நூல் அறிமுகம்
பக்கங்கள் : 600 விலை : ரூ. 500
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை
கிறித்தவ சமயம் சார்ந்த 48 தமிழ்க் காப்பியங்களை பற்றிய அறிமுக நூல்; மொத்தம் 11 இயல்கள். முதல் இரண்டு இயல்களில் ஒன்று பொதுவான முகவுரை. இரண்டாம் இயல் கிறித்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற விரிவான கட்டுரை. கடைசி இயல் கிறித்தவக் காப்பியங்களின் தனித்தன்மை பற்றியது. இறுதியில் துணை நூல் பட்டியல். எஞ்சிய ஏழு இயல்கள் திருமறை, கிறிஸ்து வரலாறு, திருமறை மாந்தர் வரலாறு, திருமறை சாரா மாந்தர் வரலாறு, தழுவல், மொழிபெயர்ப்பு, மக்களினம் ஆகியவை பற்றிய 48 காப்பியங்கள். இவையனைத்தும் மரபிலக்கண நெறிப்படி இயற்றப்பட்டக் காப்பியங்கள்.
கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான தேம்பாவணி 1728 இல் எழுதப்பட்டது. அதிலிருந்து 2020 வரை வெளிவந்துள்ள 48 காப்பியங்களைச் சுருக்கமாக இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. இந்தக் காப்பியங்கள் எல்லாம் திருமறை சார்ந்தும், திருமறைத் தொடர்பான மாந்தர்கள் சார்ந்தும், இறைத்தொண்டர்கள் சார்ந்தும் எழுதப்பட்டவை. கத்தோலிக்கக் காப்பியங்கள் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் விலியத்தின் அடிப்படையிலும், சீர்திருத்தக் கிறித்தவக் காப்பியங்கள் சீர்திருத்தக் கிறித்தவர்கள் பின்பற்றும் விவிலியம் சார்ந்தும் படைக்கப்பட்டுள்ளன.
திருமறை வரலாற்றுக் காப்பியம் என்னும் தலைப்பில் ஆறு காப்பியங்கள் வருகின்றன. இவை எல்லாம் திருமறையின் பெருமை பேசுவன. கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள் தலைப்பில் 19 காப்பியங்கள் வருகின்றன. இவை எல்லாமே இயேசுநாதரின் வரலாறு பேசுவன. திருமறைச் சார்பான மாந்தர்கள் பற்றிய காப்பியங்கள் (யோசேப்புப் புராணம், எஸ்தர் காவியம், கன்னிமரி காவியம், அருள்நிறை மரியம்மைக் காவியம், மீட்பரசி, எபிரேயப் பேரழகி எசுத்தார், பவுலடியார் பாவியம்) என ஏழும்; திருமறை சாராத மாந்தர்கள் பற்றிய காப்பியங்கள் (ஞானாதிக்கராயர் காப்பியம், அர்ச். சவேரியார் காவியம், தெய்வசகாயன் திருச்சரிதை, அருள்ஒளி அன்னை தெரேசா, அன்பு மலர் அன்னை தெரேசா, திருத்தொண்டர் காப்பியம், ஞான ஒளி தூய சவேரியார் காவியம், காய பிரான்சிசு காவியம், விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்) என ஒன்பதும் உள்ளன. தழுவல் காப்பியங்கள் தலைப்பில் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் உட்பட நான்கு காவியங்கள் பற்றி வருகின்றன. மொழிபெயர்ப்பு காப்பியங்கள் தலைப்பில் பூங்காவனப் பிரளயம், சுவர்க்க நீக்கம் என்னும் இரண்டு காப்பியங்களைப் பற்றிய விரிவான விளக்கம் இருக்கிறது. ஓர் இன மக்களின் தொன்மை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஏழாவது பகுப்பிலுள்ள மக்களினக் காப்பியத்தில் பரவர் புராணம் பற்றிய அறிமுகம் உள்ளது.
கிறித்தவக் காப்பியங்கள் எல்லாமே காப்பியப் பண்பு உள்ளவை அல்ல. தமிழ் மரபில் தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்திற்கு உட்பட்டவை அல்ல. விதிவிலக்காக தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருத்தொண்டர் காப்பியம் போன்றவற்றைச் சுட்டலாம். தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருத்தொண்டர் காப்பியம் போன்றனவற்றில் கம்பராமாயணம், திருக்குறள் ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. திருத்தொண்டர் காப்பியத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் உவமைகளும் 250 க்கும் மேற்பட்ட பழமொழிகளும் நிறைந்துள்ளன. ஐந்து காப்பியங்களில் கிளைக்கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆறு காப்பியங்கள் வெண்பாவினால் படைக்கப்பட்டுள்ளன. திருத்தொண்டர் காப்பியம், விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம் ஆகியனவற்றில் நாஞ்சில் நாட்டு வருணனை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 19 காப்பியங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்களின் அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளன . இதுபோன்று செய்திகளை நூலாசிரியர் விரிவாகத் தருகிறார்.
காப்பிய ஆசிரியர்களுள் இருவர் அமெரிக்கர்கள்; எழுவர் இலங்கையைச் சார்ந்தவர்கள்; ஐவர் கிறித்தவரல்லாதோர்; இந்த 48 காப்பியங்களில் ஒன்பது காப்பியங்களை இயற்றியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். காப்பிய படைப்பாளிகளில் ஒருவரே பெண். மரபுக் கவிதைகள் அல்லாமல் எழுதப்பட்ட காப்பியங்களையும் நூலாசிரியர் இந்த நூலின் முன்னுரையில் விவரிக்கிறார். உத்தேசமாக 292 ஆண்டுகளில் வெளிவந்த 48 காப்பியங்களை நூலாசிரியர் சேகரித்து இருக்கிறார்.
இந்தக் காப்பியங்களில் பல 19 ஆம்
நூற்றாண்டில் அச்சில் வந்தவை. அதற்குப்பின் நூல் வடிவில்
வராதவையும் உண்டு. இவற்றை ஆவணக்
காப்பகம் வழியும், தனிப்பட்டவர்களின் முயற்சியாலும்
சேகரித்திருக்கிறார். இவற்றில் சில காப்பியங்கள் முற்றுப்பெறாதவையும் உண்டு; செல்லரித்தவையும் உண்டு;
எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடித்துள்ளார். ஒருவகையில் இந்த நூல் கிறித்தவக் காப்பியங்களின் ஆவணம், ஆதாரம்.
ஆசிரியரின் கடின உழைப்பு நூலில் தெரிகிறது.
முனைவர் அ.கா. பெருமாள்
நாட்டுப்புறவியல் ஆய்வாளர்
கிறித்தவக் காப்பியங்கள் - 48
1. தேம்பாவணி - வீரமாமுனிவர் (1728)
2. யோசேப்புப் புராணம்- கூழங்கைத் தம்பிரான் (1795க்கு முன்னர்)
3. கிறிஸ்தாயனம்
- ஜான்பால்மர் (1865)
4. ஞானாதிக்கராயர் காப்பியம் - சாமிநாதர் (1865)
5. திருவாக்குப் புராணம் - கனகசபைப் புலவர் (1866)
6. ஞானானந்த புராணம் - தொம் பிலிப்பு நாவலர் (1874)
7. அர்ச். சவேரியார் காவியம் - அந்தோனிமுத்து நாயகர் (1882)
8. பூங்காவனப் பிரளயம் - சாமுவேல் வேதநாயகம் தாமஸ் (1887)
9. கிறிஸ்து மான்மியம் - ஸ்தொஷ் ஐயர் (1891)
10. இரட்சணிய யாத்திரிகம் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை (1894)
11. சுவர்க்க நீக்கம் - வெ.ப. சுப்பிரமணிய முதலியார் (1895)
12. சுவிசேட புராணம் - சுகாத்தியர் (1896)
13. திருச்செல்வர் காவியம்- பூலோகசிங்க அருளப்ப நாவலர் (1896)
14. பரவர் புராணம் - த. அருளப்ப முதலியார் (1909)
15. ஏசுநாதர் சரிதை - சுத்தானந்த பாரதியார் (1926)
16. திருஅவதாரம்
- மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் (1946)
17. இரட்சகராகிய இயேசு நாதர் - ஞானாபரணம் (1950)
18. நசரேய புராணம் - ஜே.எஸ். ஆழ்வார் பிள்ளை (1950 களில்)
19. சுடர்மணி
- ஆரோக்கியசாமி
(1976)
20. கிறிஸ்து வெண்பா 1000 - கி.மு.ம. மரியந்தோனி (1979)
21. இயேசு காவியம்
- கண்ணதாசன் (1981)
22. அருளவதாரம் - வி. மரிய அந்தோனி (1983)
23. மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காவியம் - பவுல் இராமகிருட்டிணன் (1986)
24. இயேசு புராணம்
- ஈழத்துப் பூராடனார் (1986)
25. எஸ்தர் காவியம் - இராபின்சன் குரூசோ (1986)
26. மகிமையின் மைந்தன் - அன்பம்மாள் ஏசுதாஸ் (1986)
27. கன்னிமரி காவியம் - த. பத்திநாதன் (1987)
28. மோட்சப் பயணக் காவியம் - ஏ.த. ஜோதிநாயகம் (1991)
29. தெய்வ சகாயன் திருச்சரிதை - சு. தாமஸ் (1993)
30. அருள் ஒளி அன்னை தெரேசா காவியம் - துரை.மாலிறையன்(1994)
31. உலகின் ஒளி - இரா. பார்த்தசாரதி (1995)
32. கிறிஸ்து காவியம் - வாகரைவாணன் (1995)
33. அருள்நிறை மரியம்மைக் காவியம் - துரை. மாலிறையன் (1996)
34. இயேசு அருட்காவியம் - வி.ஜி. சந்தோசம் (1997)
35. அருட்காவியம் - மதலை முத்து (1999)
36. இதோ மானுடம் - ம. அருள்சாமி (2001)
37. மீட்பரசி - லோட்டஸ் எடிசன் (2002)
38. எபிரேயப் பேரழகி எசுத்தார் - இரா. தாவீது (2002)
39. அருள் மைந்தன் மாகாதை - பொன். தினகரன் (2002)
40. பவுலடியார் பாவியம் - ம. யோவேல் (2003)
41. உலகஜோதி - இறையரசன் (2005)
42. அன்பு மலர் அன்னை தெரேசா - ம. அருள்சாமி
(2006)
43. திருத்தொண்டர் காப்பியம் - சூ. இன்னாசி (2007)
44. ஆதியாகம காவியம் - சா. சாமிமுத்து (2008)
45. ஞானஒளி தூய சவேரியார் காவியம் - நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் (2013)
46. இயேசுநாதர் வெண்பா - ஆபிரகாம் கிரி (2016)
47. காய பிரான்சிசு காவியம் - ஜாண் பேட்ரிக் (2016)
48. விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம் - நாஞ்சில்நாரண தொல்காப்பியன் (2020)
No comments:
Post a Comment