கிறித்தவ ஞானக்
கீர்த்தனைகளின் இன்றைய நிலை
யோ. ஞான சந்திர
ஜாண்சன்
கிறித்தவ வழிபாட்டுப் பாடல்கள் இறைவனுடைய திருவார்த்தைகளின்
அடிப்படையில் பக்திநெறியுடனும் ஜெப
வாஞ்சையுடனும் அனுப வெளிப்பாட்டுடனும் இயற்றப்பட்டதால் நமக்கு எக்காலத்திலும்
ஆறுதலையும் மகிழ்ச்சியையும் இப்பாடல்கள் அளிக்கின்றன. கீர்த்தனைகளின்
சிறப்பம்சத்திற்கு மற்றுமொரு காரணம் இவை இறையியல் கருத்துகளை மிகவும் எளிமையாகத்
தருகின்றன. வேதவாசிப்பு, ஜெபம் ஆகியவை
நமக்கு எவ்வாறு ஆறுதலும் அமைதியும் தருகின்றனவோ அதேபோன்று கீர்த்தனைகளைப்
பாடுவதாலும், அவற்றின் மூலம்
விண்ணப்பங்களை ஏறெடுப்பதாலும் ஆன்மிக அமைதியும் இறையுணர்வும் பெறமுடிகின்றது.
கீர்த்தனைகளைப் பாடிய கவிஞர்கள் கிறிஸ்துவின்
மீது கொண்ட பக்தியாலும் பற்றுறுதியாலும் பல்வேறு விதமான சூழல்களில் கீர்த்தனைகளைப்
பாடியுள்ளனர். வேதநாயக சாஸ்திரியார் முதல், நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைக் கவிஞர்கள் கீர்த்தனைகள்
படைத்துள்ளனர். கிறித்தவர்கள் அனைவருக்கும் விவிலியத்திற்கு
அடுத்த நிலையில் இக்கீர்த்தனைகள் காணப்படுகின்றன. தமிழில் இக்கீர்த்தனைகள் இயற்றப்பட்ட சூழலை அறிவது
மிகக் கடினமாக உள்ளது. சுமார் பத்து கீர்த்தனைகளின் பின்புலத்தையே இன்று முழுமையாக
அறிய முடிகிறது. இன்று பல நூல்களிலுமாக
சுமார் 2200 கீர்த்தனைகள்
கிடைக்கின்றன. இக்கீர்த்தனைகளை அழிந்து விடாமல் பேணிக் காக்கவேண்டியது நமது
கடமையாகும்.
இன்று பெரும்பாலான ஆலய வழிபாடுகளில் ஒரு
கீர்த்தனை மட்டுமே இடம்பெறுகிறது. சுமார் 400 கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ள கீர்த்தனைகள் நூலில் அனைவருக்கும்
பொதுவாகத் தெரிந்த கீர்த்தனைகள் சுமார் 100 எனலாம். இவற்றுள் குறிப்பிட்ட சில கீர்த்தனைகளையே திரும்பத் திரும்பப்
பாடுகின்றனர். இதற்கு என்ன காரணம் எனக் கேட்டால், இராகம் தெரியாது எனப் பதிலிறுக்கின்றனர். இதனால் ஒரு
தலைமுறை மாறும் போது இன்னும் பல கீர்த்தனைகளின் இராகம் மறந்து போய்விடும் என
உறுதியாகக் கூறலாம்.
இன்று சிலருக்கு கீர்த்தனைகளின் இராகங்களை
மாற்றிப் பாடுவது வழக்கமாகி விட்டது. இது முற்றிலும் தவறான செயல்முறையாகும்.
அக்காலத்தில் கீர்த்தனைகளை இயற்றியோர் அக்கீர்த்தனைகளின் கருத்து, சூழல், நயம் ஆகியனவற்றை மனதில் கொண்டு அதற்குரிய இராகம், தாளம் ஆகியனவற்றை அமைப்பர். அன்றைய கவிஞர்கள் இலக்கியப்
புலமை, இலக்கணப் புலமை, விவிலியப் புலமை, இசைப் புலமை ஆகியவைகளை உடையவர்களாக விளங்கினர். ஆனால்
இன்று இப்புலமைகள் இல்லாமல்
கீர்த்தனைகளின் இராகங்களைத் துணிந்து மாற்றுகின்றனர். இராகம் என்றால் என்ன என்று
தெரியாதவர்கள் இச்செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய இராக மாற்றங்கள் சபைகளிலும்
தனியாரிடமும் நடந்து வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதன் அடிப்படையில் இன்று கீர்த்தனைகளை மையமாகக்
கொண்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதாவது, இன்று கிறித்தவப் பாடல்களைப் போட்டி போட்டுக் கொண்டு பலரும்
குறுந் தகடுகளில் (சி.டி.) பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு
கீர்த்தனையை அதற்குரிய இராகத்தில் பாடாமல் புதிதாக ஓர் இராகம் கண்டுபிடித்து,
பாடி, குறுந்தகடுகளில் பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பின்வரும்
சந்ததியினருக்கு ஒரு கீர்த்தனையின் உண்மையான இராகம் எது என்பதனைக் கண்டுபிடிக்க
முடியாத சூழல் உருவாகி, கீர்த்தனைகளைப்
பாடி வரும் வழக்கம் குறையத் தொடங்கும். இவ்வாறு பணத்திற்காக கிறித்தவக்
கீர்த்தனைகளை வியாபாரம் செய்வதினால் எதிர்காலத்தில் கீர்த்தனையின் பயன்பாடு
மிகவும் குறைந்து விடலாம். இன்று உணவுகளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்வது
போல் கிறித்தவக் கீர்த்தனைகளிலும் கலப்படம் செய்து வருவது மிகவும்
கண்டிக்கத்தக்கது. இதில் கிறித்தவர்களாகிய நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கீர்த்தனையை நான்கு வெவ்வேறு வகையானக்
குழுக்கள் பாடி குறுந்தகடுகளில் வெளியிடும்போது, ஒவ்வொரு குழுவினரும் ஒரே கீர்த்தனையை வெவ்வேறு இராகத்தில்
பாடியுள்ளனர். இக்கீர்த்தனையைக் கேட்பவர்களின் நிலையை நாம் யோசித்துப் பார்க்க
வேண்டும்.
விவிலியமும் ஞானக் கீர்த்தனைகளும்
கிறித்தவர்களின் இரு கண்களாகும். கிறித்தவர்களுக்கு இரு நூல்களும் புனித
நூல்களாகும். கீர்த்தனைகளைப் பாடி விவிலியத்தைப் படிப்பதால் மன பாரங்கள் குறைவது
நாம் அனைவரும் அறிந்ததாகும். விவிலியத்திலுள்ள ஓர் எழுத்தைக்கூட மாற்றக் கூடாது
என்னும் கட்டளையைப் பின்பற்றி வாழும் நாம், விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட
கீர்த்தனைகளின் இராகத்தை எவ்வாறு மாற்றலாம்? இது தேவனுக்கு விரோதமான செயலாகும்.
இன்னும் ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடலாம். பல
நிறுவனங்கள் கீர்த்தனைகளை மறுபதிப்பின் மூலம் வெளியிடும் போது கீர்த்தனைகளின்
இராகம், தாளங்களை மாற்றி
விடுகின்றன. இச்செயல்பாடு வேண்டும் என்று நிகழ்கின்றதா? அல்லது தெரியாமல் நிகழ்ந்து விடுகின்றதா? எனத் தெரியவில்லை. அருள்திரு. சான்ட்லர் பதிப்பித்து வெளியிட்ட (1901) ஞானக் கீர்த்தனைகள் என்னும் நூலிலுள்ள சில
கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின்
பெயர்களுக்கும் இன்று வெளியாகும் நூல்களிலுள்ள
சில கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின்
பெயர்களுக்கும் வேறுபாடு உள்ளது. இதுவும் கண்டிக்கத்தக்கதாகும். நூற்றாண்டுகள்
செல்லச் செல்ல கீர்த்தனைகளின் இராகம், தாளங்களின் பெயர்களும் மாறிவிடும். எனவே கீர்த்தனைகளைப் பதிப்பிப்பதில்
மிகவும் கவனம் தேவை.
இன்று சிலர் மட்டும் கீர்த்தனைகள் அழிந்து
விடக்கூடாது என்றும் கீர்த்தனைகளின் உண்மையான இராகம், தாளம் மாறி விடக்கூடாது என்றும் பாடத் தெரியாத
கீர்த்தனைகளைப் பாடிக் காட்டியும் கீர்த்தனைகளைப் பாடப் பயிற்சியளித்தும் கீர்த்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பியும் அறிவுறுத்தியும் வருகின்றனர்.
இவ்வூழியம் மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஒவ்வொரு பேராயத்திலும் ஊழிய
வாஞ்சையுடன் இத்தகைய அமைப்புகள் ஏற்படுத்தி, கீர்த்தனைகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். இது
கிறித்தவர்கள் ஒவ்வொருவரின் முக்கியக்
கடமையாகும். போதகர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அருளுரையாற்றும் போது கீர்த்தனைகளின்
சிறப்புகளைக் குறித்தும் சபையினருக்கு எடுத்துரைக்க வேண்டும். நாமும் நமது
இல்லங்களில் தினமும் கீர்த்தனைகளைப் பாடி இறைவனைத் துதிப்போம்.
No comments:
Post a Comment