ஓர் இலக்கியத்தைப்
படைப்பவன் பல்வேறு உத்திகளைக் கொண்டு படைக்கும்போது, அவ்விலக்கியம்
வாசகனுக்கு இன்பம் பயப்பதாக அமைகின்றது. இவ்வுத்திகளில் ஒன்று நாயகன் நாயகி பாவம். கவிஞன் அல்லது படைப்பாளன்
இறைவனைத் தலைவனாகவும் (நாயகன்), பக்தர்களை அல்லது தன்னைத் தலைவியாகவும்
(நாயகி) எண்ணிப் பாடுவது தமிழ் இலக்கிய உலகில் பின்பற்றப்
பெற்றுவரும் மரபு. திருநாவுக்கரசர், ஆண்டாள் போன்றோரால் பாடப்பெற்ற நாயகன் நாயகி பாவம்
என்னும் இறைக்காதல் மரபு, தமிழ் இலக்கிய மரபில் சிறப்பித்துக்
கூறப்பட்டுள்ளது.
ஆன்மாவாகிய தலைவி இறைவனை அடையத் துடிக்கிறாள்; தலைவனின் வருகைக்காக, அவனைக் காண
விரும்பி ஏங்குகிறாள். இதுவே நாயகன் நாயகி பாவம் என்பதன் மையக்கருத்து. இந்த உறவு
நிலைகளைப் பேரின்பக்காதல் அல்லது
இறைக்காதல் (Bridal
Mysticism) எனவும்
குறிப்பிடுவர். நாயகன் - கடவுள்; நாயகி - ஆன்மா. உடலுக்குத் தெரிந்த ஓர் அனுபவத்தைக்
கொண்டு உள்ளம் உணரும் ஓர் உயர் நிலை அனுபவத்தைத் தெரிவிப்பதுவே
இதன் அடிப்படை.
விவிலியத்திலுள்ள உன்னதப்பாட்டு, ஏசாயா நூலிலுள்ள பல பகுதிகள், எசேக்கியேல் நூலின் சில பகுதிகள், வெளிப்படுத்தின
விசேஷம் நூலின் சில பகுதிகள் நாயகன் நாயகி பாவத்தில் அமைந்துள்ளன.
உன்னதப்பாட்டை எழுதிய சாலமோன் அரசன்
காலத்திலிருந்தே, நாயகன் நாயகி பாவம் என்னும் அமைப்புமுறை நிலவி வந்துள்ளது. சாலமோன் அரசனின்
காலம் கிறிஸ்துவுக்கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தையது.
நாயன்மார்களும் ஆழ்வார்களும்
பின்பற்றிய நாயகன் நாயகி பாவத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் இறைவன் மணவாளனாகவும், மனித ஆன்மா மணப்
பெண்ணாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. நாயகன் நாயகி பாவத்தில்
இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா என்னும் பெண்ணின் உணர்வுகளும் பிரிவுத்
துன்பங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. மணவாளனாகத் திகழும்
இறைவனின் உணர்வுகள் வெளிப்படுவதில்லை. இதன் அடிப்படையில்
ஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், ஆண்டாள் ஆகியோர் நாயகன்
நாயகி மரபைப் பின்பற்றியுள்ளனர். மாணிக்கவாசகரின் திருக்கோவையில் இறைவன் பெண்ணாகவும், ஆன்மா காதலனாகவும்
இம்மரபு மாற்றப்பட்டு உருவகம் செய்யப்பட்டுள்ளது. இதில் காதலனாகிய
ஆன்மாவின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
….. ……
….. …… ……
…… ……
தலைப்பட்டாள் நங்கை
தலைவன் தாளே (பதிகம் 239, பா.7)
என்னும்
திருநாவுக்கரசரின் தேவாரத்தில் இடம்பெற்றுள்ள பாடலும்,
மத்தளம் கொட்ட
வரிச்சங்கம் நின்றூத
….. ……
….. …. ……..
…….
கைத்தலம் பற்றக் கனாக்
கண்டேன் தோழீ! நான் (பா.6)
என்னும் நாச்சியார்
திருமொழியில் இடம்பெற்றுள்ள ஆண்டாளின் பாடலும் வெளிப்படையாக நாயகன் நாயகி
பாவத்தில் அமைந்திருப்பதற்குச் சான்றுகள்.
தமிழ் இலக்கிய அக மரபிலும், பக்தி மரபிலும், விவிலியத்திலும் ஆழங்கால்பட்ட கிறித்தவத்
தமிழ்ப் புலவர்கள், இயேசு கிறிஸ்துவை மணவாளனாகவும், ஆன்மாவை -
திருச்சபையை மணவாட்டியாகவும் கொண்டு, இறைக்காதல் மரபான நாயகன்-நாயகி பாவனையில் பேரின்ப பக்தியை
விவரித்துள்ளனர்.
கிறித்தவ இலக்கிய மரபில் இயேசு கிறிஸ்துவைக் காதலனாகவும், திருச்சபையைக்
காதலியாகவும் பாடுவது நாயகன் நாயகி பாவம். அதாவது இறைவனை மணவாளனாகவும்
திருச்சபையை மணவாட்டியாகவும் சுட்டுவர். கிறித்தவ இலக்கிய வகைமைகளில் சிற்றிலக்கியங்கள், கீர்த்தனைகள்
ஆகியவற்றில் இறைக்காதல் மரபுகள் பின்பற்றப்பட்டுள்ளன. கிறித்தவ
இலக்கியப் படைப்பாளர்களுள் வேதநாயக சாஸ்திரியார் கிறிஸ்துவைக் காதலனாகவும் திருச்சபையைக் காதலியாகவும் ஏற்றுப்
பாடுகின்ற உலக இலக்கிய மரபைப் பின்பற்றும் பேரின்பக் காதல் அல்லது இறைக் காதல் சார்ந்த தமிழ்ப்
பாடல்களைப் பாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பிற சமய இலக்கியங்களில் இறைவனை ஆணாகவும் ஜீவான்மாவைப் பெண்ணாகவும்
உருவகிக்கும்போது ஜீவான்மாவாகிய பெண்ணின் காதலே பேசப்படுகிறது. ஆனால் ஜீவான்மாவாகிய
பெண்ணின் காதலுக்கு இணையாக பரமான்மாவாகிய இறைவன் ஜீவான்மாவின் மீது கொள்ளும்
காதலும் சாஸ்திரியாரின் பாடல்களில் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளது. சாஸ்திரியார் தமது இறைக்காதல் பாடல்களில் விவிலியத்தில் வரும் உன்னதப்பாட்டு மரபுகளைத் தமிழில் பல மாற்றங்களுடன்
வடிவமைத்துள்ளார்.
விவிலியத்தில் இறைக்காதல்
விவிலியத்திலுள்ள பழைய, புதிய
ஏற்பாடுகள் இரண்டிலும் நாயகன் நாயகி பாவங்கள் இறைப்பக்தி நிலையில்
உள்ளன. சாலமோனின் உன்னதப்பாட்டு தெய்வீகக் காதலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. இறைவனைக் கணவனாகவும், ஆன்மாவை
மனைவியாகவும் எடுத்துரைக்கும்
விவிலியப் பகுதிகள் பழைய
ஏற்பாட்டில் உள்ளன. சான்றாக, “நித்திய விவாகத்திற்கென்று உன்னை நியமித்துக்
கொள்ளுவேன். நீதியும் நியாயமும், கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு
நியமித்துக் கொள்ளுவேன். நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவாய்” (ஓசியா 2:19,20) எனவும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இந்த
பக்திநிலை கிறிஸ்துவை மணவாளனாகவும் திருச்சபையை மணவாட்டியாகவும் குறிப்பிடுகின்றது. இந்த உறவின்
மேன்மையினைப் பவுலடியார் எபேசியர் 4:26-32 இல் தெளிவாக எடுத்தியம்பியுள்ளார்.
I சிற்றிலக்கியங்களில் . .
.
வேதநாயக சாஸ்திரியார்
இறைக் காதல் மரபைப் பின்பற்றி பெத்லகேம்
குறவஞ்சி, ஞான
அந்தாதி,
ஞான உலா, ஞானக்கும்மி, ஆரணாதிந்தம், கலியாண
வாழ்த்துதல் என்னும் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
1. பெத்லகேம் குறவஞ்சி
இந்நூலில் உலா வரும்
நாயகன் இயேசு கிறிஸ்து ஆவார். இயேசு கிறிஸ்துவின் மீது காதல் கொள்ளும் நாயகி
தேவமோகினி எனப்படும் சீயோன் மகளாகிய திருச்சபையாகும். இப்பகுதியானது
தலைவியானவள் தலைவனைக் கூடுவாள் என்னும் நம்பிக்கையுடன் முடிவுறும். பெத்லகேம் குறவஞ்சியின்
இறுதிப் பகுதியில் இடம் பெற்றுள்ள சிங்கனும் சிங்கியும் மணவாளனாக இயேசு
கிறிஸ்துவையும் மணவாட்டியாக திருச்சபையையும் குறிப்பது போன்று சாஸ்திரியார்
படைத்துள்ளார். சாஸ்திரியாரின்
பாடல்களில் காதலனைப் பிரிந்து, பிரிவுத் துயரால் துடிக்கும் காதலியைப் போன்று, காதலியின் பிரிவினைப்
பொறுக்க முடியாமல் இயேசு கிறிஸ்துவும் ஏங்கித் தவிப்பதைக் காணமுடிகின்றது. இத்தகைய நாயகன் நாயகி
பாவம் என்னும் பொருண்மையில் அமைந்த பாடல்களில், கூடலின் மகிழ்ச்சியைவிட
பிரிவால் ஏற்படும் சோகமே
அதிகமாக இழையோடுவதைக் காணமுடிகின்றது. கிறிஸ்து பெருமான்
மக்களிடம் எல்லையற்ற அன்பை எதிர்பார்க்கின்றார். ஆனால் அது
கிடைக்கவில்லை. எனவே
இயேசு கிறிஸ்துவைத் துன்பப்படும் காதலனாகவே தம் பாடல்களில் சாஸ்திரியார்
படைத்துள்ளார்.
2. ஞான அந்தாதி
ஞான
அந்தாதியில்
இறைக்காதல் என்னும் பொருண்மை
முழுமையாக மலர்ச்சி பெற்றுள்ள நிலையில் உள்ளது. இந்நூல்
ஞான மணவாளனாகிய
கிறிஸ்துவை, ஞான
மணவாட்டியாகிய திருச்சபை அடையத் துடிக்கும் செய்தியையும், தலைவியின் துன்ப
நிலையையும் கருவாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலின் காப்புச் செய்யுளில்,
ஞான மணவாளனின்மேல்
நாயகி கொண்டாள் காதல்
வான மணவாளன் மகிழவே - யானதனை
உன்னதக்கீ தத்துரையாய்
ஓதினன் நூறின் கவிக்குக்
கன்னி மகன் பாதமலர்
காப்பு
எனப் பாடுகிறார். விவிலியத்திலுள்ள
உன்னதப்பாட்டை, ஞான
அந்தாதிக்கு முதனூலாகக் கொண்டதை இக்காப்புப் பாடல் புலப்படுத்துகிறது. இதில் ஞான
மணவாளன், வான
மணவாளன் என்னும் பெயர்கள் இயேசு கிறிஸ்துவையும், நாயகி என்னும் சொல் திருச்சபையையும் உன்னத கீதம் என்னும்
சொல் சாலமோனின் உன்னதப்பாட்டு என்னும் நூலையும் குறிப்பனவாகும். ஞானமணவாட்டி, ஞானமணவாளனைப் பல
இடங்களில் தேடியும் காணாது தவிக்கின்றாள். இந்நிலையினை
சாஸ்திரியார்,
இளைத்தனள் உத்தம மேய்ப்பனைத்தேடி
இருதயத்தில்
களைத்தனள் சீவதண்ணீர் தனைநாடிக்
கணையதனாற்
குழைத்தனள் சந்தனஞ் சாந்துசவாதொடு
கோதைமின்னாள்
வளைத்தனண் மஞ்சண் மணவாடை
பூசிமயங்கினளே
எனப் பாடுகிறார். ஞான அந்தாதியில் பாவத்தால்
பிரிந்த தலைவி இறுதியில் தலைவனுடன் இணைகிறாள். ஞான அந்தாதியிலுள்ள
நாயகன் நாயகி பாவம் ஜி.சே. வேதநாயகரின் நித்தியானந்தக் காதல் என்னும்
சிற்றிலக்கியத்துடன் ஒப்பிட்டு நோக்கும் வகையில் அமைந்துள்ளது.
3. ஞான உலா
ஞான
உலாவில்
நாயகன் நாயகி பாவத்தில் இடம்பெற்றுள்ள தலைவியின் நிலை,
அன்று தொட்டின்று
முதலளவும் அவராவலினால்
ஒன்றும் கருதலையே
ஊணுமில்லை உறக்கமில்லை
என்றும் என்மேற்பகை
கொண்டனன் நான்இனியென் செய்குவேன்
நான்சொல்வாரிலை
சொல்லார்க்கு நானொரு நங்கையே
என
விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் இறுதியிலுள்ள
31
கண்ணிகளை உடைய சுந்தர ஞாயம்
மற்றும் 36 கண்ணிகளை
உடைய விண்ணப்பம் என்னும் இரண்டு பகுதிகளும் திருச்சபையாகிய காதலி, இயேசு கிறிஸ்துவாகிய
காதலனிடம் கேட்கும் வேண்டுதல்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. சாஸ்திரியார் இந்நூலில்
இயேசு கிறிஸ்துவைத் தலைவனாகவும் அவர் பவனி வரும்போது தன்னையே ஒரு தலைவியாகவும்
பாவித்து, இயேசு
கிறிஸ்துவைப் புகழ்வதையும், பக்தனான தன்னுடைய துன்பத்தை எடுத்துரைத்து இறைவனின்
அருளை வேண்டுவதையும் மையப் பொருளாக அமைத்துள்ளார்.
4. ஞானக்கும்மி
இந்நூலில் சாலமோனின் உன்னதப்பாட்டுக்கு நிகராக
இயேசு கிறிஸ்துவாகிய ராஜா, திருச்சபையாகிய சீயோன் குமாரத்தியை மணந்து கொள்வது உருவகமாகப்
பாடப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் வகுப்பில் சீயோன் குமாரத்தி, இயேசு ராஜா எருசலேமுக்குள்
பிரவேசிக்கும் மகிமையான பவனியைப் பாடுகிறாள். விவாகக் கும்மி என்னும் நான்காவது வகுப்பில்
தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணத்தின் மகிமை விவரிக்கப்படுகிறது.
5. ஆரணாதிந்தம்
ஆரணாதிந்தம் என்னும் நூலில்
மணவாளன் மனைவியைச் சந்தித்தல், மனைவியின் அழுகை கூறல், மனைவியைத் தேற்றல், மனைவியைத் தடுத்தல், மணவாளன் கதவைத் தட்டல், மனைவி பாங்கியோடு
உரைத்தல், மனைவி
மணவாளனைத் தேடல், மனைவி
தெளிதல், மணவாளனுக்கும்
மனைவிக்கும் உரையாடல், மணவாளன்
மனைவியை அழைத்தல் என்றவாறு பலவகைகளிலும் இறைக்காதல் பாடப்பட்டுள்ளது.
6. கலியாண வாழ்த்துதல்
கலியாண வாழ்த்துதல் என்னும்
நூல் சீயோன் மலை மீதில் இயேசு கிறிஸ்துவாகிய மணமகனுக்கும், திருச்சபையாகிய மணமகளுக்கும்
நடைபெறவிருக்கும் தெய்வீகத் திருமணத்தை நினைவுபடுத்துகிறது. இந்நூல் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாகிய பரிசுத்த எருசலேம்
என்கின்ற பெரிய பட்டணத்தின் நினைவுகூருதலுக்கென்று இரண்டு பங்குகளாக அமைந்துள்ளது.
மணமகனை 95 உருவகப் பெயர்கள் சூட்டி வாழ்த்துகிறார். மணமகளுக்கு 50க்கும் மேலான அணிகலன்களையும்,
மணமகனுக்கு 20 பொன்னணிகளையும் அணிவித்து மகிழ்கிறார்.
7. நித்தியானந்தக் காதல்
அருள்திரு. ஜி.எஸ். வேதநாயகர் 800 கண்ணிகளாலான
நித்தியானந்தக் காதல் என்னும் பேரின்ப நூலைப் படைத்துள்ளார். வேதநாயக
சாஸ்திரியாரின் பேரின்பக் காதல் நூலையொட்டி இந்நூல் அமைந்துள்ளது. நித்திய ஆனந்தத்தின் மீது ஏற்பட்ட காதலை
வெளிப்படுத்துவதால் இந்நூலுக்கு நித்தியானந்தக் காதல் எனப் பெயரிடப்பட்டது. பத்தா, பாரியை ஆகிய தலைப்புகளிலமைந்த
கண்ணிகளில் இறைக் காதல் மரபுகள் இடம்பெற்றுள்ளன. பின்வரும்,
இன்பத்திருப்பிடமாய் என்துயரில்தாரகமாய்
நம்பிநான்வாழ்ந்தவென்றன் நாயகரைக்காண்பதெப்போ (660)
தேவசுதனுக்கும் திருச்சபைக்குமுள்ளஅன்பின்
பாவனையாமென்னாசை பைங்கிளியைக்காண்பதெப்போ (705)
என்னும் கண்ணிகளில் பேரின்ப ஏக்கத்தை உணர்ந்து
கொள்ள முடிகின்றது.
8. அருட்குறள்
அருட்குறளில் முனைவர் வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் காதல்
சிறப்பு, பெண்ணின் மாட்சி, காதலனைப்
புகழ்தல், காதலியைப் புகழ்தல், மேய்ப்பனும்
காதலியும் உரையாடல் என்னும் அதிகாரங்களில் பேரின்பத்தைப் பாடுகிறார். காதலனைப்
புகழ்தல் என்னும் அதிகாரத்தில்,
என்னைப் பிடித்திழுப்பாய் இன்பனே! பின்னலாய்ப்
பின்னிப் பிரியேன் நான் பின்பு (1141)
என்று விண்ணகக் காதலன் இயேசுவைப் பின்பற்றுதலைப் பாடுகின்றார்.
9. சாலமோன் திருவருட் கோவை
பேராசிரியர் பவுல் இராமகிருஷ்ணன் இயற்றிய சாலமோன் திருவருட் கோவை என்னும் சிற்றிலக்கியம் கிறித்தவ அகப்பொருள் இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்நூலின் மூல நூலாக விவிலியத்தில் இடம்பெற்றுள்ள உன்னதப்பாட்டு அமைந்துள்ளது. உன்னதப்பாட்டின் உட்பொருள் பேரின்பமாகும். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கும் பாலமாக உன்னதப்பாட்டு விளங்குகிறது என்பர். விவிலியத்திலுள்ள மணவாளன், மணவாட்டி என்னும் பேரின்ப உறவு சாலமோனின் திருக்கோவையில் அகப்பொருள் இலக்கிய மரபுகளுடன் முழுமை பெற்றுள்ளது. இச்சிற்றிலக்கியத்தின் முடிவில் எட்டாவது இயலில் ஆசிரியர் கொடுத்துள்ள, “இறைவனின் நீங்கி இன்னலுற்ற ஆன்மா ஆவியானவரின் திருவருளால் தலைவனையறிந்து அவனோடு கலந்து இடையறாது இன்புறும் நிலையை எய்துகிறது. ஏதேன் தோட்டத்தில் இழந்த உயிர்க் கனியைப் பெற்று ஈறிலாப் பெருவாழ்வு அடைகிறது” என்னும் விளக்கம் நூலுக்குச் சிறந்த அணிகலானாகவும் மையப்பொருளை எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
II கீர்த்தனைகளில் . . .
சில கிறித்தவக் கீர்த்தனைகளிலும் நாயகன் நாயகி பாவம் இடம்பெற்றுள்ளது.
1. வேதநாயக சாஸ்திரியார்
சாஸ்திரியார் தமது
கீர்த்தனைகளிலும் நாயகன் நாயகி பாவம் என்னும் அமைப்பினைச் சிறப்பாகக்
கையாண்டுள்ளார். சான்றாக
தேவதோத்திரப் பாடல்களிலுள்ள 153 ஆவது கீர்த்தனையின் அனுபல்லவி பின்வருமாறு:
வண்ணப் பசுங்கிளியே
யெருசலே மின்
மங்கையே சீயோன்குமாரி
வாலைப்
பிராயத்துல்லாசப் பூங்கோதையே
வந்து நம் தோட்டத்
தெழுந்து குலாவியே
வாழ்ந்து
சுகித்திருப்போ மிருபேரும்
சேர்ந்து களித்திருப்போம்
என் பிரிய
மானே தேனே என் மொழியை
விசு
வாசமாய்க் கேண்மின்
நேசமாய்ச்
சொல்கிறேன்
இதில் சாஸ்திரியார்
நாயகன் நாயகி பாவத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றார். இக்கீர்த்தனையின்
பல்லவி,
அன்னப்புறாவே என்
பின்னேவா நன்புறாவே
அதிரூபவதியெ ன்னுத்தமி பற்பனி
என அமைந்துள்ளது. மேலும்,
சோபனமே சோபனமே
சோபனப் பெண்காள் சோபனமே
எனத் தொடங்கும்
சாஸ்திரியாரின் கீர்த்தனையில் மங்களம் மங்களமே, உயர்ந்து ஒளி வீசும் அழகான ஞானஸ்நான தெய்வ
தூதுவப் பெண்களுக்கு மங்களமே எனப் பாடுகிறார்.
ஆட்டுக் குட்டிக்குச் சோபனஞ் சோபன
மவர் மனைவிக்குச் சோபனஞ் சோபன
தேட்டக் கணவர்க்குச் சோபனஞ் சோபனஞ்
செல்வக் குமாரிக்குச் சோபனஞ் சோபனம்
என இரண்டாம் சரணம் அமைந்துள்ளது. இச்சரணத்தில் ஆட்டுக்குட்டியானவராகிய குமாரனுக்கு மங்களம், அவர் மனைவியாகிய திருச்சபைக்கு மங்களம், மங்களம். தேற்றரவாளனாகிய ஆவியானவருக்கு மங்களம், செல்வகுமாரியாகிய திருச்சபைக்கு மங்களம் எனப் பாடுகிறார். சாஸ்திரியாருக்குப் பின்னர் வந்த கீர்த்தனைக் கவிஞர்கள் பலரும் இறைக் காதல் மரபில் கீர்த்தனைகள் இயற்றி, தமிழ்க் கிறித்தவ இசைப்பாடல் மரபைச் செழித்தோங்கச் செய்தனர். இம்மரபினை மரியான் உபதேசியார், அருளானந்தம் பிரசங்கியார், தேவநேயப் பாவாணர் போன்றோர் தங்கள் கீர்த்தனைகளில் கையாண்டுள்ளனர்.
2. மரியான் உபதேசியார்
மின்னாள் சீக்கிரம்
வரச் சொன்னாள்
வரச் சொன்னாள்
எனத் தொடங்கும் கீர்த்தனையிலுள்ள சரணங்களில், கவிஞர் மரியான் உபதேசியார், நாயகன் நாயகி பாவத்தை மிக நுட்பமாகக் கையாண்டுள்ளார். மின்னாள் என்பதற்கு மணவாட்டி என்பது பொருள். சபையாகிய மணவாட்டி கிறிஸ்துவின் மீது அன்பு பாராட்டுகிறாள்; சீயோன் மகளானவள் கிறிஸ்துவிடம் காதல் அதிகமாகி, கெஞ்சி விரைவாக தன்னிடம் வரக் கூறுகிறாள்; எருசலேம் மகள் மதி போன்ற முகம் வாடிய நிலையில் அவள் மன ஏக்கத்துடன் இறைவனைத் தேடுகின்றாள். இக்கீர்த்தனையின் கருத்து மணவாட்டி இறைவனைச் சீக்கிரம் வரச் சொல்லுகிறாள் என்பதாகும். இச்சரணங்களில் சபையின் மணவாட்டி, சீயோன் மகள், எருசலேம் மகள் என நாயகியை அறிமுகப்படுத்துகிறார்.
3. அருளானந்தம் பிரசங்கியார்
சாலேமின் ராஜா, சங்கையின் ராஜா ஸ்வாமி
வாருமேன் ஸ்வாமி வாருமேன்; இந்தத்
தாரணிமீதினில்
ராஜ்ஜியம் செய்திட ஜல்தி வாருமேன்
என்னும் கீர்த்தனையில் சீயோனின் பெண்கள் உம்மைத் தேடித் திரிகின்றனர் எனவும், எருசலேம் பட்டினத்துப் பெண்கள் உம்மைத் தேடுகின்றனர் எனவும் நாயகன் நாயகி பாவம் என்னும் பின்புலத்தில் அருளானந்தம் பிரசங்கியார் குறிப்பிடுகின்றார்.
4. தேவநேயப் பாவாணர்
தேவநேயப்
பாவாணர் இயற்றிய கிறித்தவக் கீர்த்தனம் என்னும் நூலில் 51 கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இறுதியிலமைந்துள்ள கீர்த்தனையின் தலைப்பு “ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம்” என்பதாகும். கிறிஸ்து பெருமான்
திருமணவாட்டியாம் திருச்சபையில் மேன்மை பெறுதல் இக்கீர்த்தனையின் மையக் கருத்து. கீர்த்தனைப் பின்வருமாறு:
மழவர் மிகுந் தேவசேனை மகிமையுடன் கூடிமண
முழவறைந்தார் திசைகளெல்லாம் முழங்கிடவே
யீருலகும்
விழவயரு மென்றேயொரு விளம்பரமுஞ் செய்ததென்னே
அழகுயரும் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்.
பரம்பதந் தனைவிட்டுப் பாரின்மிக ஏழையாகிச்
சிரமமுடன் பாரந்தாங்கிச் சிரஞ்சாய்க்க இடமின்றி
மரமதிலே மடலேறி மணமகளை மீட்டெழுந்த
அருவரனாம் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கலியாணம் (பா. 51)
இப்பாடலில் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் இடம்பெற்றுள்ளது. சிலுவை என்னும் மடலூர்ந்து மணமகளாகிய திருச்சபையை மீட்டெடுத்த ஆட்டுக்குட்டியானவருக்குக் கலியாணம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
III காப்பியத்தில் . . .
எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை தமது
இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தில் ஆன்மா தன் மணவாளனாம் மீட்பரைச்
சென்றடைவதற்குத் தவிக்கும் பரிசுத்த காதல் தன்மைகளை தர்மசேத்திரப் படலத்தில்
எடுத்துரைக்கின்றார். இப்படலத்தில் சுமார் 30 செய்யுட்களில்
இப்பரிசுத்த காதல் இடம்பெற்றுள்ளது. தனது ஆன்ம நாயகன் மூட்டிய தெய்வீகக் காதலைப்
பாடுகின்றார். அழுதல், பெருமூச்சு விடுதல், அழுங்குதல், சோர்தல், ஆவலினால் விரைந்து
எழுதல், விழுதல், இரங்குதல், இரு கரம் கூப்பித்
தொழுதல் முதலிய தொழில்களேயன்றி வேறு
தொழிலின்றித் துயருற்றாள். மிகக் கிளர்ந்து எழுகின்ற காதலால் ஏற்பட்டுள்ள கொடிய துன்பம்
மிக்க தீய சிறையிலிருந்து என் நாயகன் என்னை மீட்டு, என்னுடன் பகைத்துப்
போர் செய்யும் உடம்பாகிய கொடிய சிறையிலிருந்தும் என்னை விடுவித்து அணைக்க
வரவில்லையே என்று கூக்குரலிட்டு, அழுது, தன் ஆருயிர் மெலிந்தாள்.
இருண்ட பாதலப் படுகுழியிலிருந்து
என்னைக் கை தூக்கின தன் பேரன்பைப் பல்வேறு சிந்தனைகளால் மறந்து விட்டேனோ என
நினைத்து, மீண்டும்
சற்றே தெளிவுற்று, என்
நாயகன் அனுப்பிவைக்கக்கூடிய தூது ஒன்று வந்து சேர்ந்தால் என்னை மருட்டுகின்ற
புன்மைகள் போய்விடும் என்று நினைக்கத் தொடங்கினாள். ஆன்ம நாயகி என் உயிர் நேசரை நான் முகமுகமாகக்
கண்டு தலைகூடும் நாள் எது என்று ஏங்குகிறாள். மாசற்ற இறைப்பற்றாகிய நோய் தன்னைச் சுடவும், ஆன்மப் பெண்
சுவைமிக்கப் பாலொடு கலந்த உணவு எதனையும் அருந்தவில்லை. காட்டு வேட்டுவர் வலையில் அகப்பட்ட
மானைப் போலக் கலங்கிப் பதைத்தாள்; உடலும் உயிரும் துடித்து உள்ளமும் குலைந்தாள். அவள்
தன்னுடைய தலைவராகிய இயேசு பிரானின் அருள் நிறைந்த உருவெளித் தோற்றத்தைக் கண்டு அயர்வுற்றாள். ஒளி விளங்குகின்ற அவருடைய
திருமுகத்தின் அழகில் கலந்து அதில் திளைத்தாள். ’இந்த இழிவான உடலாகிய
சுமை, என்று ஒழியப் பெறுவேன்’ என உள்ளம் வருந்தினாள். மணமகன் மடலூர்ந்து மணமுடிக்கும் பழந்தமிழர் மரபின்படி, ஆன்ம நாயகனாகிய தலைவன், மனுக்குலத்தவரின் பாவங்களைக் கொடிய துன்பமிக்க சிலுவை
என்னும் மடலூர்ந்து, அருள்
உள்ளத்தோடு மேற்கொண்ட திருமணக் கோலத்தை நினைந்து உள்ளம் குழைந்து அழுவாள். இதனை,
ஞால மேவுநர் ஆத்தும
நாயகன்
ஓலமார் குருசு
ஒண்மடலூர்ந்து அருள்
சீல மாகத் திருத்து
திருமணக்
கோலம் உள்ளிக் குழைந்து
உளம்தேம்புவாள் (பா.69)
எனப் பாடுகிறார்.
இவ்வாறு அவள் வருந்தும் காலத்து, “உன் ஆன்ம மீட்பர் உன் மீது காதல் மிகுந்தவராய்
உனக்கான பரிசத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு அன்புடன் இன்று உன்னைத் தேடி
வருகிறார் என்று மாசில்லாத சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்” என்றொரு குரல், திருமண மங்கள இசைக்
கருவிகள் முழங்கும் முத்திப் பொன்னகரில் மாறி மாறி இடைவிடாது ஒலிக்கும் எக்காளத்
தொனிபோல் விண்ணில் எழுந்தது.
இவ்வாறு கிருஷ்ணபிள்ளை
அக இலக்கிய மரபுகளைத் தமது காப்பியத்தில் பின்பற்றியுள்ளார். இப்பகுதியிலமைந்த செய்யுட்கள் முழுமையாகக் காதலன்
காதலி உறவு நிலையில் அமைந்த போதிலும், அது இறைவன் ஆன்மாமீது
கொண்ட காதலை அதிகமாகப் பாடவில்லை. ஆன்மா அல்லது திருச்சபையின் காதலே ஆற்றலுடன்
வெளிப்படுகின்றது. கிருஷ்ணபிள்ளை இப்பகுதிகளைத் தமது இரட்சணிய
மனோகரத்திலுள்ள ஆன்மப் பிரலாபத்திலும் எடுத்தாண்டுள்ளார்.
விவிலியத்தில் உன்னதப்பாட்டு மற்றும் பிற
நூல்களிலுள்ள இறைக்காதல் மரபுகளைப் பின்பற்றி, தமிழ் இலக்கிய மரபின்
பின்புலத்தில் கிறித்தவப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் நாயகன் நாயகி பாவத்தை, இலக்கிய நயம் ததும்பும்
வகையில் படைத்திருப்பது கிறித்தவ இலக்கிய மரபுக்கும், வெற்றிக்கும், சிறப்புக்கும் சான்று.
கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் வேதநாயக சாஸ்திரியாரால் பின்பற்றப்பட்ட இம்மரபு, அவரைப் பின்பற்றிய படைப்பாளர்களின்
படைப்புகளிலும் கையாளப்பட்டு, கிறித்தவ இலக்கியங்களில் ஒரு முழுமை நிலையினை அடைந்துள்ளது எனலாம்.
முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்
No comments:
Post a Comment