு. ரிங்கல்தௌபே அவர்களால் கிறித்தவராகி, ஜான் பால்மர் என ஞானஸ்நானம் பெற்றார். இவர் 61 கிறித்தவக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவர் தென் திருவிதாங்கூரின் முதல் கிறித்தவரான மகராசன் வேதமாணிக்கம் அவர்களின் நெருங்கிய உறவினர்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதால்
இந்நூலிற்கு கிறிஸ்தாயனம் என
ஆசிரியர் பெயரிட்டுள்ளார். கிறிஸ்தாயனம் பாயிரம், தெய்வ வணக்கம், நூல் வரலாறு என்னும் பகுதிகளுடன் தொடங்குகிறது.
இக்காப்பியம் பால காண்டம், கிரியா
காண்டம், அவஸ்தா காண்டம், ஆரோகண காண்டம் என்னும் நான்கு காண்டங்களைக் கொண்டு 842 விருத்தப் பாக்களால் ஆனது. ஒவ்வொரு காண்டமும் பல்வேறு உட்தலைப்புகளைக்
கொண்டது. தெய்வ வணக்கம் என்னும் பகுதியில் பிதா, சுதன், பரிசுத்த
ஆவி என்னும் திரியேகக் கடவுளைத் தனித்தனிப் பாடல்களின் மூலம் வணங்குகிறார். தெய்வ
வணக்கம் என்னும் பகுதியின் இறுதியில் நூல் வரலாறு
இடம் பெற்றுள்ளது.
பால காண்டம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல்
அவரது பன்னிரண்டு வயது வரையுள்ள செய்திகளைத் தருகிறது. பால காண்டம் ஒன்பது தலைப்புகளில் 55 பாடல்களைக் கொண்டுள்ளது. இயேசு கிறிஸ்து செய்த
அற்புதங்களை விளக்கும் கிரியா காண்டத்தில், இயேசு
கிறிஸ்து தன் சீடர்களைத் தெரிந்து கொண்டது முதல் பத்து ராத்தல் திரவியம் பெற்ற
ஊழியக்காரரைக் குறித்து சொன்ன உவமை வரையிலான செய்திகள் இடம் பெற்றுள்ளன. கிரியா
காண்டத்தில் 50 உட்தலைப்புகளில் 426 செய்யுட்கள் உள்ளன.
இயேசு கிறிஸ்து பட்ட பாடுகளை
விவரிக்கும் அவஸ்தா காண்டத்தில், மரியாள்
இயேசு நாதருக்குப் பரிமளத் தைலம் பூசுவதிலிருந்து அவர் சிலுவையில் அறையுண்டு
மரித்து அடக்கம் பண்ணப்பட்டது வரையுள்ள செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவஸ்தா
காண்டம் 24 உட்தலைப்புகளில் 249 செய்யுட்கள் கொண்டது.
அவஸ்தா காண்டம் 24 உட்தலைப்புகளுடன் 249 செய்யுட்களை உடையது. இக்காண்டம் ஆதித்த வாரம், சோம வாரம், குச வாரம், புத வாரம், குரு வாரம், சுக்கிர வாரம், மந்த வாரம் என ஏழு வாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
ஆரோகண காண்டத்தில் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்தது முதல் அவரது இரண்டாம் வருகை
வரையுள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆரோகண காண்டம் 11 உட்தலைப்புகளில்
106 செய்யுட்கள்
இடம்பெற்றுள்ளன.
கம்பராமாயணத்தைப் பிற்பற்றி இயேசு கிறிஸ்துவின் இளமைப் பருவத்தை விவரிக்கும்
முதல் காண்டத்திற்குப் பால காண்டம் எனவும், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை விளக்கும்
பகுதிக்கு கிரியா காண்டம் எனவும், இயேசு
கிறிஸ்து பட்ட பாடுகளை விவரிக்கும் பகுதிக்கு
அவஸ்தா காண்டம் (அவஸ்தை-துன்பம்) எனவும், இசைப்பாட்டின் ஏறுமுகக் குறிப்பினை நினைவில் நிறுத்தி
அவர் வானுலகம் சென்ற செய்திகளை விவரிக்கும் பகுதிக்கு ஆரோகண காண்டம் எனவும் பெயர்
சூட்டியுள்ளார்.
கிறிஸ்தாயனத்தில் ஆசிரியரின் தடையற்ற
கவிதையோட்டத்தைக் காணமுடிகிறது. கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக, எவ்வித வர்ணமுமின்றி கவிதை நடையில் கொடுப்பதே இவரது
இலக்கியக் கொள்கை.
யோ. ஞான சந்திர ஜாண்சன்



