வெளியீடு: மோரியா ஊழியங்கள், சென்னை. அலைபேசி 9444961106.
பக்கங்கள் 400; விலை ரூ. 300/-
அருள் நாதர் இயேசு கிறிஸ்துவின்
அன்பையும் அருளையும் அவனி முழுவதும் பரப்பிடும் நோக்கோடு அலைகடல் கடந்து
அணியணியாய் திரண்டு சென்ற அருட்தொண்டர்களுள் இறைப்பணியுடன் மட்டுமே நின்று விடாமல்
சமூகப் பணியையும் கல்விப் பணியையும் ஆய்வுப் பணியையும் ஆற்றியவர்கள் அநேகர். அவர்களுள்
தமிழ்ச்சமூகம் மறக்கவே கூடாத மாபெரும் ஆளுமை தான், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட
ஒப்பற்ற அறிஞரும் இருள் படிந்திருந்த தமிழினத்தின் மீது வெளிச்சக்கீற்றுகளைப்
பாய்ச்சி தமிழின் அருமையை உலகிற்கு அம்பலப்படுத்தியவருமான டாக்டர் கால்டுவெல்.
அயர்லாந்து
அண்ணலாம் கால்டுவெல்லின் அயராத பணிகளைப் பேசும் எண்ணற்ற நூல்கள் தமிழில்
வெளிவந்துள்ளன. அவை கால்டுவெல் எனும் கடலின் ஆழத்தை அளக்க முயற்சி
செய்துள்ளனவேயன்றி முழுமையான நூல்களாக அமையவில்லை. கால்டுவெல்லைப் பற்றி
அறிவதற்கான தேடலிலும் ஆய்விலும் தொடர்ந்து ஈடுபட வேண்டிய தேவை
தமிழர்களுக்கிருக்கிறது. கால்டுவெல் பற்றி
இதுவரை தமிழ்ச் சமூகம் அறிந்திராத பல அரிய செய்திகளுடன் வரும் இந்நூல், கால்டுவெல்லின்
பன்முக ஆளுமைத் திறனை வெளிப்படுத்தும் முதன்மையான
நூல் எனலாம்.
தமிழகத்திற்கு
வருகை தந்த கிறித்தவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூல் 27 தலைப்புகளில்
கால்டுவெல்லின் வாழ்க்கையை கண்முன்னே விரித்துரைக்கிறது. நூலை வாசிக்கத்
தொடங்கும்போது அயர்லாந்தின் கிளாடிஸ் ஆற்றங்கரையில் நம் கரம்பிடித்து அழைத்துச்
செல்லும் ஆசிரியர், நூலை முடிக்கும் பொழுது
இடையன்குடியில் கால்டுவெல்லின் கல்லறையில் நம்மை கொண்டுபோய் நிறுத்தி கண்ணீர்
சிந்த வைக்கிறார்.
"இது ஒரு துண்டுப்
பார்வையாக இல்லாமல் சங்கிலிப் பார்வையாக முழுப் பார்வையாக (Holistic
Approach) அமைந்து பன்முக ஆளுமை கொண்ட கால்டுவெல்லின் முழுப்
பரிமாணத்தையும் பல்வேறு கோணங்களில் நின்று படம்பிடித்துக் காட்டியுள்ளது" என்று இந்நூலுக்கு
அணிந்துரை வழங்கிய முனைவர் ஜி. ஜான் சாமுவேல் அவர்கள் குறிப்பிட்டிருப்பதற்கேற்ப
கால்டுவெல்லின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு முக்கிய நிகழ்வையும் தேடித் திரட்டி, இரண்டு
ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியிலேயே தோய்ந்து இடையன்குடி, கொடைக்கானல் போன்ற
பல்வேறு இடங்களுக்கும் சென்று தகவல்களைச் சேகரித்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார்
கால்டுவெல்லின் பணிகளை இறைப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி என்ற
தலைப்புகளில் பொதுவாகப் பேசப்படும் முறைமையில் அல்லாமல், கால்டுவெல் சென்ற
இடங்களில் அங்கு வாழ்ந்த மக்களின் தேவையையும் வாழ்க்கைச் சூழலையும் மனதில் கொண்டு
அவர் ஆற்றிய பணிகளை சென்னையில் கால்டுவெல், இடையன்குடியில் கால்டுவெல், தூத்துக்குடியில்
கால்டுவெல், கொடைக்கானலில் கால்டுவெல் என்று தனித்தனியாகப்
பகுத்து விளக்கியிருப்பது இந்நூலுக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைத்
தருகிறது. கால்டுவெல் அசம்புமலையில் வீடு கட்டி குடும்பத்தினருடன் கோடைகாலங்களில்
வாழ்ந்த திகில் நிறைந்த வாழ்வும் அங்கு நடந்த சோக நிகழ்வுகளும் இன்று அங்கு
காணப்படும் எச்சங்களும் இந்நூலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளன.
கால்டுவெல் பணிகள்
மட்டுமல்லாது கால்டுவெல்லின் மனைவி எலிசா அம்மையாரின் சமூகப்பணிகளையும் இவர்களின்
மூத்த மகள் இசபெல்லா - வயாட் தம்பதியரின் பணிகளையும் இந்நூலில் ஆசிரியர்
விளக்கியுள்ளார். மேலும் கால்டுவெல் எழுதிய
கடிதங்கள், இதுவரை தமிழ்ச்சமூகம் கண்டிராத கால்டுவெல்லின் குடும்பப்
புகைப்படங்கள் ஆங்காங்கு இடம்பெற்று நூலுக்கு அணி செய்கின்றன. 1879 ஆம் ஆண்டு சென்னைப்
பல்கலைக்கழகத்தில் 22 ஆவது பட்டமளிப்பு
விழாவில் கால்டுவெல் ஆற்றிய பேருரை தமிழாக்கம் செய்யப்பட்டு
இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இப்பேருரை இந்நூலூசிரியரின் முயற்சியால் தமிழாக்கம்
செய்யப்பட்டு முதன்முறையாக பொதுவெளிக்கு காணக் கிடைக்கிறது என்பது இந்நூலின்
கூடுதல் தனிச்சிறப்பு.
ஆய்வு என்பது
வெறும் இலக்கியச் சான்றுகளை மட்டும் கொண்டு நடத்தப்பெறாமல் கல்வெட்டுகள்
நாணயங்கள் தொல்லெச்சங்கள் வழியாக நடத்தப்பெற வேண்டும் என்பதை 140 ஆண்டுகளுக்கு
முன்பே கால்டுவெல் வலியுறுத்திக் கூறியிருப்பதை இப்பல்கலைக்கழக உரை
தெளிவுபடுத்துகிறது. பேச்சளவில் மட்டுமல்லாது திருவிதாங்கூர், கொற்கை, காயல் போன்ற
இடங்களில் இவர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் வரலாற்றின் பல புதிய ஆய்வுகளுக்குத்
திறப்பாக அமைந்திருப்பதையும் இந்நூல் விளக்கியுள்ளது.
கால்டுவெல் எழுதிய
நூல்களாக ஆசிரியருக்குக் கிடைத்த 16 நூல்களையும்
குறிப்பிட்டு ஒவ்வொரு நூலுக்கும் விரிவான அறிமுகத்தையும் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணர் பகவத் கீதை பற்றியும் குடுமிக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும்
கிறித்தவத்திற்கும் இந்துசமயத்திற்கும் உள்ள உறவு பற்றியும் கால்டுவெல்
எழுதியுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடும் நூல்கள் கவனம் பெறத்தக்கன.
கால்டுவெல்லின்
ஒட்டுமொத்தப் பணிகளின் மீதான மதிப்பீடாக அமைந்துள்ள இந்நூல், அவர் மீது
வீசப்படும் எதிர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியாகவும் பல புதிய ஆய்வுகளுக்குத்
தொடக்கப் புள்ளியாகவும் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
முனைவர் ஜெ. சுடர்விழி,
சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
No comments:
Post a Comment