Thursday, 9 July 2026

விண்ணோர் பாட்டு (The Divine Comedy)

 

 இத்தாலி நாட்டினரான மகாகவி தாந்தே (1265-1321) அவர்களின் இணையற்ற காப்பியம் “The Divine Comedy” என்பதாகும். இத்தாலிய மொழியில் அமைந்த  இக்காப்பியத்தை, தாந்தே 1307 இல் எழுதத் தொடங்கி 1320 இல் வெளியிட்டார். தாந்தே 1321 செப்டம்பர் 14 இல்  தமது 56 ஆவது வயதில் மலேரியாக் காய்ச்சலால் காலமானார். இக்காப்பியம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.    தமிழில் சுத்தானந்த பாரதியார் இக்காப்பியத்தைத் “திருக்காட்சி” என்னும் பெயரில்  உரைநடையில் மொழியாக்கம் செய்தார்.  இந்நூல் 1940, 1998 ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது. 

21 ஆம் நூற்றாண்டில் கே. சுப்பிரமணியன் அவர்கள் தமிழில், மரபுச் செய்யுள் வடிவில், “விண்ணோர் பாட்டு” என்னும் பெயரில், தாந்தேயின் காப்பியத்தை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் 2009 இல் கோயம்புத்தூரிலுள்ள விடியல் பதிப்பகத்தின் வழியாக, மூன்று தொகுதிகளாக, (439+399+447) 1285 பக்கங்களில் வெளியானது.  இக்காப்பியம் மரணத்திற்குப் பின்னர் ஆன்மா எதிர்கொள்ளும் நிலையையும், கடவுளின் நீதித் தீர்ப்பின் வழியாக ஆன்மாவிற்குக் கிடைக்கும் தண்டனை அல்லது அருட்கொடையைப் பற்றிய படிமத்தையும் விவாதிக்கிறது. (நுண்பொருளைப் பருப்பொருள் மாதிரி உருவகித்துப் பேசுவது படிமம் (imagery)  எனப்படும். படிமம் என்பது நவீன இலக்கியத் திறனாய்விலுள்ள ஒரு சொல் ஆகும்). நரகம், கழுவாய்க் குன்றம் மற்றும் மன்னுலகு ஆகியவற்றின் வழியே செல்லும் தாந்தேயின் பயணத்தைப் பாடுவதாக அமைந்துள்ள இக்காப்பியம், தொடக்கத்தில் பாவத்தை அறிவதையும் அதனை விட்டு விலகுவதையும் (நரகம்), பாவத்திற்காக மனம் வருந்தும் கிறித்தவ வாழ்க்கை முறையையும் (கழுவாய்க் குன்றம்), அதன் தொடர்ச்சியாகக் கடவுளை நோக்கிய ஆன்மாவின் முன்னேற்றத்தையும் (மன்னுலகு) குறியீடாக எடுத்துரைக்கிறது.

காப்பியம் முழுவதிலும் தாந்தேயின் குரல் நமது குரலாகவே ஒலிக்கிறது. காப்பியத் தலைமகனாகிய பயணி தாந்தேயின் கூற்றாகவே இக்காப்பியம் அமைந்துள்ளது. இடையிடையே தாந்தேயின் நேரடிக் கூற்றும் (கவிக்கூற்று) இடம்பெற்றுள்ளன. கத்தோலிக்கக் கிறித்தவ இறையியலின் உயர்வான மெய்ம்மைகளை அடித்தளமாகக் கொண்டே இக்காப்பியம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்காப்பியம் நரகம், கழுவாய்க் குன்றம், மன்னுலகு என்னும் மூன்று காண்டங்களை உடையது. முதல் காண்டம் 34 காதைகளையும் (6436 அடிகள்), இரண்டாம் காண்டம் 33 காதைகளையும் (5777 அடிகள்), மூன்றாம் காண்டம் 33 காதைகளையும் (6037 அடிகள்) உடையது. இக்காப்பியத்தின் மொத்த காதைகள் 100;  மொத்த அடிகள் 18250. ஒவ்வொரு காதையிலும் தொடக்கவுரை, பாட்டு, அரும்பதவுரை, தெளிவுரை மற்றும் விளக்கப் படங்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்கவுரையில் அக்காதையின் சுருக்கம் தரப்பட்டுள்ளது.  காதையைப் பற்றிய புரிதலுக்கு இச்சுருக்கம் துணைபுரிகிறது.    இக்காப்பியம் நிலைமண்டில ஆசிரியப்பாவாலானது. எனினும் ஒரு சில காதைகளில் நிகழ்வுகளின் தேவைக்கேற்ப கொச்சகக் கலிப்பாவும் அமைந்துள்ளது.

முதல் காண்டத்தில் இருள் சூழ்ந்த கானகத்தில்  வழி அறியாது அலைவுறும் தாந்தேக்கு வழிகாட்ட இறையருள் செயலில் இறங்குவதைக் காணலாம். இரண்டாவது காண்டத்தில் கத்தோலிக்க இறையியலில் கூறப்பட்டுள்ள கழுவாய்க் குன்றம் போன்றே மீட்படைந்த ஆன்மாக்கள் இறந்ததற்குப் பின்னர் கழுவாய் செய்யும் இடம் என்பதனை எடுத்துரைக்கிறது. உருவக நிலையில் கழுவாய்க் குன்றம் என்பது மனம் வருந்தித் திருந்துதல் என்பதின் படிமம் ஆகும். மூன்றாம் காண்டத்தில் இறந்த பின்னர் பேறு பெற்ற ஆன்மாக்கள் மன்னுலகத்தில் எவ்வாறு இருப்பார்களோ அவ்வாறே காப்பியக் கதையாடலிலும் காட்டப்பெறுகிறார்கள். தன்னுடைய பிறப்பிட நகரமும் தன்னுடைய உண்மையான இல்லமும் மன்னுலகே என அறியவரும் ஆன்மா, மன்னுலகு இன்பத்தை முன்னதாகவே அனுபவிக்கிறது. உருவக நிலையில் அவ்வாறு அனுபவிக்கும் அருட்பேறடைந்த ஆன்மத்தின் படிமமே மன்னுலகு. (உவமையைப் பொருளாக்கிச் சொல்வது உருவகம் (metaphor)  ஆகும்).

தமிழ் வாசகர்கள் காப்பியத்தின் சிறப்பை ஆழ்ந்து சுவைத்துக் கற்க வேண்டும் என்ற நோக்கில், காப்பியத்தில் காணப்படும் தொடர் உருவகங்களுக்கும், உள்ளுறைகளுக்கும் படிமங்களுக்கும், குறியீடுகளுக்கும் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.    புனிதப் பயணம் மேற்கொள்ளும் தாந்தே என்னும் பயணியின் வழித்துணையாக நரகம் மற்றும் கழுவாய்க் குன்றத்து உச்சி வரையிலும் வரும் விருசிலன் உண்மையான மனிதனாகவே வருகிறான். அதாவது பகுத்தறிவில் சிறந்தவனும், இலத்தீன் மொழிக் காப்பியப் புலவனுமாகிய விருசிலன் பகுத்தறிவின் படிமமாக வருகிறான். பகுத்தறிவு என்னும் உருவகப் பொருளில் அவனது பாத்திரம் அமையவில்லை. கிறித்தவம் தோன்றித் தழைத்து உலகிற்கு நல்வழி காட்டும் என எதிர்வரு நிகழ்வு உரைத்த பெருமைக்குரிய இறைவாக்கினன் என இடைக்காலங்களில் போற்றப்பெற்றவன். உருவக நிலையில் விருசிலன் மானிட ஞானத்தின் படிமம்.

இவர்களும் பிற கதைமாந்தர்களும் நடமாடும் இடங்களாகிய நரகம், கழுவாய்க் குன்றம், மன்னுலகு ஆகிய இடங்களும் மனிதன் இறப்பிற்குப் பின்னர் சென்றடையும் உண்மையான இடங்களாகவே காட்டப்படுகின்றன. விண்ணோர் பாட்டு காப்பியத்தில் வெளிப்படையாகக் காணப்படும் கதை, உண்மை நிகழ்வுகள், கதைமாந்தர்கள் உலகிலே உண்மையாய் வாழ்ந்தவர்கள் என்று உண்மையாக இருந்தாலும், காப்பியம் ஒரு தொடர் உருவகத்தாலானது. தாந்தே என்னும் தனிமனிதன் 14 ஆம் நூற்றாண்டு என்னும் கால எல்லைக்குள் இத்தாலி, குறிப்பாகப் பிளாரன்சு  நகர் என்னும் நிலவியல் எல்லைக்குள் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான விடைகளாகவே காப்பிய நிகழ்வுகளும் அமைந்துள்ளன. இக்குறுகிய கால, நிலவியல் எல்லைக்குள்ளாகவே நரகம், புவி, கழுவாய்க் குன்றம், மன்னுலகு ஆகிய அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

விண்ணோர் பாட்டு காப்பியக் கதையாடலில் பிளாரன்சு நகரக் கவிஞன், மெய்யியலாளன், அரசியல்வாதி, பேதிரையின் காதலன் ஆகிய அனைவருமாக நிறைந்திருக்கும் காப்பியத் தலைமை மாந்தர் தாந்தே. உருவக நிலையில் அவன் கிறித்தவப் பாவியர்கள் அனைவரின் படிமம். அவன் மேற்கொள்ளும் புனிதப் பயணம் அனைத்து ஆத்துமாக்களும் கிறித்தவம் காட்டும் வழிகளில் ஒன்றைத் தேர்ந்து இருளும் தனிமையுமான தீய கானகத்திலிருந்து நீங்கி (பாவ வாழ்க்கையிலிருந்து நீங்கி), கடவுளின் நகரத்தை (City of God)  நோக்கி மேற்கொள்ள வேண்டிய புனித பயணம்.

விண்ணோர் பாட்டு என்னும் இக்காப்பியம் ஓர் ஆன்மிகப் போராட்டம் குறித்த மாபெரும் காப்பியம் மட்டுமல்ல, இடைக்கால இலக்கியப் போக்குகளின்படி அது ஒரு காதல் காவியமும் ஆகும். அது இழந்த காதலைத் தேடிச் செல்லும் ஒரு வீரத் தலைமகனின் கதை. ஆழமான மெய்யியல் கோட்பாடுகளையும் இறையியல் கருத்துகளையும் உள்ளடக்கி, தொடர் உருவகங்களால் ஆகிய தாந்தேயின் காப்பியத்தைத் தமிழில் கவிதையாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது.

 

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

No comments:

Post a Comment