Sunday 11 April 2021

ஒரு மாமனிதரின் மனக்குமுறல்கள்

 

ஒரு மாமனிதரின் மனக்குமுறல்கள்

 

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

        ருட்பணியாளர் ரிங்கல்தௌபேயின் (1770 - 1816)  இறைப்பணி பரிசுத்தமானது; தன்னலமற்றது. அவர் நமக்கு தியாகச் சுடராக விளங்கினார்.   அவரது வாழ்வினை முழுமையாகப் படிக்கும் சூழலில்,  குறிப்பாக அவர் எழுதிய தினக்குறிப்புகள்,  உடன்பிறந்தவர்களுக்கு எழுதிய கடிதங்கள்  போன்றவற்றின் வாயிலாக  அவருடைய உள்ளத்து உணர்வுகளை, மனக்குமுறல்களை, துன்பங்களை, சோர்புகளை, சோகங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அவர் நமக்காக தமது உறவுகளை, வாழ்க்கையை, அழகு கொழிக்கும் ஜெர்மன் நாட்டை விட்டு  விட்டு இங்கு வந்து  கடினமாக உழைத்தார்; தமது வாழ்வை நமக்காக அர்ப்பணம் செய்தார்.  இன்றைய கன்னியாகுமரிப் பேராயமும் தென் கேரளப் பேராயமும் கொல்லம் கொட்டாரக்கரா பேராயமும் அதற்குச் சான்றுகளாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

        ரிங்கல்தௌபேயின் அடிப்படை நோக்கம் இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி அறிவிப்பதாகும். ரிங்கல்தௌபே மொறேவியன் பிரிவைச் சார்ந்தவர். மொறேவியன் பிரிவினர் எங்கு சென்றாலும் பிறருக்கு நற்செய்தியை அறிவிப்பது அவர்களது தலையாக கடமையாகும்.   இவரது பெற்றோருக்கு இவரே மூத்த மகன். இவர் இயல்பாகவே  தமது குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் பாசம் உடையவர். தமது சகோதரன் எர்னஸ்ட் தன்னுடன் இறைப்பணியாற்ற வரவேண்டும் என்று மிக்க ஆவலுடையவராகக் காணப்பட்டார். ரிங்கல்தௌபேயின் பெரும்பான்மையானக் கடிதங்கள் தமது தங்கையான அன்னாவுக்கு எழுதப்பட்டவைகளாகும். இக்கடிதங்களின் வாயிலாக அவரது மனக்குமுறல்கள் வெளிப்படுகின்றன.

        ரிங்கல்தௌபேயின் காலத்தில் தகவல் தொடர்பு என்பது மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது. அவரால் எழுதப்பட்ட கடிதங்கள் ஜெர்மனியைச் சென்றடைவதற்குச் சுமார் ஓர் ஆண்டு ஆகும். அதிலும் பல கடிதங்கள் தாயகம் சென்றடையவில்லை. பல கடிதங்கள் வங்காளத்தில் கைப்பற்றப்பட்டன. பலவிதமான ஏக்கங்களுடன் ரிங்கல்தௌபே தமது தங்கைக்கும் தம்பிக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர்கள் ஜெர்மனியிலிருந்து எழுதிய கடிதங்கள்  ஒன்றும் இன்று நம் பார்வைக்கு இல்லை.    ரிங்கல்தௌபேயின் கடிதங்கள் மூலம், அன்னா எழுதிய கடிதங்களிலுள்ள செய்திகளை நம்மால் அறியமுடிகின்றது.

   ரிங்கல்தௌபே இறைப்பணியுடன் சமூகப்பணி மற்றும் கல்விப்பணியைத் திறம்பட செய்து வந்தாலும் அவர் முகத்தில் சோக உணர்வுகள் எப்போதும் படர்ந்திருந்தன. இதற்கு ஒரு சான்று அவரது படம். ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்து வந்த அவரிடம்,  எப்போதும் சோர்வு குடிகொண்டிருந்தது. அதற்குக் காரணம் குடும்ப உறுப்பினர்களை விட்டு வந்தது, தனிமைத் துயரம், உடல் நலமின்மை, பயணங்களின் போது ஏற்பட்ட துன்பங்கள், போதுமான ஆடையின்மை எனப் பலவற்றைக் கூறலாம். எனினும் அவரது மனக்குமுறல்கள் அவரது இறைப்பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

      இறைவனுக்காகத் துன்பப்படும்போது வாழ்வில் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். 1806 முதல் 1816 வரையிலான காலகட்டங்களில் கடினமாக உழைத்ததினால் உடல் பலவீனமானது. 'தனக்கு 40 வயதுதான் ஆகின்றது. ஆனால் மக்கள் தன்னைக் "கிழவன் ரிங்கல்தௌபே" என அழைக்கின்றனர்' என அங்கலாய்க்கின்றார். அவரது நெற்றியில் வயதுக்கு மீறிய சுருக்கங்கள் காணப்பட்டன; தலை முடி நரைக்கத் தொடங்கிவிட்டது.  கடிதங்களில் தன்னை அதிர்ஷ்டமில்லாத, பரிதாபத்திற்குரிய  பிரம்மச்சாரி என தன் மனக்குமுறல்களை வெளிக்காட்டுகிறார். ரிங்கல்தௌபே திருமணம் செய்து கொண்டு, தன் மனைவியோடு இணைந்து இறைப்பணி செய்யவும் தனக்கு உதவியாகவும் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவர் தேவை என்று பெரிதும் விரும்பியிருக்கிறார். அது நிறைவேறவில்லை. காரணம், போதுமான வருமானம் இல்லை. அவருக்குக் கிடைத்த குறைந்த ஊதியத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் விரக்தியோடு தனித்து வாழ்ந்தார்.  ஊதியம் முழுவதையும் இறைப்பணிக்காகவே செலவிட்டார். அவரது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் புத்தகம், சமுதாய அமைப்பு போன்றவை இல்லாமையால் மனம் மிகவும் வருந்தியது. ஐரோப்பிய நண்பர்களின் உறவும் தொடர்பும் இல்லாமல் தனிமையில் தவித்தார். தனிமை வாழ்க்கை அவருக்குக் கசப்பாகவே இருந்தது. 

        எளிய கந்தை ஆடைகள் அணிந்த திருச்சபை மக்களின் ஏழ்மையான நிலையினைக் குறித்து அவர் அடிக்கடி கவலை கொண்டார். அவர்களுக்குப் பல வகைகளிலும் உதவுவதன் மூலம் ஓரளவு மன அமைதி பெற்றார். எனினும் அவர்களின் நிரந்தரமான வாழ்வின் மேம்பாட்டுக்காக அவரால் உதவ முடியவில்லை. சபை மக்களின் துயரத்தைத் துடைப்பதற்காகப் பலரிடமும் உதவி பெற்று மக்களுக்கு உதவினார். பாளையங்கோட்டையிலிருந்த  லெப்டினெண்ட் கர்னல் ட்ரோடர் அவர்கள் ரிங்கல்தௌபேக்கு ஆடைகளையும் பிற உதவிகளையும் செய்து வந்தார். அவற்றையும் ஏழைகளுக்குக் கொடுப்பது அவரது வழக்கம்.

        ரிங்கல்தௌபேயின் தாய் மற்றும் சகோதரனின் இறப்பு அவருக்கு மிகுந்த மனக்கவலையை அளித்தது. குடும்பத்தின் தலைமகனாக இருந்தும் தன்னால் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லையே என்னும் மனக்குமுறல் அவரிடம் இயல்பாகவே காணப்பட்டது. தனது தங்கைக்குக் கடிதம் எழுதும்போது, " நீ இப்பொழுது நம் பெற்றோருடன் மேஜையில் ஒன்றாய் அமர்ந்திருப்பாய். நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். அவர்களுடைய முதிர் வயதில் நீயே அவர்களுக்கு ஆனந்தமும் ஆறுதலுமாக இருக்கிறாய்" எனவும், "எனது உள்ளான வேதனைகளை விவரித்துச் சொல்ல இயலாது. கர்த்தரின் வாக்குத்தத்தமும் இயேசு கிறிஸ்துவின் ஐக்கியமும் அவரது உண்மையும் இரக்கமும் இல்லாதிருந்தால் துயரத்தின் மிகுதியில் எனக்கு ஒரு சிறிது ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

        ரிங்கல்தௌபே பலவிதமான மனவருத்தங்களுடன் வாழ்ந்ததுடன் உடல் நலிவுற்றும் காணப்பட்டார். ஆதரவின்மையும் தனிமையும் அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்தது. ஆஸ்துமா நோய் அவரது உடலை வருத்தியது. உடல்நலத்தைக் கவனிக்க ஓர் உதவியும் இல்லாததால் அவருடைய ஆரோக்கியம் சீர்குலைந்தது. அவருக்கு சமுதாயத்திலிருந்து எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. அவர் மயிலாடியை விட்டு செல்வதற்கு அவரது உடல் நலமின்மையே அடிப்படைக் காரணமாகும். "முதுகை மறைக்க ஓர் அங்கியில்லாத ஜெர்மானிய மிஷனெரி" என இவரை மெக்கன்சி துரை குறிப்பிடுவதிலிருந்து ரிங்கல்தௌபேயின் நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

        ரிங்கல்தௌபே தமது மனக்குமுறல்களைச் சமுதாயத்தில் வெளிப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் உண்மையான, உத்தமமான, தன்னலமற்ற இறைப்பணியாகும். இத்தகைய உண்மையான இறைப்பணி செய்தமையால் அவருக்கு இயேசு கிறிஸ்து இறுதி நற்கருணையில் பயன்படுத்திய புனிதமானப் பாத்திரத்தின் (Holy Grail) காட்சி கிடைத்தது. இதிலிருந்து  இறைமகன் தம்முடன் இருப்பதாக ரிங்கல்தௌபே உறுதியுடன் விசுவாசித்தார். தமது மனக்குமுறல்களை ஜெர்மனியிலுள்ள உடன்பிறந்தவர்களிடம் வெளிப்படுத்தி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆயிரக்கணக்கான அலைகளைத் தாண்டி பயணித்த அருட்தோணியான ரிங்கல்தௌபே, ஏராளமான வலிகளைப் பொறுத்துக் கொண்டு பிறருக்கு ஒளியாகத் திகழ்ந்தார். இத்தகைய ஒரு மாமனிதரை நாம் மறந்துவிடக் கூடாது.

______________________________________

               

ரிங்கல்தௌபேயின் கடற் பயணம்

 

ரிங்கல்தௌபேயின் கடற் பயணம்

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

விசுவாசிகளின் தகப்பன் என அழைக்கப்படும் ஆபிரகாம் வாழ்ந்த  'ஊர்' என்னும் ஊரில் அகழ்வாய்வு செய்த போது, அங்கு சேர நாட்டிலுள்ள தேக்கு மரத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலிருந்தே தமிழகம் பிற நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கு இது ஒரு தொன்மையான சான்று. கி.பி. 45 இல் 'ஹிப்பலோ' என்பவர் கடலில் வீசும் பருவக் காற்றுகளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வெளியிட்டமையால், பருவக்காற்றுகளை அடிப்படையாகக் கொண்டு கடற் பயணங்களும் வியாபாரங்களும் அதிகமாயின. இதன் பயனாக இயேசு கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் கி.பி. 52 இல் தமிழகம் வந்தார். 1498 இல் வாஸ்கோட காமா இந்தியாவிற்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடித்ததன் விளைவாக, இயேசு சபைத் துறவியரும் அதனைத் தொடர்ந்து சீர்திருத்தத் திருச்சபை இறைத் தொண்டர்களும் தமிழகம் வந்தனர். தமிழகம் வந்த  சீர்திருத்தத் திருச்சபையின் முதல் இறைத்தொண்டர் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வருகை புரிந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிங்கல்தௌபே தரங்கம்பாடி வந்தடைந்தார்.

ரிங்கல்தௌபே பாய்மரக் கப்பலில் பயணம் செய்து வந்தார். பருவக் காற்றை ஆதாரமாகக் கொண்டு பயணம் செய்யும் கப்பல் பாய்மரக் கப்பல் என அழைக்கப்படுகின்றது. இக்கப்பலில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். அமெரிக்கா 1819 இல் முதன்முதலாக நீராவிக் கப்பலைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் தொடங்கியது. 1866 ஆம் ஆண்டிற்குப் பின்னர்  தொலைதூரத்திற்கு நீராவிக் கப்பல் இயக்கப்பட்டது.  கடல் பயணத்தின்போது Sea Sick எனப்படும் கடல் நோய் ஏற்படும். அதாவது கப்பலின் அசைவினால் பயணிக்கு தலை சுற்றி வாந்தி ஏற்படும். வாந்தி தொடர்ந்து வந்து இறுதியில் இரத்தம் வரும். எனினும் உணவு உண்ணாமல் இருக்கக் கூடாது. சில நாட்களில் உடல், கடல் பயணத்திற்குப் பழகி விடுவதால் நோய் சரியாகிவிடும். இத்தகைய துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு ரிங்கல்தௌபே கடற் பயணம் செய்தார். அவரது கடற் பயணம் குறித்த செய்திகள் அவரது கடிதங்களின் மூலம் தெரியலாகின்றன. அவருடைய கடற் பயணங்கள் வருமாறு:

1.இலண்டனிலிருந்து கொல்கத்தா

2.கொல்கத்தாவிலிருந்து இலண்டன்

3.டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடி

4.கொல்லத்திலிருந்து சென்னை

5.சென்னையிலிருந்து கொழும்பு

6. கொழும்பிலிருந்து மலாக்கா

7.மலாக்காவிலிருந்து பட்டேவியா

முதல் கடற் பயணம்

ரிங்கல்தௌபே இலண்டனிலிருந்து கொல்கத்தா சென்றடைய நான்கு மாதங்கள் ஆயின. இந்த முதல் கடற் பயணம் குறித்த விபரங்கள் அதிக அளவில் தெரியவில்லை. ஆனால் முதன் முதலாகக் கடற் பயணம் செய்தமையால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனினும் பயணத்தின் போது நீக்ரோ சிறுவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்ததுடன் நற்செய்தியையும் அறிவித்தார். ரிங்கல்தௌபே பயணம் செய்த கப்பலின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கப்பலிலிருந்த பயணிகள் 'ஸ்கர்வி' என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இறக்கும் நிலையிலிருந்த ஒருவருக்கு ரிங்கல்தௌபே இறைச்செய்தியை வழங்கினார். இந்த பயணத்தின்போது தமது தங்கைக்கு ஒரு கடிதம் எழுதினார். கொல்கத்தா வந்தடைந்த ரிங்கல்தௌபே இராஜ்மகால் பகுதியில் இறைப்பணியாற்றினார். ஓராண்டு பணியாற்றிய ரிங்கல்தௌபே பலவிதமான துன்பங்களால் அவதிப்பட்டு மீண்டும் இலண்டனுக்குப் பயணமானார்.

டென்மார்க்கிலிருந்து தரங்கம்பாடி

        ரிங்கல்தௌபே இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு 'கிறௌன் பிரின்சஸ் மேரியா' என்னும் கப்பலில் 1804 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் டென்மார்க்கிலுள்ள கோபன்கேகன் என்னும் துறைமுகத்திலிருந்து புறப்பட்டார். டேனிஷ் நாட்டிற்குச் சொந்தமான இக்கப்பல் அடிமை வாணிபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. அவர் எட்டு மாதங்கள் பயணம் செய்து 1804 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் தரங்கம்பாடி வந்தடைந்தார். எட்டுமாத இக்கடற் பயணம் குறித்து, அவர் நன்னம்பிக்கை முனையிலிருந்தும் நிக்கோபார் தீவிலிருந்தும் எழுதிய கடிதங்கள் மூலம் விபரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கப்பலில் ரிங்கல்தௌபேயுடன் அருள்திருவாளர்கள் டிஸ்கிரான்கேஸ், ஜார்ஜ் கிரான், வோஸ், எப்ஹார்ட் ஆகிய இறைத்தொண்டர்களும் பயணித்தனர். ரிங்கல்தௌபே கடற் பயணத்தின்போது போர்ச்சுக்கீசிய மொழியைக் கற்றுக் கொண்டார்.

அடைந்த துன்பங்கள்

        ரிங்கல்தௌபே இந்த கடற் பயணத்தின்போது பல துன்பங்களை எதிர் கொண்டார். குறிப்பாக, கடல் சீற்றத்தின் காரணமாக பயணத்தில் மிகுந்த தொல்லைகள் ஏற்பட்டன. ரிங்கல்தௌபே பயணம் செய்த கப்பல் ஐரிஸ் கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர் காற்று பலமாக வீசியதால், கப்பலில் பயணம் செய்த அனைவரும் துன்பத்திற்குள்ளாயினர். பதினைந்து வாரப் பயணத்திற்குப் பின்னர், கப்பல்  சைமன் விரிகுடாவைச் (சைமன் டவுன், தென் ஆப்பிரிக்கா) சென்றடைந்தது. அங்கு ஒரு மாத காலம் கப்பல் நிறுத்தப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டு, உணவு சேகரிக்கப்பட்டது. மேலும் நன்னம்பிக்கை முனைக்கும் பிரான்ஸ் ஐஸ்சில் மெரிடியனுக்கும் நடுவில் புயல் ஏற்பட்டது. பின்னர்  சுமத்திரா தீவின் அருகில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. புயல் கடுமையாக வீசியது. கடல் அலைகளின் நுரை கப்பலின் நடுத்தூண் உச்சிக்கு வீசி எறியப்பட்டது. உயரமான அலை மற்றும் கடல் அலைகளின் சுழற்சியால் மனிதர்களும் கப்பலிலிருந்த பொருட்களும் ஒரு மூலைக்கு அடித்துச் செல்லப்பட்டனர். நிக்கோபார் தீவுக்கு செல்ல நினைத்த கப்பல், அகன்ற அலை, எதிர் நீரோட்டம், எதிர் காற்று ஆகியவற்றால் மலேயக் கடற்கரையைச் சென்றடைந்தது. இவ்வாறு கப்பலில் பயணம் செய்த அனைவரும் இத்தகைய இயற்கைச் சீற்றங்களால் அச்சமும் பாடுகளும் அடைந்தனர்.

சந்தித்த மனிதர்கள்

       கப்பல் சைமன் விரிகுடாவில் நிறுத்தியிருந்த பொழுது, ரிங்கல்தௌபே சற்று தொலைவிலுள்ள நன்னம்பிக்கை முனைக்கு அடிக்கடி சென்று வருவார். அங்கு அவர் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினார். குறிப்பாக அருட்திருவாளர்கள் ரெய்ட், கெஸ்டர் என்னும் இரண்டு இறைத்தொண்டர்களைச் சந்தித்தார். ஒரு கருப்பின மனிதனின் உதவியுடன்  ஆற்றைக் கடந்தார். அதற்காக அவனுக்கு ஒரு ஷில்லிங் கொடுத்தார். அவனுடன் செல்லும்போது அவனுக்கு நற்செய்தியினை அறிவித்தார். அதே நாளில் மற்றுமொரு கருப்பின மனிதனைச் சந்தித்தார். அவனுக்கும் நற்செய்தியினை அறிவித்தார். மட்டுமன்றி ஆற்றின் மறுகரையில் ஒரு டச்சுக்காரனையும் ஜெர்மானியனையும் சந்தித்தார். அவர்களிடமும் நற்செய்தியினை அறிவித்தார். மற்றொருநாள் ரிங்கல்தௌபே ஓர் இறைத்தொண்டரின் மனைவியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அப்பெண்மணி தமது வாழ்க்கையின் அனுபவங்களைச் சாட்சியாகக் கூறியதுடன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே சமாதானம் கிடைக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் மொறேவியர்கள் பலரையும் சந்தித்தார்.

பழங்குடி மக்களின் வாழ்வு நிலைகள்

      ரிங்கல்தௌபே நன்னம்பிக்கை முனைப் பகுதிகளில் சுமார் ஒரு மாதம் சுற்றித் திரியும் நேரங்களில், அங்குள்ள மக்களைப் பற்றித் தெரிந்து கொண்டார். கப்பல் சுமத்திரா தீவைக் கடந்து செல்லும் போது, மலைகள் நிறைந்த பகுதியில் மலேய இசுலாமியர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தின் உட்புறப் பகுதிகளில் பசிபிக் தீவுகளில் காணப்படும் பழங்குடிகள் போன்ற மக்கள் வாழ்ந்தனர். நிக்கோபாரின் கிழக்குப் பகுதியில் காணப்பட்ட நாவ்கௌரி என்னும் இடத்தில் கப்பல் சில நாட்கள் நின்றது. அப்போது அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து அம்மக்களின் வாழ்க்கை நிலைகளை ரிங்கல்தௌபே தெரிந்து கொண்டார்.

அங்குள்ள மக்கள் இடையில் நீல நிறத் துண்டும் தலையில் பச்சை இலைகளும் தவிர அவர்கள் உடலில் வேறு எதையும் அணிந்திருக்கவில்லை. அவர்கள் கைகளில் வெள்ளி வளையல்களும் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருந்தனர். அசாதாரணமான அளவிற்கு அகன்ற மூக்கும் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு வெற்றிலைக்கறை நிறைந்த வாயும் உடையவர்களாகக் காணப்பட்டனர். அவர்களின் வீடுகள் மூங்கிலால் அலங்கரிக்கப்பட்டு, அதன் இலைகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. மாலை நேரத்தில் மீனவர்கள் கட்டு மரங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

மூங்கில் குழாய்களில் குடிப்பதற்குப் பனை மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள் கொடுத்தனர். அந்த மக்கள் இரும்பு ஆயுதங்களோடு மீன் எலும்புகளால் செய்யப்பட்ட ஈட்டிகளையும் வைத்திருந்தனர். வீடுகளின் அருகில் தேங்காய் ஓடுகளும் கடல் சிப்பிகளும் குவியலாகக் கிடந்தன. எங்கும் பன்றிகள் திரிந்து கொண்டிருந்தன. பெரிய கூடுகளில் பறவைகள் அடைக்கப்பட்டு வீடுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன. வீடுகளின் உட்புறம் மிகவும் சுத்தமாகக் காணப்பட்டது. சுவரில் ஆயுதங்கள், நீண்ட ஈட்டிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. நீண்ட மரத் துண்டுகளைத் தலையணைகளாகப் பயன்படுத்தினர். வேக வைக்கப்பட்ட சேனைக் கிழங்கு, பல்வேறு கிழங்கு வகைகள், பல வகையான இறைச்சிகள் ஆகியவையே அவர்கள் உண்ணும் உணவு வகைகளாகும்.

        கிராமத்தின் பின்பகுதியில் இறந்தோரைப் புதைக்கும் இடம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளில் கொக்கோ மரங்கள் நிறைந்திருந்தன. அங்கு காட்டுப் புறாக்கள், பச்சை நிறப் பறவைகள், பெரிய சாம்பல் நிறப் பறவைகள், குக்கூ பறவைகள், கிளிகள், மைனாக்கள் ஆகிய பறவைகளும் எருமை மாடுகள், பன்றிகள், நாய்கள் போன்ற விலங்குகளும் காணப்பட்டன. பெரிய இலைகளில் பழுப்பு, நீல நிறங்களில் ஓவியம் வரைந்திருந்தனர். அதில் படகுகள், மனிதர்கள், மீன்கள், பாறைகள், மரங்கள் ஆகியன வரையப்பட்டிருந்தன. கப்பல் பயணிகளிடம் தீவிலுள்ள பல பொருட்களை விற்றனர். இயற்கை அழகு மிக்க இத்தீவில் ரிங்கல்தௌபே மகிழ்வுடன் காணப்பட்டார். ரிங்கல்தௌபே கடற் பயணத்தின்போது இறைப்பணியாற்றியதுடன் தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அப்பகுதிகளின் இயற்கையழகையும் கண்டு இரசித்தார்.

இறுதிக் கடற் பயணம்

   பத்து ஆண்டுகள் மயிலாடியிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் இறைப்பணியாற்றிய ரிங்கல்தௌபே, தாயகம் செல்ல விரும்பி, கொல்லத்திலிருந்து சென்னைக்கு கடலில் பயணத்தை மேற்கொண்டார். பின்னர் சென்னையிலிருந்து கொழும்புவிற்கும் அங்கிருந்து மலாக்காவிற்கும் இறுதியாக அங்கிருந்து பட்டேவியாவிற்கும் பயணம் செய்தார். இப்பயணம் அவருக்குத் துன்பம் நிறைந்த பயணமாகவே இருந்தது. உடலில் நோய், மனதில் குடும்பத்தாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், போதிய பணமின்மை, உடையின்மை, சோர்வு ஆகியவற்றால் மனந்தளர்ந்து காணப்பட்டார். இந்த கடற் பயணமே அவரது இறுதிப் பயணமாக அமைந்தது. ஆம், கடற் பயணத்தின்போது இறந்தமையால் கடலில் அடக்கம் பண்ணப்பட்டார்.

    இவ்வாறாக, தமிழகம் வந்த சீர்திருத்தத் திருச்சபைத் தொண்டராம் ரிங்கல்தௌபேயின் கடற் பயணம் பற்றி இதுகாறும் விளக்கப்பட்ட செய்திகள், எப்பாடுபட்டேனும் எத்தியாகம் செய்தேனும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் வழியாக அக்காலத் தமிழகத்தில் வாழ்ந்த மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் தியாக வாழ்வையும் வெளிப்படுத்துகின்றன. அத்தோடு, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போக்குவரத்து முறைகள், வணிகத் தொடர்புகள், பழங்குடி மக்களின் வாழ்வு நிலைகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைக்கும் ஆவணமாகவும் இஃது அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday 9 April 2021

பேராயர் கால்டுவெல்லின் கீர்த்தனையும் ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்பும்

 

பேராயர் கால்டுவெல்லின் கீர்த்தனையும்

ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்பும்

 

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

யர்லாந்து நாட்டில் பிறந்த, ஸ்காட்லாந்து நாட்டினரான பேராயர் இராபர்ட் கால்டுவெல், 1838 இல் சென்னைக்கு வந்து, 1841 முதல் 1891 வரை இடையன்குடியை மையமாகக் கொண்டு இறைப்பணியாற்றினார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் போன்ற பல நூல்களை எழுதிய கால்டுவெல், கிறித்தவக் கீர்த்தனை இயற்றுவதிலும் ஞானப்பாடல்களை மொழிபெயர்ப்பதிலும் வல்லவராக விளங்கினார்.

தமிழில் கிறித்தவக் கீர்த்தனைகளை  (Lyrics)  முதன் முதலாக இயற்றிய பெருமை வீரமாமுனிவரையும் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து ஞானப்பாடல்களை  (Hymns)  தமிழில் மொழிபெயர்த்த பெருமை அருள்திரு. பர்த்தலோமேயு சீகன்பால்குவையும் சாரும். வீரமாமுனிவர் இயற்றிய "ஜகநாதா குருபரநாதா திருஅருள்நாதா ஏசுபிரசாத நாதா" என்னும் கீர்த்தனை நமது பேராய வெளியீட்டில் 121, 122   ஆவது பாடல்களாக அமைந்துள்ளது. இக்கீர்த்தனை அருள்திரு.  J.S.  சான்ட்லர் தொகுத்து 1938 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஞானக்கீர்த்தனைகள் என்னும் நூலிலும் இரண்டு (88,89) பாடல்களாக இடம்பெற்றுள்ளது. இன்று வேதநாயக சாஸ்திரியார், ஜான் பால்மர் போன்ற கீர்த்தனைக் கவிஞர்கள் இயற்றிய சுமார் 1600 கீர்த்தனைகள் காணக்கிடைக்கின்றன. கீர்த்தனைக் கவிஞர்களுள் வீரமாமுனிவர், அருள்திரு. J.S. சாண்ட்லர், அருள்திரு. எட்வர்ட் வெப், பேராயர் கால்டுவெல் ஆகிய நால்வரும் மேலைநாட்டினர்.

கீர்த்தனை இயற்றல்

        இறைப்பணியிலும் மொழி ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த கால்டுவெல்,  கீர்த்தனை இயற்றுவதிலும் தேர்ச்சி உடையவராகக் காணப்பட்டார். கால்டுவெல் சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மேற்கொண்ட தம் நடைப் பயணத்தின்போது தஞ்சாவூருக்குச் சென்று, அங்கு வேதநாயக சாஸ்திரியாரிடம்  உரையாடினார். அவர்களது உரையாடலில் கீர்த்தனை முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த உரையாடலின் தாக்கத்தினாலும் கீர்த்தனைகளை மக்கள் ஆர்வமுடன் பாடிவருவதாலும் கால்டுவெல்     "ஏசையா பிளந்த ஆதிமலையே மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே" என்னும் கீர்த்தனையை இயற்றினார். இக்கீர்த்தனையை இன்றும் சபைகளில் பாடிவருகின்றனர். இக்கீர்த்தனைக்கு 1938 ஆம் ஆண்டுப் பதிப்பில்  Rock of Ages எனத் தலைப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்பு

        சீகன்பால்கு தாம் மொழிபெயர்த்த பாடல்களை தரங்கம்பாடியில் 1713 ஆம் ஆண்டு Book of Hymns set to Malabaric Music   என்னும் பாடல் தொகுப்பு நூலாக வெளியிட்டார். இவை ஞானப்பாட்டுகள் (Hymns) என்று வழங்கப்படுகின்றன. இந்நூலில் 48 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. சீகன்பால்குவைத் தொடர்ந்து சூல்சே, வால்தர், பிரேசின், பெப்ரீசியஸ் ஆகியோர் தமிழில் ஞானப்பாடல்களை மொழிபெயர்த்தனர். இவர்களுள் பெப்ரீசியசின் பணி குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து கால்டுவெல்லும் பாடல்களை மொழிபெயர்த்தார். அப்பாடல்கள் பின்வருமாறு:

1. ஏதேனில் ஆதிமணம் உண்டான நாளிலே

2. சபையின் அஸ்திபாரம்

3. கேள் ஜென்மித்த ராயர்க்கே

4. அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்தது

5. தூய தூய தூயா! திரியேக தேவா!

 

1. ஏதேனில் ஆதிமணம் உண்டான நாளிலே

கால்டுவெல் தமது மூத்த மகள் இசபெல்லாவின் திருமணத்தின் போது பாடுவதற்காக  "The voice that breathed o'er Eden"   என்னும் ஆங்கிலப் பாடலைத் தமிழில் "ஏதேனில் ஆதிமணம்  உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே" என மொழிபெயர்த்தார். இடையன்குடியில் 1868 பெப்ரவரி 19 ஆம் நாள் நடைபெற்ற இத்திருமணத்தில் இப்பாடல் தமிழில் முதன் முதலாகப் பாடப்பட்டது.  சபை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்தனர். இன்று இப்பாடல் திருமண ஆராதனையை அலங்கரிக்கும் பாடலாகத் திகழ்ந்து வருகிறது.

2. சபையின் அஸ்திபாரம்

The Church's one foundation என்னும் ஆங்கிலப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு சபையின் அஸ்திபாரம் என்னும் ஞானப்பாடலாகும். இடையன்குடியில்  32 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த ஆலயத்தை, கால்டுவெல் 1880 ஜூலை 6 ஆம் நாள் அர்ப்பணம் செய்து வைத்தார். அன்று நடைபெற்ற அர்ப்பண ஆராதனையில் பாடுவதற்காக,  கால்டுவெல்  The Church's one foundation என்னும் ஆங்கிலப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இப்பாடலை அவரது இளைய மகளான மேரி அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். அன்று முதல் இப்பாடல் திருநெல்வேலி SPG    சபைகளில் 1938 ஆம் ஆண்டு வரைப் பாடப்பட்டு வந்தது. அதன் பின்னர், அருள்திரு. தாமஸ் வாக்கர் அவர்களால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அப்பாடல் தற்பொழுதுப் பாடப்பட்டு வருகின்றது. இப் புதிய மொழிபெயர்ப்புப் பாடல் 1938 ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் மூலம் வெளிவந்த ஞானப்பாட்டுகள் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நூல் தொகுப்பின் குழு கூட்டுநராக அருள்திரு.  J.S.  சான்ட்லர்  செயலாற்றினார். இக்குழுவில் அருள்திரு. தாமஸ் வாக்கர் உறுப்பினராகப் பணியாற்றினார். கால்டுவெல் மற்றும் வாக்கர் ஆகிய இருவரது மொழிபெயர்ப்பிலும் ஆங்காங்கே சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இன்று கால்டுவெல் மொழிபெயர்த்த பாடல் வழக்கில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

பிற பாடல்கள்

கால்டுவெல் கிறிஸ்து பிறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய பண்டிகை நாட்களில் பாடுவதற்காக  Hark! The herald angels sing என்னும் பாடலை "கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே!" எனவும், The Strife is o'er, the battle done என்னும் பாடலை "அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, இப்போது போர் முடிந்தது" எனவும் மொழிபெயர்த்தார். இப்பாடல்களை கால்டுவெல்லின் மகள்களான இசபெல்லா, லூயிசா, மேரி ஆகியோர் பாடகர் குழுவினருக்குப் பாடுவதற்கு பயிற்சி அளித்தனர். இதன் விளைவாக தமிழில் இப்பாடல்கள் முதன் முதலாக இடையன்குடி ஆலயத்தில் கிறிஸ்மஸ், உயிர்த்தெழுதல் ஆகிய நாட்களில் மகிழ்வுடன் பாடப்பட்டன. மேலும்   Holy, holy, holy, Lord God Almighty  என்னும் பாடலை "தூய தூய தூயா, திரியேக தேவா, உமக்கே எந்நாளும் சங்கீதம் ஏறுமே" என மொழிபெயர்த்தார். இப்பாடல்களை சபையார்  பாடி  மகிழ்ந்தனர்.

கால்டுவெல் மொழிபெயர்த்த இப்பாடல்கள்  கிறித்தவ வழிபாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ளன. கால்டுவெல் இன்னும் பல பாடல்களை மொழிபெயர்த்திருக்கலாம்; கீர்த்தனைகளை இயற்றியிருக்கலாம். ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

கிறித்தவ ஞானக் கீர்த்தனைகளின் இன்றைய நிலை

 

கிறித்தவ ஞானக் கீர்த்தனைகளின் இன்றைய நிலை

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

            கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் இறைவனுடைய திருவார்த்தைகளின் அடிப்படையில்  பக்திநெறியுடனும் ஜெப வாஞ்சையுடனும் அனுப வெளிப்பாட்டுடனும் இயற்றப்பட்டதால் நமக்கு எக்காலத்திலும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் இப்பாடல்கள் அளிக்கின்றன. கீர்த்தனைகளின் சிறப்பம்சத்திற்கு மற்றுமொரு காரணம் இவை இறையியல் கருத்துகளை மிகவும் எளிமையாகத் தருகின்றன. வேதவாசிப்பு, ஜெபம் ஆகியவை நமக்கு எவ்வாறு ஆறுதலும் அமைதியும் தருகின்றனவோ அதேபோன்று கீர்த்தனைகளைப் பாடுவதாலும், அவற்றின் மூலம் விண்ணப்பங்களை ஏறெடுப்பதாலும் ஆன்மிக அமைதியும் இறையுணர்வும் பெறமுடிகின்றது.

    கீர்த்தனைகளைப் பாடிய கவிஞர்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட பக்தியாலும் பற்றுறுதியாலும் பல்வேறு விதமான சூழல்களில் கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர். வேதநாயக சாஸ்திரியார் முதல், நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைக் கவிஞர்கள் கீர்த்தனைகள் படைத்துள்ளனர்.       கிறித்தவர்கள் அனைவருக்கும் விவிலியத்திற்கு அடுத்த நிலையில் இக்கீர்த்தனைகள் காணப்படுகின்றன. தமிழில்  இக்கீர்த்தனைகள் இயற்றப்பட்ட சூழலை அறிவது மிகக் கடினமாக உள்ளது. சுமார் பத்து கீர்த்தனைகளின் பின்புலத்தையே இன்று முழுமையாக அறிய முடிகிறது.   இன்று பல நூல்களிலுமாக சுமார் 2200 கீர்த்தனைகள் கிடைக்கின்றன. இக்கீர்த்தனைகளை அழிந்து விடாமல் பேணிக் காக்கவேண்டியது நமது கடமையாகும். 

           இன்று பெரும்பாலான ஆலய வழிபாடுகளில் ஒரு கீர்த்தனை மட்டுமே இடம்பெறுகிறது. சுமார் 400 கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ள கீர்த்தனைகள் நூலில் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த கீர்த்தனைகள் சுமார் 100 எனலாம். இவற்றுள் குறிப்பிட்ட சில கீர்த்தனைகளையே திரும்பத் திரும்பப் பாடுகின்றனர். இதற்கு என்ன காரணம் எனக் கேட்டால், இராகம் தெரியாது எனப் பதிலிறுக்கின்றனர். இதனால் ஒரு தலைமுறை மாறும் போது இன்னும் பல கீர்த்தனைகளின் இராகம் மறந்து போய்விடும் என உறுதியாகக் கூறலாம்.

     இன்று சிலருக்கு கீர்த்தனைகளின் இராகங்களை மாற்றிப் பாடுவது வழக்கமாகி விட்டது. இது முற்றிலும் தவறான செயல்முறையாகும். அக்காலத்தில் கீர்த்தனைகளை இயற்றியோர் அக்கீர்த்தனைகளின் கருத்து, சூழல், நயம் ஆகியனவற்றை மனதில் கொண்டு அதற்குரிய இராகம், தாளம் ஆகியனவற்றை அமைப்பர். அன்றைய கவிஞர்கள் இலக்கியப் புலமை, இலக்கணப் புலமை, விவிலியப் புலமை, இசைப் புலமை ஆகியவைகளை உடையவர்களாக விளங்கினர். ஆனால் இன்று  இப்புலமைகள் இல்லாமல் கீர்த்தனைகளின் இராகங்களைத் துணிந்து மாற்றுகின்றனர். இராகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இச்செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இத்தகைய இராக மாற்றங்கள் சபைகளிலும் தனியாரிடமும் நடந்து வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

                இதன் அடிப்படையில் இன்று கீர்த்தனைகளை மையமாகக் கொண்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதாவது, இன்று கிறித்தவப் பாடல்களைப் போட்டி போட்டுக் கொண்டு பலரும் குறுந் தகடுகளில் (சி.டி.) பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கீர்த்தனையை அதற்குரிய இராகத்தில் பாடாமல் புதிதாக ஓர் இராகம் கண்டுபிடித்து, பாடி, குறுந்தகடுகளில் பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பின்வரும் சந்ததியினருக்கு ஒரு கீர்த்தனையின் உண்மையான இராகம் எது என்பதனைக் கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகி, கீர்த்தனைகளைப் பாடி வரும் வழக்கம் குறையத் தொடங்கும். இவ்வாறு பணத்திற்காக கிறித்தவக் கீர்த்தனைகளை வியாபாரம் செய்வதினால் எதிர்காலத்தில் கீர்த்தனையின் பயன்பாடு மிகவும் குறைந்து விடலாம். இன்று உணவுகளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்வது போல் கிறித்தவக் கீர்த்தனைகளிலும் கலப்படம் செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் கிறித்தவர்களாகிய நாம் கவனமாக இருக்க வேண்டும்.  ஒரு கீர்த்தனையை நான்கு வெவ்வேறு வகையானக் குழுக்கள் பாடி குறுந்தகடுகளில் வெளியிடும்போது, ஒவ்வொரு குழுவினரும் ஒரே கீர்த்தனையை வெவ்வேறு இராகத்தில் பாடியுள்ளனர். இக்கீர்த்தனையைக் கேட்பவர்களின் நிலையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

   விவிலியமும் ஞானக் கீர்த்தனைகளும் கிறித்தவர்களின் இரு கண்களாகும். கிறித்தவர்களுக்கு இரு நூல்களும் புனித நூல்களாகும். கீர்த்தனைகளைப் பாடி விவிலியத்தைப் படிப்பதால் மன பாரங்கள் குறைவது நாம் அனைவரும் அறிந்ததாகும். விவிலியத்திலுள்ள ஓர் எழுத்தைக்கூட மாற்றக் கூடாது என்னும் கட்டளையைப் பின்பற்றி வாழும் நாம், விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட கீர்த்தனைகளின் இராகத்தை எவ்வாறு மாற்றலாம்? இது தேவனுக்கு விரோதமான செயலாகும்.

   இன்னும் ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம். பல நிறுவனங்கள் கீர்த்தனைகளை மறுபதிப்பின் மூலம் வெளியிடும் போது கீர்த்தனைகளின் இராகம், தாளங்களை மாற்றி விடுகின்றன. இச்செயல்பாடு வேண்டும் என்று நிகழ்கின்றதா? அல்லது தெரியாமல் நிகழ்ந்து விடுகின்றதா? எனத் தெரியவில்லை. அருள்திரு. சான்ட்லர்  பதிப்பித்து வெளியிட்ட (1901) ஞானக் கீர்த்தனைகள் என்னும் நூலிலுள்ள சில கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின் பெயர்களுக்கும் இன்று வெளியாகும் நூல்களிலுள்ள  சில கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின் பெயர்களுக்கும் வேறுபாடு உள்ளது. இதுவும் கண்டிக்கத்தக்கதாகும். நூற்றாண்டுகள் செல்லச் செல்ல கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின் பெயர்களும் மாறிவிடும். எனவே கீர்த்தனைகளைப் பதிப்பிப்பதில் மிகவும் கவனம் தேவை.

        இன்று சிலர் மட்டும் கீர்த்தனைகள் அழிந்து விடக்கூடாது என்றும் கீர்த்தனைகளின் உண்மையான இராகம், தாளம் மாறி விடக்கூடாது என்றும் பாடத் தெரியாத கீர்த்தனைகளைப் பாடிக் காட்டியும் கீர்த்தனைகளைப் பாடப் பயிற்சியளித்தும்  கீர்த்தனைகளை மக்கள் மத்தியில்  பரப்பியும் அறிவுறுத்தியும் வருகின்றனர். இவ்வூழியம் மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஒவ்வொரு பேராயத்திலும் ஊழிய வாஞ்சையுடன் இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தி, கீர்த்தனைகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். இது கிறித்தவர்கள்  ஒவ்வொருவரின் முக்கியக் கடமையாகும். போதகர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அருளுரையாற்றும் போது கீர்த்தனைகளின் சிறப்புகளைக் குறித்தும் சபையினருக்கு எடுத்துரைக்க வேண்டும். நாமும் நமது இல்லங்களில் தினமும் கீர்த்தனைகளைப் பாடி இறைவனைத் துதிப்போம்.