நூல் அறிமுகம்
பதிப்பு : விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு, ஏப்ரல் 2023
பக்கங்கள் : 480; விலை : ரூ. 270
நூல் கிடைக்குமிடம் : பேராயப் புத்தக நிலையம், நாகர்கோவில்
18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பல்வேறு கிறித்தவச் சங்கங்களில் குறிப்பிடத்தக்கது இலண்டன் மிஷனெரிச் சங்கம். கடல் கடந்து இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துச் செல்வதைக் குறிப்பிடும் வகையில் மூன்று வெள்ளைப் புறாக்கள் ஒலிவ இலையை அலகில் வைத்துக்கொண்டு பறப்பது போன்று இச்சங்கத்தின் கொடி அமைந்திருக்கும். இந்தக் குறியீடு யாருக்குப் பொருந்திப்போனதோ இல்லையோ ரிங்கல்தௌபேவுக்கு முற்றிலும் பொருந்திப்போனது. ஆம். ரிங்கல்தௌபே என்றால் மணிப்புறா என்று பொருள். இலண்டன் மிஷனெரிச் சங்கத்தின் சார்பாக இறைப்பணியாற்ற ஜெர்மனியிலிருந்து பறந்து தரங்கம்பாடிக்கு வந்த மணிப்புறா தான் ரிங்கல்தௌபே.
1804 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து தமிழைக் கற்று இறைப்பணியாற்றிக் கொண்டிருந்த ரிங்கல்தௌபே போதகரைத் தென்திருவிதாங்கூரின் மயிலாடி என்னும் ஊரைச் சேர்ந்த மகராசன் வேதமாணிக்கம் தங்கள் ஊருக்கு வந்து இறைப்பணியாற்ற வேண்டும் என்றும் அறியாமை, கல்லாமை மற்றும் சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்க, இந்த அழைப்பை ஏற்று 1806 ஆம் ஆண்டு மயிலாடி வந்தவர், திருமணம் செய்து கொள்ளாமல் பத்து ஆண்டுகளாக இறைப்பணியோடு மருத்துவப்பணி, கல்விப்பணி போன்ற சமூகப் பணிகளை ஆற்றி தென்திருவிதாங்கூர் மக்கள் படிப்படியாய் வாழ்வில் முன்னேறக் காரணராய்த் திகழ்ந்திருக்கிறார். மயிலாடி மண்ணில் இவர் தொடங்கிய ஆங்கிலப் பள்ளிக்கூடம் தான், தென்திருவிதாங்கூரில் முதன் முதலாக நிறுவப்பட்ட ஆங்கிலப் பள்ளிக்கூடம். இப்பள்ளிக்கூடத்தின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலையே இன்று நாகர்கோவிலில் சிறப்புடன் மிளிர்ந்து கொண்டிருக்கும் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி என்னும் இந்நூல் தரும் செய்தி வாசிப்போருக்கு வியப்பைத் தரக்கூடும்.
‘திருநெல்வேலி மிஷனின் தொடக்க வரலாறு’ என்னும் கால்டுவெல் நூலும், Ringeltaube the Rishi என்கிற தலைப்பில் அமைந்த வில்லியம் ராபின்சன் நூலும், Church History of Travancore என்கிற தலைப்பில் மயிலாடியைச் சேர்ந்த சி.எம். ஆகூர் எழுதிய நூலும் ரிங்கல்தௌபே போதகரைக் குறித்து செய்திகளைத் தருகின்றன. முழுமையான வரலாற்று நூல் தமிழில் எழுதப்படாமலே இருந்தது. இவ்வெற்றிடத்தை நிறைக்கும் வகையில் இம்மூன்று நூல்களை அடிப்படையாகக் கொண்டும், ரிங்கல்தௌபே எழுதியிருந்த ஏராளமான கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் பயன்கொண்டும் “ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே” என்னும் நூலை விரிவாக எழுதி நூலாசிரியர் யோ. ஞான சந்திர ஜாண்சன் வெளியிட்டிருக்கிறார். ரிங்கல்தௌபே குறித்து அவர் எழுதியிருக்கும் இந்நூல் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, கிறித்தவ சமயத்தவருக்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடியது. 2016 இல் இந்நூலின் முதல் பதிப்பு வந்திருந்த போதும், தொடர்ச்சியான தேடலின் பயனாக ரிங்கல்தௌபே போதகருடன் தொடர்புடைய பல்வேறு வரலாற்று ஆவணங்களையும் படங்களையும் கண்டெடுத்து ஒரு விரிவான பதிப்பை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.
ரிங்கல்தௌபே போதகருடன் எப்போதும் இணைத்துப் பேசப்பட வேண்டியவர் வேதமாணிக்கம். மயிலாடி மண்ணைச் சேர்ந்தவர். இம்மண்ணைக் களமாகக் கொண்டு இறைப்பணியாற்றி வந்ததுடன், ரிங்கல்தௌபேவை இம்மண்ணுக்கு அழைத்து வந்தவரும் இவரே. இவர்கள் இருவரது பணியை நினைகூரும் வகையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மயிலாடியில் “ரிங்கல்தௌபே-வேதமாணிக்கம் அருங்காட்சியகம்” திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மகராசன் வேதமாணிக்கம் வரலாற்றைப் புலவர் நாஞ்சில் நாரண தொல்காப்பியன் என்பவர் காவியமாகப் படைத்துள்ளார். சீர்திருத்தக் கிறித்தவத்தில் ஓர் இறைப்பணியாளரைக் குறித்து வெளிவந்த முதல் காவியம் என்கிற சிறப்பினைப் பெற்றது “விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்”.
“ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தௌபே” என்னும் இந்நூல், ரிங்கல்தௌபே போதகரின் வரலாற்றை மட்டுமல்லாமல் வேதமாணிக்கத்தின் அரும்பணிகளைக் குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. குமரி மாவட்ட சமூக வரலாறு, தென்திருவிதாங்கூரில் சீர்திருத்தக் கிறித்தவம் பரவி வளர்ந்த வரலாறு, இலண்டன் மிஷனெரிச் சங்க வரலாறு ஆகியவற்றையும், ரிங்கல்தௌபே போதகருக்குப் பிறகு மயிலாடிக்கு வந்த கிறித்தவ மிஷனெரிமார்கள் சார்லஸ் மீட், சார்லஸ் மால்ட் ஆகியோர் ஆற்றிய பணிகளையும் பேசுகிறது. தேவவரம் முன்ஷியார், ஜான் பால்மர், அருள்திரு. சி. மாசிலாமணி, சி.எம். ஆகூர் போன்ற மயிலாடியின் எழுத்து வேந்தர்களையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.
ரிங்கலின் கடிதங்கள் அன்பு, மகிழ்ச்சி, உள்ள உறுதி, இறைப்பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும் அதே வேளை, அவர் மனதில் நிலவிய விரக்தி, வேதனை, வறுமை, குழப்பம் ஆகியவற்றை அறியத்தரும் ஆவணங்களாகவும் அமைந்துள்ளன. பத்தாண்டுகள் மயிலாடியில் பணியாற்றிவிட்டு ஐரோப்பாவுக்குத் திரும்ப திட்டமிட்ட ரிங்கல் எங்கே சென்றார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. கடற்பயணத்தில் நோய்வாய்பட்டு இறந்திருக்கலாம் என்றும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் அவர் முடிவைக் குறித்து கூறப்பட்டுள்ளன. அவரை அனுப்பிவைத்த இலண்டன் மிஷனெரிச் சங்கம் கூட, அவர் இறுதிப்பயணத்தைக் குறித்து அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை என்பது கூடுதல் துயர் தருகின்ற செய்தி. அவருக்கென்று இம்மண்ணில் கல்லறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குமரி மாவட்ட சீர்திருத்தக் கிறித்தவர்களின் மனங்களில் அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
முனைவர் திருமதி ஜெ. சுடர்விழி
No comments:
Post a Comment