Thursday, 8 April 2021

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்

 நூல் அறிமுகம்

 

                           ஆசிரியர் : புலவர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன்

                            பொதுப் பதிப்பாசிரியர் : முனைவர் ஜி. ஜான் சாமுவேல்

                            பதிப்பாசிரியர் : முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்

                            வெளியீடு : ஆசியவியல் நிறுவனம், சென்னை-119

                            பக்கங்கள் : 223,  விலை ரூ. 400/-

                            ஆண்டு : நவம்பர் 2020



    ளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்தை மீள்பார்வை செய்யும்போது, அச்சமுதாயம் அடைந்திருந்த இன்னல்களையும் இழிநிலைகளையும் அதிலிருந்து அது மீண்டு வந்து எழுச்சியுற்ற வரலாற்றினையும் அறிந்து கொள்ளலாம்.  அண்மையில் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம் வெளியிட்ட  விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியத்தை வாசித்து முடிக்கும்போது, தென்திருவிதாங்கூரில் காணப்பட்ட சமூக ஒடுக்குதல்களையும் கிறித்தவ இறைத்தொண்டர்களால் சமுதாயம் மீட்படைந்த நிலையினையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயத்தை மீட்டெடுப்பதில் மயிலாடியைச் சேர்ந்த மகராசன் வேதமாணிக்கம் தேசிகரும் ஜெர்மன் நாட்டினரான அருள்திரு. ரிங்கல்தௌபே அவர்களும் ஒருநிலைப்பட்டு, ஒரே நேர் கோட்டில் தியாக மனப்பான்மையுடன் உழைத்தனர். 

    ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வரக் காரணமாக இருந்ததுடன், அவரது அனைத்து பணிகளும் திறம்பட நடைபெறுவதற்குத் துணை நின்றவர் தாழ்த்தப்பட்ட ஒரு சமுதாயத்தில் எதிர்கால நம்பிக்கைக்குரிய விடிவெள்ளியாக உதித்த மகராசன் வேதமாணிக்கம். அன்றைய தென்திருவிதாங்கூர் இராஜ்ஜியம் மன்னராட்சிக்கு உட்பட்டிருப்பினும் உயர்மட்ட மக்கள் பலரின் இடையீடும் ஆதிக்கமும் நிறைந்திருந்தது. இதனால் மக்கள் பல நிலைகளில் சொல்லொணாத் துரங்களை அடைந்து வந்தனர். பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டது; கீழ் சாதியினருக்குக் கல்வி மறுக்கப்பட்டது; மிகக் கடுமையான வரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர்; உழவர் விளைவித்த நெல் போன்ற தானியங்கள் அரசு அலுவலர்களால் சூறையாடப்பட்டன; ஞாயிற்றுக் கிழமைகளில் அரசாங்கப் பணிகளைக் கூலியின்றிச் செய்ய மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இச்சூழலில்  வேதமாணிக்கம் தேசிகரால் ரிங்கல்தௌபே அழைத்து வரப்பட்டார். 

  ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போன்று  இறைத்தொண்டர்களின் பணியில் ஒரு பக்கம் இறைப்பணியும் மற்றொரு பக்கம் சமூகப்பணியும் அமைந்துள்ளன. இச்சமூகப் பணியில் கல்வியும் மருத்துவமும் குறிப்பிடத்தக்கன. இத்தகையப் பணிகளை ரிங்கல்தௌபே மயிலாடி மண்ணைச் சார்ந்த  மகராசன் வேதமாணிக்கத்தின் துணையுடன் தொடங்கினார். இருவர்களது கூட்டு முயற்சியினால், ஒருமித்த தன்னலமற்ற உழைப்பினால், விதைத்த நல்விதைகளால் தென்திருவிதாங்கூர் மண்ணில் சமய, சமுதாய, பொருளாதார, கலாச்சார விடுதலைகள் துளிர்விடத் தொடங்கின. தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் படிப்படியாக சமுதாய விடுதலை பெற்றனர். "எங்கெல்லாம் மக்கள் கல்வியில், நாகரிகத்தில், பண்பாட்டில் வளர்ந்திருக்கிறார்களோ அந்த இடத்தில் தேடிப் பாருங்கள்; அங்கே ஒரு கிறித்தவ மிஷனெரியின் கல்லறை இருக்கும்" என பேராயர் ஸ்டீபன் நீல் கருத்துரைத்தார். இக்கருத்தினுக்கேற்ப பல மிஷனெரிகளின் கல்லறைகள் நாகர்கோவில், நெய்யூர், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவையனைத்தும் குமரி மாவட்ட சமுதாய வளர்ச்சிக்கு வித்திட்டு, அவற்றை வளர்த்த தன்னலமற்ற புனிதர்களின் நினைவிடங்களாகவே உள்ளன. 

    ரிங்கல்தௌபேயின் பத்தாண்டு இறைப்பணிக்குப் பின்னர், அவர் விட்டுச் சென்ற பணியினை வேதமாணிக்கத்தின் துணையுடன் சார்லஸ் மீட் விரைந்து மேற்கொண்டார். தலைமையகம் மயிலாடியிலிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டு நாகர்கோவிலிலும் நெய்யூரிலும் ஆலயங்கள், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், தையல் நிறுவனங்கள் போன்றன தோன்றி சமுதாய மறுமலர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வித்திட்டன. மயிலாடியில் வேதமாணிக்கத்தின் துணையுடன் தோன்றிய சமுதாயப் புரட்சி, மீட் போதகரின் தலைமையில் காலப்போக்கில் தோள் சீலைக் கலகமாக மாறி, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையினைப் பெற்றுத் தந்தது.

    ஆற்றல் மிக்க மனிதரான வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் தோன்றிய ஒளிப் பிழம்பு, குமரி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வியல் முறைகளையும் மேம்படுத்தியதுடன், காலப்போக்கில் தமிழகமெங்கும் சமுதாய மாற்றங்கள் ஏற்படத் துணைநின்ற ஓர் ஆன்மிகப் பயணத்தை, தியாக யாத்திரையை, கரடு முரடான பாதையில் இயேசு கிறிஸ்து பாரச் சிலுவையைச் சுமந்து சென்றது போன்ற ஒரு பயணத்தைத் தோற்றுவித்துள்ளது. இப்பயணத்தை மீட்டுருவாக்கி மனக்கண்களால் காண்பது போன்ற உணர்வை இந்நூல் ஏற்படுத்துகின்றது. இறைத்தொண்டர்களின் இத்தகைய ஆன்மிகப் பயணங்களையே கிறித்தவ வீரம் (Christian Heroism) என்று கிறிஸ்துவுக்காக வாழ்ந்து மாண்ட புனிதர்களின் வரலாற்று நூல்கள் பேசுகின்றன. 

    தமிழில் சீர்திருத்தக் கிறித்தவத்திலுள்ள ஓர் இறைப்பணியாளரைக் குறித்து வெளிவந்த முதல் காப்பியம் "விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்" என்பதாகும். மகராசன் வேதமாணிக்கத்தைப் பற்றி நூல்கள் பல வந்திருப்பினும், மரபு இலக்கண அடிப்படையில் செய்யுள் நடையில் இக்காவியம் படைக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது. இக்காவியத்தின் ஆசிரியர் புலவர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன், கொட்டாரம் என்னும் ஊரின் அருகிலுள்ள நரிக்குளம் என்னும் ஊரைச் சார்ந்தவர். இக்காவியம் இறைவணக்கம், மொழி வாழ்த்து, நாட்டு வாழ்த்து நீங்கலாக 21 தலைப்புகளுடன் 557 செய்யுள்களைக் கொண்டது. காவியத்தின் தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டின் வளமும்   அதனைத் தொடர்ந்து நாஞ்சில் நாட்டின் அன்றைய நிலமையும் காப்பியக் கதையும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. காவியத்தின் சிறப்புக்கு ஆசிரியர் பழமொழிகளையும் உவமைகளையும் திருக்குறள் கருத்துகளையும் அணிநயங்களையும் வருணனைகளையும் கையாண்டுள்ளார். 

    மகராசன் வேதமாணிக்கம் இன்றும் ஒரு மாமனிதராகப் போற்றப்பட்டு வருகின்றார். தென்திருவிதாங்கூரிலுள்ள சீர்திருத்தத் திருச்சபையின் முதல் கிறித்தவரான இந்த மாமனிதரைக் குறித்து ஒரு காவியம் தமிழில் வெளிவருவது மிகவும் பாராட்டிற்குரியது. சமுதாய மனிதராக மலர்ந்த வேதமாணிக்கம் என்னும் ஒரு தனி மனிதர், மயிலாடி மண்ணில் ஏற்றி வைத்த ஒளி விளக்கு, எவ்வாறு குமரி மாவட்டம் என்ற பரந்துபட்ட நிலப்பரப்பின் பன்முக விழிப்புணர்வு மிக்க வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதனை இந்நூல் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது. 

    குமரி மாவட்டத்தின் சீர்திருத்தத் திருச்சபை வரலாற்றை, சமுதாய வரலாற்றுப் பின்னணிகளோடு விளக்கிப் பேசும் இந்த அரிய நூலினை, தென்னிந்தியத் திருச்சபையின் கன்னியாகுமரி மாவட்டப் பேராயர் பேரருள்திரு. அறிவர்   A.K. செல்லையா அவர்கள் கானொளி மூலம் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்த, இவ்வெளியீட்டு விழாவில் கிறித்தவத் தமிழிலக்கிய, இறையியல் அறிஞர்களான அமெரிக்க நாட்டைச் சார்ந்த முனைவர் பிரான்சிஸ், இங்கிலாந்து நாட்டு லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழக உலகக் கிறித்தவத்துறைப் பேராசிரியர் முனைவர் அருள்திரு. டானியல் ஜெயராஜ், ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் ஜி. ஜான் சாமுவேல், நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் ஜேம்ஸ் ஆர். டானியல், மும்பையிலுள்ள திராவிடர் மறுமலர்ச்சி மையத் தலைவர் பேராயர் ரவிக்குமார், சென்னை ராணி மேரிக் கல்லூரி மேனாள் ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் அமுதா பாண்டியன், இந்நூலின் பதிப்பாசிரியரும் சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த்துறையின் மேனாள் தலைவருமான முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன் ஆகியோர் இந்நூலின் சிறப்பினையும் தனித்தன்மையினையும் பல்வேறு கோணங்களில் விளக்கியுரைத்தனர். 

                                        யோ. ஞான சந்திர ஜாண்சன்


No comments:

Post a Comment