Thursday, 8 April 2021

ஒரு மாமனிதர் வாழ்வின் அறியப்படாத பக்கங்கள்

 

    அருள்திரு. ரிங்கல்தௌபே அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத்  தமிழில் பலர் எழுதியிருந்தாலும், இந்நூல்களுக்கு முதன்மை ஆதாரமாக விளங்கியவை பேராயர் இராபர்ட் கால்டுவெல் எழுதி, சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் அன் கோ மூலம் 1881 ஆம் ஆண்டு வெளிவந்த "திருநெல்வேலி மிஷனின் தொடக்ககால வரலாறு" என்னும் நூலும், சேலத்தில் இறைப்பணியாற்றிவந்த அருள்திரு. வில்லியம் ராபின்சன் எழுதி 1902 ஆம் ஆண்டு வெளிவந்த 132 பக்கங்களைக் கொண்ட "Ringeltaube the Rishi"  என்னும் நூலும், மயிலாடியைச் சேர்ந்த  சி.எம். ஆகூர் எழுதி 1903 ஆம் ஆண்டு வெளிவந்த, "Church History of Travancore" என்னும் நூலும் ஆகும். கால்டுவெல்லின் 356 பக்கங்களைக் கொண்ட "திருநெல்வேலி மிஷனின் தொடக்ககால வரலாறு" என்னும் நூலின் முழுமையான பெயர்,  "Records of the Early History of the Tinnevelly Mission of the Society for Promoting Christian Knowledge and the Society for the Propagation of the Gospel in Foreign Parts"  என்பதாகும். "எதிர் காலத்தில் திருநெல்வேலி மிஷன் வரலாற்றை எழுதும் உள்நாட்டு மக்களுக்குத் துணை செய்யும் விதத்தில், தற்போது கிடைக்கும் பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கிய பழைய ஆவணங்களைச் சேகரித்துப் பேணிப் பாதுகாப்பதே இந்நூல் எழுதுவதற்கான என்னுடைய நோக்கமாகும்" எனக் கால்டுவெல் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  இந்நூல் பதினொரு இயல்களையும் மூன்று பின்னிணைப்புகளையும் உடையது.  இந்நூலின் நான்காவது இயல் "ரிங்கல்தௌபேயின் காலம்" (Ringeltaube's Period)  என்பதாகும். இவ்வியல்  46 பக்கங்களை (123-168) உடையது. ரிங்கல்தௌபே 1806 முதல் 1809 வரை திருநெல்வேலிப் பகுதிகளில் செய்த ஊழியங்களை அவரது நாட்குறிப்பின் அடிப்படையிலும் சில கடிதங்களை ஆதாரமாகக் கொண்டும் கால்டுவெல் விவரிக்கிறார். கால்டுவெல் வரலாற்றாராய்ச்சியில் ஆழங்கால் பட்டவராதலால், வரலாற்றுக் குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து இவ்வியலை எழுதியுள்ளார்.

   வில்லியம் ராபின்சன் எழுதிய நூலில் ரிங்கல்தௌபேயின் பல கடிதங்களும் நாட்குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.  1188 பக்கங்கள் கொண்ட ஆகூர் நூலின் மூன்றாவது பகுதியிலுள்ள 2 முதல் 10 வரையுள்ள இயல்களில் ரிங்கல்தௌபேயின் வரலாறு 164 பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.  இம்மூன்று நூல்களை  ஆதாரமாகக் கொண்டே, பிற்காலத்தில் ரிங்கல்தௌபேயின் வரலாற்றைத் தமிழில் ஓரளவு விரிவாக எழுத முடிந்தது.

    ஆனால்,  மேற்குறிப்பிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகளோடு, ரிங்கல்தௌபே இன்னும் ஏராளமானக் கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பான்மை அழிந்துபட்டன. அவர் இங்கிலாந்திலும்  திருவிதாங்கூரிலும் தங்கியிருக்கும்போது இலண்டன் மிஷன் சங்கத்தாருக்கு எழுதிய கடிதங்களும்,   அவருக்கு பிறர் எழுதிய கடிதங்களும், ரிங்கல்தௌபே தொடர்பாக பிறர் இலண்டன் மிஷன் சங்கத்தாருக்கு எழுதிய கடிதங்களும்  இலண்டன் பல்கலைக்கழகத்தின் School of Oriental and African Studies (SOAS) என்ற நிறுவனத்தில் இன்றும் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆய்வுக்கான உலகின் முன்னணி நிறுவனம் ஷிளிகிஷி  ஆகும். இங்குள்ள இக்கடிதங்கள் அனைத்தும்  ஆங்கிலத்தில் எழுதப்பட்டனவாகும். இவற்றுள் பெரும்பாலான கடிதங்கள் இங்கிலாந்திலிருந்து எழுதியவையாகும். இக்கடிதங்கள் ரிங்கல்தௌபே இறைப்பணிக்கு ஆயத்தமானதையும் கல்கத்தா மற்றும் தரங்கம்பாடி செல்வது தொடர்பான விவரங்களையும் உள்ளடக்கியன. இவைமட்டுமன்றி ரிங்கல்தௌபேக்கு ஜார்ஜ் கிரேன், அகஸ்டஸ் கிரான்ஜஸ் போன்ற மிஷனெரிமார்கள் எழுதிய கடிதங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை எந்த நூல்களிலும் இதுவரை வெளிவரவில்லை.

    ரிங்கல்தௌபே போதகரின் வாழ்க்கை வரலாறு ஜெர்மன் மொழியில் 1878 - 1879 ஆகிய ஆண்டுகளில் ஹாலே என்னும் இடத்தில் வெளியான  "Mission Reports of the East- India Mission Institute in Halle" என்னும் இதழில் 30, 31 ஆகிய தொகுதிகளில்  "For the Understanding of the Missionary W.T. Ringeltaube" என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இவ்வரலாற்றை வில்கெல்ம் ஜெர்மான் (Wilhelm Germann) என்பவர் எழுதியுள்ளார். இந்த லுத்தரன் மிஷனெரி இந்தியாவில் 1865 வரை பணியாற்றியவர். 1878 இல் வெளியான முப்பதாவது தொகுதியில் 37 முதல் 135 வரையுள்ள பக்கங்களிலும் 1879 இல் வெளிவந்த முப்பத்தொன்றாவது தொகுதியில் 61 முதல் 140 வரையுள்ள பக்கங்களிலும் இவ்வரலாறு இடம்பெற்றுள்ளது. முப்பதாவது தொகுதில் இடம்பெற்றுள்ள செய்திகள் ஆறு பகுதிகளாகவும் முப்பத்தொன்றாவது தொகுதியில் இடம்பெற்றுள்ள செய்திகள் ஐந்து பகுதிகளாகவும் தரப்பட்டுள்ளன. இந்த பதினொரு தலைப்புகளும் பின்வருமாறு:

1.   கவிஞரும் மிஷனெரியின் சகோதரியும்

2.   இளமைக் காலமும் மனமாற்றமும்

3.   இறைப்பணிக்கான அழைப்பு

4. இங்கிலாந்தில் முதல் முறையாகக் காத்திருத்தலும் இந்தியாவுக்கானக்      கடற் பயணமும்

5.  கல்கத்தாவில்

6. இங்கிலாந்தில் இரண்டாவது முறையாகக் காத்திருத்தலும் தாய்நாடு        செல்லலும்

7.  இந்தியாவிற்கான இரண்டாவது பயணம்

8.  தரங்கம்பாடியில் முதல் அனுபவம்

9.  தரங்கம்பாடியில் காத்திருந்த காலங்கள்

10. திருநெல்வேலியிலும் திருவிதாங்கூரிலும்

11. நிறைவுரை

ரிங்கல்தௌபே பற்றிய இந்நூலை, வில்லியம் ராபின்சன் அறிந்திருந்தாரா என்பது குறித்து  கருத்துரைக்க முடியவில்லை.

    ஜெர்மன் நாட்டின் ஹாலே (Halle (Saale)  என்னும் நகரிலுள்ள   "The Mission Archives of the Francke Foundation" என்னும் நிறுவனத்தில், ரிங்கல்தௌபே தொடர்பான 76 கடிதங்களும் அறிக்கைகளும் ஜெர்மன் மொழியில் இன்றும் உள்ளன. இவற்றின் மூலம் அக்காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற போர்கள்,  ரிங்கல்தௌபே ஹாலே பட்டணத்திலிருந்து நண்பர் ஹோல்ஸ்பெர்க்குடன் வெர்னிகெரோட் என்னும் ஊர் வரை  செய்த பயணம் குறித்த விளக்கங்கள், கப்பலுக்கு ஹாம்பர்க் வழியாக இலண்டனுக்குப் பயணம் செய்தது,  இலண்டனில் தங்கியிருந்தது, ரிங்கல்தௌபே இங்கிலாந்தில் மேற்கொண்ட பயணங்கள், மிஷனெரியாகச் செல்வது குறித்த கருத்துரையாடல்கள், பண நெருக்கடி, மிஷன் தொடர்பான செய்திகள், புதிய மிஷனெரிமார்களான ரிங்கல்தௌபே - ஹோல்ஸ்பெர்க் ஆகியோரின் அறிக்கை, ரிங்கல்தௌபே முதல் பயணமாக கல்கத்தா சென்றமை, இரண்டாவது பயணமாக தரங்கம்பாடியைச் சென்றடைந்தது, மிஷனெரிமார்களின் இறைப்பணிகள் பற்றிய நல்லெண்ணம், மிஷன் நிர்வாகம் தொடர்பான கருத்துரைகள், மிஷனின் அறிக்கைகள் குறித்த செய்திகள், புதிய மிஷனெரிகள் வரவில்லை எனக் கவலையுடன் எழுதிய விளக்கங்கள், மிஷனெரிமார்களின் ஊதியம் குறித்த விவாதங்கள், தரங்கம்பாடியில் தங்கியிருந்த மிஷனெரிமார்கள் எதிர் கொண்ட இன்னல்கள், பட்டேவியாவில் ரிங்கல்தௌபேயின் வருகை, ரிங்கல்தௌபேயின் நாட்குறிப்புகள்  போன்ற செய்திகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. இக்கடிதங்களையும் அறிக்கைகளையும் படித்தால், ரிங்கல்தௌபே குறித்து இன்னும் அதிகமான செய்திகளை நாம் பெறலாம். இவற்றைப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஜெர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

    இலண்டன் மிஷன் சங்கத்தின் மூலம் T.W. Holmes     என்னும் மிஷனெரி,  "Ringeltaube - Pioneer missionary to India" என்னும் நூலை இலண்டனில் வெளியிட்டுள்ளார். இந்நூலில் ரிங்கல்தௌபேயின் வரலாறு ஆங்கிலத்தில் 24 பக்கங்களில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இந்நூல் காலை, மதியம், மாலை என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்த நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. எனினும் இந்நூலாசிரியர் வில்லியம் ராபின்சன் எழுதிய  நூலைக் குறிப்பிடுவதால் 1902 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்நூல் வெளியாகியுள்ளது என்பதை அறிய முடிகின்றது. இந்த நூல் இலண்டனில் வெளியாகியுள்ளது.

    நம் மண்ணிற்கு உயர்வையும் பெருமையையும் பெற்றுத் தந்த ரிங்கல்தௌபே, மொறேவியன் பிரிவைச் சார்ந்தவராக இருந்தமையால், அவரின் இறைப்பணி மிகவும் உத்வேகத்துடனும் தன்னலமற்றதாகவும் காணப்பட்டது. ரிங்கல்தௌபே இயல்பாகவே நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர். இறைப்பணிக்காகத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது நாட்குறிப்புகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்வுகளை அன்றைய தேதியிட்டு எழுதும் இவரது வழக்கத்தை, கால்டுவெல்லின் நூலின் மூலம் அறியமுடிகிறது. 1806 முதல் 1809 வரை ரிங்கல்தௌபே பாளையங்கோட்டைப் பகுதிகளில் செய்த இறைப்பணியினை அவரது நாட்குறிப்புகளின் வாயிலாக ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது.  ஆனால் 1809 முதல் 1816 வரையிலான அவரது நாட்குறிப்புகளில் 75 விழுக்காடுகள் நமக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருப்பின் ரிங்கல்தௌபே தென்திருவிதாங்கூரில் செய்த இறைப்பணிகளை முழுமையாகத் தெரிந்து கொண்டிருக்கலாம். இவை அழிந்தனவா? அல்லது அழிக்கப்பட்டனவா? அல்லது கப்பலில் செல்லும்போது கடல் அலைகளால் கவரப்பட்டனவா? எனத் தெரியவில்லை. அவரது வரலாற்றை அவர் எழுதிய, அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. அவரது கடிதங்களில் பல சேர வேண்டிய இடத்தைச் சென்று அடையவில்லை. கப்பல்களில் கடிதங்கள் அனுப்பப்படுவதால், கடல் கொள்ளையர்களால் கப்பல் சேதப்படுத்தப்படும்போது அவை கடலில் அழிந்துவிட வாய்ப்புகள் மிக அதிகம். மட்டுமன்றி கடிதங்களின் பயணக் கால அளவு மிகவும் அதிகமானதால், சென்றடைவதில் நம்பகத் தன்மை இல்லை எனலாம். இத்தகைய குழப்பங்கள், தெளிவின்மை, மொழி இடர்பாடு ஆகியனவற்றைக் கடந்து, அருள்திரு. வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே அவர்களின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர்வது நாம் அவருக்குச் செய்யும் கைமாறாகும்.

                                                                                                   - யோ. ஞான சந்திர ஜாண்சன் 

         தேசோபகாரி, ஏப்ரல் 2021

 

 

 

 

No comments:

Post a Comment