பொதுப் பதிப்பாசிரியர்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்
பதிப்பாசிரியர்: முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்
பக்கங்கள்: 2244; மூன்று தொகுதிகள்
விலை: ரூ. 2200/-
வெளியீடு: ஆசியவியல் நிறுவனம், சென்னை - 600 0119
"கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் - ஓர் ஆய்வுப் பதிப்பு" என்னும் அரிய நூல், சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தின் மூலமாக அண்மையில் வெளிவந்துள்ளது. 2244 பக்கங்களில், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூலில், 2221 கிறித்தவப் பாரம்பரியத் தமிழ்க் கீர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. 190 கீர்த்தனைக் கவிஞர்களின் பெயரிலும் இரட்சணியசேனைப் பாடல்கள், சுருக்கப் பெயர், பாளையங்கோட்டைப் பாடல்கள், பெயர் சுட்டப்பெறாதவை, யாழ்ப்பாணப் பாடல்கள், லுத்தரன் பாடல் என்னும் ஆறு தலைப்புகள் உட்பட 196 தலைப்புகளின் கீழ் இக்கீர்த்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கவிஞர்கள் வெளியிட்ட மூல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கீர்த்தனைகள் எவ்வித மாற்றமுமின்றி, அவர்கள் இயற்றிய அனைத்து சரணங்களுடன் இடம்பெற்றுள்ளன. வேதநாயக சாஸ்திரியார், ஆபிரகாம் பண்டிதர் ஆகியோர் இயற்றிய முத்திரையடிப் பாடல்களும், பல கீர்த்தனைக் கவிஞர்கள் தங்களது கீர்த்தனைகளின் தொடக்கத்தில் எழுதியுள்ள விருத்தம், வெண்பா, கொச்சகம், கலிப்பா போன்றவைகளும் இடம்பெற்று, இத்தொகுப்பு நூலுக்குச் சிறந்த அணிகலன்களாக விளங்குகின்றன. பழைய கீர்த்தனை நூல்களில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ள இராகம், தாளம் போன்றவற்றைத் திருத்தியும், இராகம் தாளம் குறிப்பிடப்படாத கீர்த்தனைகளுக்கு அவற்றிற்குரிய இராகம் தாளத்தைக் கண்டுபிடித்து இடம்பெறச் செய்துள்ளமையும் இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மேலும் ஏறத்தாழ 100 கவிஞர்களின் வரலாறும் இவ்வாய்வுப் பதிப்பு நூலில் கொடுக்கப்பட்டுள்ளது இந்நூலின் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது.
முதல் தொகுதியின் முன்பகுதியில் நூலின் பொதுப்பதிப்பாசிரியர் எழுதிய நுட்பமான ஆழமான விரிவான அணிந்துரையும், பதிப்பாசிரியர் எழுதியுள்ள நெடிய வரலாற்று ஆய்வுரையும், ஆங்கிலத்தில் கீர்த்தனைகள் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள இராகம், தாளம் பற்றிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும், கீர்த்தனைக் கவிஞர்களின் பெயர்கள் அகர வரிசையும் இந்நூலின் பிற அணிகலன்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் அத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கீர்த்தனைகளின் முதலடிகள் அகர வரிசையில் பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தொகுதியில் இடம்பெற்றுள்ள பின்னிணைப்பில் பாடல் எண்களுடன் 2221 கீர்த்தனைகளின் அகர வரிசை, கீர்த்தனைகளின் இராகம் மற்றும் தாளங்களின் அட்டவணை, அரும் சொல் அகராதி, துணைநூல் பட்டியல் ஆகியன 48 பக்கங்களில் இடம்பெற்று நூலுக்கு முழுமையைக் கொடுக்கின்றன.
கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகளில் பழைய தமிழ் இலக்கிய வடிவமும், புதிதாக வந்த கிறித்தவ இறையியல் பொருண்மையும் எவ்வித நெருடலுமின்றி இயல்பாக இணைந்து சங்கமமாயின. கிறித்தவச் சிந்தனைகளையும் வழிபாட்டு நெறிகளையும் எடுத்தியம்பும் மிகப் பொருத்தமான தமிழ் இசை வடிவமாகவே கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் பொலிவு பெற்றுமுள்ளன. நவீன மோகத்தாலும், மேலைநாட்டுக் கலாச்சார ஆதிக்கத்தாலும் கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் காலப்போக்கில் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன. இதனால் கீர்த்தனைகளைப் பாடுவதில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. ஏராளமான இந்தத் தமிழ்க் கீர்த்தனைகள் பயன்பாட்டிலிருந்து மறைந்தன. அழிவு நிலையினைச் சந்திக்கும் இந்தத் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஆசியவியல் நிறுவனம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு, ஆய்வு நெறிமுறைகளுடன் இம்மூன்று தொகுதிகளையும் வெளியிட்டுள்ளது.
ஆசியவியல் நிறுவனத் தொகுப்பு வெளியீடுகளில் இந்நூல் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்நூல் சிறப்பான அச்சமைப்பில், தரமான தாளில், நேர்த்தியான கட்டமைப்பில் ஆசியவியல் நிறுவனத்திற்கேயுரிய தனித்தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது நூலின் சிறப்புக்கு மற்றுமொரு காரணமாகும். கிறித்தவ உலகில் நிலைத்து நின்று போற்றப்படும் ஈடுஇணையற்ற நூலாகத் திகழும் இத்தொகுப்பு நூல், கிறித்தவர்களுக்கு நிலையான ஒரு பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.
Y. நெல்சன் சாம் ராஜ்
No comments:
Post a Comment