ஜெர்மன், ஆங்கிலம், இலத்தீன் போன்ற மொழிகளில் இயற்றப்பட்ட கிறித்தவ இறைவழிபாட்டுப் பாடல்களை, அருட்தொண்டர்கள் பலர் தமிழில் மொழிபெயர்த்தனர். இப்பாடல்கள் தமிழில் ஞானப்பாட்டுகள் அல்லது பாமாலைகள் என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவற்றை
HYMNS எனக் குறிப்பிடுவர். மார்ட்டின் லூதர் (1483-1546) சீர்திருத்தத் திருச்சபையினைத் தொடங்கிய பின்னர், அதன் வழிபாட்டு முறைகளையும் சீர்படுத்தினார். இவ்வழிபாடுகளில் பாடுவதற்காக ஜெர்மன் மொழியில் மார்ட்டின் லூதரும், ஜோகான் வால்த்தரும் புதிய பாடல்கள் இயற்றி, இசையமைத்தனர். இப்பாடல்கள் 1524 ஆம் ஆண்டில் முதன் முதலாக நூலாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பே ஜெர்மன் மொழியில் வெளியான முதல் HYMNS நூலாகும். இந்நூலின் பெயர் "Gestliches
Gesangbuchlein" என்பதாகும். இந்நூலில் 5 இலத்தீன், 32 ஜெர்மானியப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்பாடல்கள் இறைவழிபாட்டில் முக்கிய இடம் பெற்றன. இவர்களைத் தொடர்ந்து பலர் பாடல்கள்
இயற்றினர். அவர்களுள் பவுல் கெர்கார்டு (Paul
Gerhard 1607-1676) என்பவரும், ஜோகன் அனஸ்டாசியஸ் ப்ரைலிங்கவுஷன் (Johann Anastasius
Freylinghausen 1670-1739) போன்றோர் முக்கியமானவர்கள்.
சீகன்பால்குவின் மொழிபெயர்ப்புப்பணி
சீர்திருத்தத் திருச்சபையினர் உலகிலுள்ள பல நாடுகளுக்கும் அருட்பணியாளர்களை அனுப்பி நற்செய்தியைப் பரப்பினர். முதன்முதலாக தமிழகத்திற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அருள்திரு. பர்த்தலோமேயு சீகன்பால்கு 1706 இல் தரங்கம்பாடி வந்து இறைப்பணியாற்றினார். அவருடைய இறைப்பணிகளுள் முக்கியத்துவம் வாய்ந்தது விவிலிய மொழிபெயர்ப்பும் ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்புமாகும். சீர்திருத்தத் திருச்சபையின் அருட்பணியாளர் சீகன்பால்கு, தரங்கம்பாடியில் கிறித்தவத் தமிழ் வழிபாட்டினைத் தொடங்கியபோது, இறைவழிபாட்டில் தமிழில் பாடல்கள் பாட வேண்டும் என்னும் நோக்கில் தங்கள் நாட்டு இறைவழிபாட்டுப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, 1713 ஆம் ஆண்டு 48 பாடல்கள் கொண்ட ஓலைச்
சுவடியின் தொகுப்பை தயார் செய்து, பல பிரதிகள் எடுத்து பலருக்கும் கொடுத்தார். 1714 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலுள்ள 48 பாடல்கள் அச்சுக்குத் தயாராக
இருந்தன. இந்த பாடல்கள் 1715 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் நாள் 300 பிரதிகளில் அச்சிடப்பட்டு, Book of Hymns Set to Malabaric
Music என்னும் பெயரில் வெளிவந்தன. இப்பாடல்களின் ஓலைச் சுவடிகள் இன்றும் ஜெர்மனியில்
உள்ளன. சீகன்பால்கு ஜெர்மானியப் பாடல்களின் இராகத்தை அடிப்படையாகக் கொண்டு
அப்பாடல்களின் முழுமையான மொழிபெயர்ப்பு எனக் கூறமுடியாத வகையில் அவற்றைத் தழுவி
பாடல்களை அமைத்தார். இப்பாடல்கள் எழுதுவதற்கு சீகன்பால்குவிற்கு உடன் ஊழியர் அருள்திரு. குருண்ட்லர் மற்றும்
தரங்கம்பாடியைச் சேர்ந்த தமிழாசிரியரின் மகன் கணபதி வாத்தியார் ஆகியோர்களும்
துணைபுரிந்தனர். மேலைநாட்டுத் தமிழ் வழிபாட்டுப் பாடல்களை, அவற்றிற்குரிய இசை மரபுப்படி மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாடிப் பரவசமடைந்தனர்.
சீகன்பால்குவைத் தொடர்ந்து...
சீகன்பால்கு 1719 ஆம் ஆண்டு தமது 36 ஆவது வயதில் காலமான பின்னர், அவரைத் தொடர்ந்து அருள்திருவாளர்கள் குருண்ட்லர், சூல்ட்சே, வால்த்தர், பிரேசின் போன்றோர் இப்பணியினைத் தொடர்ந்து செய்தனர். குருண்ட்லர் 1721 ஆம் ஆண்டு ஞானப்பாடல்களின் இரண்டாம் பதிப்பையும் 1723 ஆம் ஆண்டு பெஞ்சமின் சூல்ட்சே 160 ஞானப்பாடல்களுடன் மூன்றாம் பதிப்பையும் வெளியிட்டனர். 1733 ஆம் ஆண்டு C.F. பிரெஸ்சியர், C.T. வால்த்தர் ஆகியோர் 300 பாடல்கள் கொண்ட நான்காம் பதிப்பை வெளியிட்டனர். 1756 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பு C.T. வால்த்தர் அவர்களால் வெளியிடப்பட்டது.
பெப்ரீசியஸ் மொழிபெயர்ப்புப் பணி
சீகன்பால்கு விட்டுச் சென்ற ஞானப்பாடல் மொழிபெயர்ப்புப் பணியினைத் தொடர்ந்தவர்களுள் பெப்ரீசியசின் பணி சிறப்பானது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெப்ரீசியஸ், 1740 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். அவர் தரங்கம்பாடியில் இரண்டு ஆண்டுகள் இறைப்பணியாற்றிய பின்னர் 1742 முதல் வாழ்நாளின் இறுதி வரையிலும் (1791) சென்னையில் தங்கி இறைப்பணியாற்றினார். இவர் திருமணம் செய்யாததால் இவரை "சந்நியாச குரு" என அழைத்தனர். பன்மொழித்திறமை கொண்ட பெப்ரீசியஸ், இறைப்பணியுடன் விவிலிய மொழிபெயர்ப்பு, ஞானப்பாடல் மொழிபெயர்ப்பு, ஆங்கில - தமிழ் அகராதி போன்ற பணிகளையும் செய்து வந்தார். சீகன்பால்குவைத் தொடர்ந்து விவிலிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்களுள் பெப்ரீசியஸ் குறிப்பிடத்தக்கவர். பெப்ரீசியசின் மொழிபெயர்ப்பு "தங்க மொழிபெயர்ப்பு" எனப் போற்றப்படுகின்றது. பெப்ரீசியஸ் 1746 முதல் 1749 வரை போரின் நெருக்கடிகளால் பழவேற்காட்டுக்கு அருகிலுள்ள கருமணல் என்னும் கிராமத்தில் வாழ்ந்தார். அங்கிருந்த காலங்களில் வேதாகம மொழிபெயர்ப்புடன் ஞானப்பாட்டுகளின் மொழிபெயர்ப்பையும் செய்தார். அதன் பின்னர் சென்னையில் தங்கியிருந்தார். கிரேக்க மொழியில் புலமை பெற்றிருந்த அருட்திருவாளர்கள் சீகன்பால்கு, சூல்சே, பெப்ரீசியஸ் ஆகிய மூவருடைய மொழியாக்கத்தில் காணப்பெறும் சொற்றொடர் அமைப்பானது (Syntax) அவர்களுடைய காலத்திற்குப் பின்னர் வெளிவந்த மொழியாக்கங்களில் அதிக மாற்றத்தைப் பெறவில்லை என்பது அவர்களின் மொழியாக்கங்களுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம்.
பெப்ரீசியஸ் போதகரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஞானப்பாடல்கள் முதன் முதலாக 1774 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள வேப்பேரியில் வெளியிடப்பட்டது. இது ஞானப்பாடல்கள் நூலின் ஆறாவது பதிப்பாக விளங்கியது. இந்நூலில் 307 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இப்பாடல்கள் பாடுவோரின், கேட்போரின் உள்ளத்தை உருக்குவதாக
அமைந்துள்ளன. எனவே, இவருக்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த
அருள்திரு. J.H.C. கோர்தேஸ் போதகருக்குத்
தமிழ் கற்றுக் கொடுத்த ஒரு புலவர் இந்நூலை
"நெஞ்சுருக்கி நூல்" எனப் பாராட்டினார். பெப்ரீசியஸ் மொழிபெயர்த்த பல
பாடல்கள் மூலத்தைவிட சிறப்பாக உள்ளன. அதன்பின் இந்நூல் மூன்று
முறை வேப்பேரியிலும் மூன்று முறை தரங்கம்பாடியிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பதிப்பிக்கப்பட்டது. 1779 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் 307 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
இவற்றில் பெப்ரீசியஸ் மொழிபெயர்த்த பாடல்களின் எண்ணிக்கை 82 ஆகும். மேலும் இவர் மொழிபெயர்த்த 91 ஞானப்பாடல்கள் இடம்பெற்றிருந்த நூல்கள்
முறையே 1786, 1787 ஆம் ஆண்டுகளில்
தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டன. இவற்றில் மொத்தம் 307 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1779 ஆம் ஆண்டு பெப்ரீசியசால்
வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கிலம்
அகராதியில் (A
Malabar and English Dictionary) 9,000 தமிழ்ச் சொற்களும் சொற்றொடர்களும் இடம்பெற்றிருந்தன. இத்தகையத் தமிழ்ப் புலமையின்
பின்னணியில் பெப்ரீசியஸ் பாடல்களைத் தமிழாக்கம் செய்தார். ஏராளமான பாடல்களை மொழிபெயர்த்தமையால்
செய்யுள் இசையமைப்பில் பெப்ரீசியசுக்கு ஆர்வமும் புலமையும் ஏற்பட்டது. இதன் தாக்கம் அவரது விவிலிய
மொழிபெயர்ப்பிலும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த பவர் மொழிபெயர்ப்பிலும் காணமுடிகின்றது. 1891 இல் அருள்திரு. J.H.C. கோர்தேஸ் 386 ஞானப்பாடல்களுடன் எட்டாம்
பதிப்பை வெளியிட்டார். இப்பதிப்பில் சீகன்பால்கு மொழிபெயர்த்தப் பாடல்களில் ஏழும், குருண்ட்லர் மொழி பெயர்த்தவற்றுள்
இரண்டும் இடம் பெற்றிருந்தன.
ஞானப்பாட்டுப் புத்தகத்தைத் திருத்தி, பாடல்கள் சேர்த்து ஒன்பதாவது பதிப்பாக, புதிய பதிப்பு ஒன்றை
வெளியிட வேண்டும் என 1912 ஆம் ஆண்டு
தீர்மானிக்கப்பட்டது. இக்குழுவிலுள்ள உறுப்பினர்கள் ஏழு ஆண்டுகளாக இப்பணியைத்
தொடர்ந்து செய்தனர். ஐரோப்பியப் போரினாலும் பிற இடையூறுகளினாலும் இப்பணி
தடைப்பட்டது. எனினும் இடைவிடா முயற்சியால் 1922 ஆம் ஆண்டு மே மாதம் இப்புத்தகம்
வெளியிடப்பட்டது. இந்நூலின் பதிப்பாசிரியராக பேராயர் தாவீது பெக்சல் செயல்பட்டார். இப்புத்தகத்திலுள்ள 300 ஞானப்பாட்டுகளில் 264 பாடல்கள் பெப்ரீசியஸ் போதகரின்
ஏழாவது பதிப்பிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டன. "இனிய ஞானகீதங்கள்" என்னும் நூலிலிருந்து ஆறு
ஞானப்பாடல்கள் சேர்க்கப்பட்டன. புதிதாக 21 பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டன.
மீதமுள்ள ஒன்பது ஞானப்பாடல்கள் சென்னைக் கைப்பிரதிக் கழகத்தால்
(Madras
Religious Tract Society) வெளியிடப்பட்ட "தமிழ்க் கிறித்தவ ஞானப்பாடல்கள்" என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டன. ஒவ்வொரு பாடலின் கீழும் இடது பக்கத்தில்
மொழிபெயர்த்தவரின் பெயர் சுருக்கக் குறியீட்டால் சுட்டப்பட்டிருந்தது.
சுருக்கக் குறியீடுகளின் விளக்கம் முன்னுரைப் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தது.
இன்று இம்முறை பின்பற்றப்படவில்லை. இன்றும் லுத்தரன் சபையாரால் வெளியிடப்படும்
ஞானப்பாட்டுகள் நூல் “பெப்ரீசியஸ் ஞானப்பாட்டுகள் நூல்” (Febricius Hymnal) என்றே குறிப்பிடப்படுகின்றது. இந்தியத் திருச்சபை போற்றிப்
பாதுகாக்க வேண்டிய கருவூலமாக தரங்கம்பாடியில் பெப்ரீசியஸ் தொகுத்து வெளியிட்டிருந்த
"Hymnologia
Germano-Tamulica or Fabricius Hymn Book" என்னும் நூல் உள்ளது.
சான்ட்லர் போதகரின் தொகுப்பு
1901 இல் கிறித்தவ இலக்கியச்
சங்கத்தினரால் வெளியிடப்பட்ட "ஞானப்பாட்டுகள்" என்னும்
நூலின் ஒருங்கிணைப்பாளராக அருள்திரு. ஜே.எஸ். சான்ட்லர் தொண்டாற்றினார். இவருடன் T. Walker, J.M. Harris, C.H.
Monahan, A.C. Arumeinayagam, J. Lazarus ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நூலில் அருட்திருவாளர்கள் Spaulding, Hoole, Rhenius, Pettit, Dibb, Percivel,
Pope, Kilner, Lawton, Mwadows, Robert Caldwell போன்றோர் மொழிபெயர்த்தப் பாடல்களும் இடம்
பெற்றுள்ளன. சென்னைக் கைப்பிரதிக் கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பாடல்களிலிருந்து, இந்நூலின் மறுபதிப்புக்
குழுவினர் பாடல்களைத் தெரிந்தெடுத்து அவற்றையும் பயன்படுத்தினர். இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள
ஞானப்பாடல்கள் அனைத்தும், மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு தேவையான திருத்தங்கள்
செய்யப்பெற்றன. குறிப்பாக பாடல்களிலுள்ள ஏராளமான சரணங்கள் சிலவாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஞான கீதங்கள் என்னும் இந்நூலில் 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
எழுதிய முன்னுரையில் "வேதநாயக
சாஸ்திரியார் கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகளுக்கு எங்ஙனம் முன்னவராகவும்
முன்னோடியாகவும் இருந்தாரோ அதுபோன்று ஞானப்பாடல்களுக்கு பெப்ரீசியஸ் முன்னோடியாக
விளங்கினார்" என சான்ட்லர் குறிப்பிட்டுள்ளார். ஞானப்பாடல்கள் தமிழ் வளம் குறைந்தவைகளாக
இருந்தாலும் கருத்துச் செறிவும், இசைநயமும் உடையனவாக அமைந்து, ஆன்மிக பலமும் உற்சாகமும்
ஆறுதலும் தரும் வகையில் அமைந்துள்ளன. இன்று பயன்படுத்தப்பட்டு
வரும் ஞானப்பாடல்களில் சில பாடல்கள் அருட்கொடை பெற்ற தமிழர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டவை.
கால்டுவெல்லின் ஞானப்பாடல்கள் மொழிபெயர்ப்புப்
பணி
பல அருட்தொண்டர்களைத் தொடர்ந்து கால்டுவெல்லும் பல பாடல்களை மொழிபெயர்த்தார்.
அப்பாடல்கள் வருமாறு:
1. ஏதேனில் ஆதிமணம் உண்டான
நாளிலே
2. சபையின் அஸ்திபாரம்
3. கேள் ஜென்மித்த
ராயர்க்கே
4. அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது
போர் முடிந்தது
5. தூய தூய தூயா! திரியேக தேவா!
1. ஏதேனில் ஆதிமணம் உண்டான
நாளிலே
கால்டுவெல் தமது மூத்த மகள் இசபெல்லாவின் திருமணத்தின் போது பாடுவதற்காக "The voice that breathed o'er Eden" என்னும்
ஆங்கிலப் பாடலைத் தமிழில் "ஏதேனில் ஆதிமணம்
உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே" என மொழிபெயர்த்தார்.
இடையன்குடியில் 1868 பெப்ரவரி 19 ஆம் நாள் நடைபெற்ற
இத்திருமணத்தில் இப்பாடல் தமிழில் முதன் முதலாகப் பாடப்பட்டது. சபை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்தப்
பாடலைப் பாடி மகிழ்ந்தனர். இன்று இப்பாடல் திருமண ஆராதனையை அலங்கரிக்கும் பாடலாகத்
திகழ்கிறது.
2. சபையின் அஸ்திபாரம்
The Church's one foundation என்னும் ஆங்கிலப் பாடலின் தமிழ்
மொழிபெயர்ப்பு “சபையின்
அஸ்திபாரம்” என்னும் ஞானப்பாடல். இடையன்குடியில் 32 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த ஆலயத்தை, கால்டுவெல் 1880 ஜூலை 6 ஆம் நாள் அர்ப்பணம் செய்தார்.
அன்று நடைபெற்ற அர்ப்பண ஆராதனையில் பாடுவதற்காக, கால்டுவெல் The Church's one foundation என்னும் ஆங்கிலப்
பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இப்பாடலை அவரது இளைய மகளான மேரி அனைவருக்கும்
கற்றுக் கொடுத்தார். அன்று முதல் இப்பாடல் திருநெல்வேலி SPG சபைகளில் 1938 ஆம் ஆண்டு வரைப் பாடப்பட்டு
வந்தது. அதன் பின்னர், அருள்திரு. தாமஸ்
வாக்கர் அவர்களால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அப்பாடல் தற்பொழுது பாடப்பட்டு
வருகின்றது. இப் புதிய மொழிபெயர்ப்புப் பாடல் 1938 ஆம் ஆண்டு கிறித்தவ இலக்கியச்
சங்கத்தின் மூலம் வெளிவந்த ஞானப்பாட்டுகள் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நூல்
தொகுப்பின் குழு கூட்டுநராக அருள்திரு. J.S. சான்ட்லர் செயலாற்றினார். இக்குழுவில் அருள்திரு. தாமஸ்
வாக்கர் உறுப்பினராகப் பணியாற்றினார். கால்டுவெல் மற்றும் வாக்கர் ஆகிய இருவரது
மொழிபெயர்ப்பிலும் ஆங்காங்கே சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இன்று கால்டுவெல்
மொழிபெயர்த்த பாடல் வழக்கில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
பிற பாடல்கள்
கால்டுவெல் கிறிஸ்து பிறப்பு, உயிர்த்தெழுதல் ஆகிய பண்டிகை நாட்களில் பாடுவதற்காக Hark!
The herald angels sing என்னும் பாடலை "கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே!"
எனவும் The Strife is o'er, the
battle done என்னும் பாடலை
"அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, இப்போது போர் முடிந்தது"
எனவும் மொழிபெயர்த்தார். இப்பாடல்களை கால்டுவெல்லின் மகள்களான இசபெல்லா, லூயிசா, மேரி ஆகியோர் பாடகர்
குழுவினருக்குப் பாடுவதற்கு பயிற்சி அளித்தனர். இதன் விளைவாக தமிழில் இப்பாடல்கள்
முதன் முதலாக இடையன்குடி ஆலயத்தில் கிறிஸ்மஸ், உயிர்த்தெழுதல் ஆகிய நாட்களில்
மகிழ்வுடன் பாடப்பட்டன. மேலும் இலத்தீனிலிருந்து ஆங்கிலத்திற்கு
மொழிபெயர்க்கப்பட்ட Holy, holy, holy, Lord God Almighty
என்னும் பாடலை "தூய தூய தூயா, திரியேக தேவா, உமக்கே எந்நாளும் சங்கீதம்
ஏறுமே" என மொழிபெயர்த்தார். இப்பாடல்களை சபையார் பாடி
மகிழ்ந்தனர். கால்டுவெல் மொழிபெயர்த்த இப்பாடல்கள் கிறித்தவ வழிபாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ளன. கால்டுவெல்
இன்னும் பல பாடல்களை மொழிபெயர்த்திருக்கலாம்; ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும்
கிடைக்கவில்லை.
தமிழ்க் கீர்த்தனைகளில் ஞானப்பாடல்களின் தாக்கம்
ஞானப்பாடல்களைத் தழுவி பேராயர் கால்டுவெல், அருள்திரு. வே. சந்தியாகு போன்றோர் கீர்த்தனைகளையும்
வேதநாயக சாஸ்திரியார் பல இலக்கியப் பகுதிகளையும் படைத்துள்ளனர் என்பது வியப்பான செய்தி.
வேதநாயக சாஸ்திரியாரிடம் ஞானப்பாடல்களின்
தாக்கம்
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
சுமார் 130 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கிறித்தவக் கீர்த்தனைகளின்
தந்தையாக விளங்கும் சாஸ்திரியாரின் படைப்புகளில் லுத்தரன் சபையினரின் ஞானப்பாடல்களின் தாக்கம்
இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. வேதநாயக சாஸ்திரியார் தரங்கம்பாடியில் இறையியல் கற்றுக் கொண்டிருக்கும்போது ஜெர்மானிய
லுத்தரன் சபையைச் சார்ந்த மிஷனெரிமார்களிடம் அதிக தொடர்பு கொண்டிருந்தார். அச்சூழலில் பலருக்கு தமிழ்
மொழியைக் கற்றுக் கொடுத்ததுடன் அவர்களிடமிருந்து ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டார். சீர்திருத்த சபையின் 150 ஆவது ஆண்டு விழா தரங்கம்பாடியில் 1856 ஆம் ஆண்டு நடந்தபோது, அந்நிகழ்வில் மக்கள் நடுவில்
பெப்ரீசியசின் ஞானப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். வேதநாயக சாஸ்திரியார் பல
நூறு கீர்த்தனைகளை இயற்றியிருந்தாலும் தரங்கம்பாடி லுத்தரன் சபையினர் மொழிபெயர்த்த
ஞானப்பாடல்கள் மீது சாஸ்திரியாருக்கு தனி ஈடுபாடு இருந்தது. சாஸ்திரியார் மிகவும் போற்றிப்
பாதுகாத்து வைத்திருந்த நூல்களில் பெப்ரீசியசின் ஞானப்பாட்டுப் புத்தகமும், பெப்ரீசியஸ் வேதாகமமும்
குறிப்பிடத்தக்க நூல்களாகும். பெப்ரீசியசின் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் நடைக்குத்
தக்கவாறு சாஸ்திரியார் ஜெபமாலை நூலில் மாற்றியுள்ளார். சாஸ்திரியார் பெப்ரீசியசின்
ஞானப்பாடல்களில் தோய்வு கண்டு, தனது கடினமான சூழல்களில் அப்பாடல்களைப் பாடி ஆறுதலடைந்தார்.
சான்றாக பெப்ரீசியசின், "பிரியமான இயேசுவே என்நெஞ்சைத்தய நீர் பூரிப்பாக்கி என்னிலே"
எனத் தொடங்கும் மொழிபெயர்ப்புப் பாடலின்,
நீர் துக்கத்தில் என் ஆறுதல்
நீர் வாழ்வில் என் களிப்பு
நீர் வேலையில் என் அலுவல்
பகலில் என் சிந்திப்பு.
நீர் ராவில் என் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்
விழிப்பில் என் குறிப்பு
என்னும்
17 ஆவது சரணத்தை, தமது ஜெபமாலையில் முதற்காண்டத்திலுள்ள தேவலட்சணம் என்னும் ஆறாவது
பகுதியிலுள்ள 8 ஆவது செய்யுளில் அமைத்துள்ளார். அப்பாடல் பின்வருமாறு:
துக்கத்தில் ஆறுதல் என்
வாழ்வில் களிப்பு நீ
துன்பத்தில் எனது இன்பம்
நீ
தொறுவும் வேலையின் அலுவல்
பகலில் என் சிந்திப்பு
தூக்கத்தில் என் சொப்பனம்
பக்கத்து இராவினில் அடைக்கலம்
இருளதிற்
பகவத்தி எனது சத்தி
படுகுறையில் ஐசுவரியம் கசப்பினில்
அமுது
பல தாழ்வில் எனது வாழ்வு.
பெப்ரீசியசின்
இப்பாடல் 18 சரணங்களைக் கொண்டதாகும். இதுபோன்று சாஸ்திரியாரின் நூல்களிலிருந்து ஏராளமான
சான்றுகளைச் சுட்டலாம்.
சாஸ்திரியார் தமது துன்பமான
நேரங்களில் பெப்ரீசியஸ் மொழிபெயர்த்த ஞானப்பாடல்களைப் பாடி மன ஆறுதலடைந்தார். சாஸ்திரியாருக்குப் பல வகைகளிலும்
உதவி செய்து வந்த சரபோஜி மன்னர் இறந்த பின்னர், அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு
வந்த அரசர் சிவாஜி, சாஸ்திரியாருக்கு
உதவிகள் செய்வதை நிறுத்திக் கொண்டார். இதனால் சாஸ்திரியாரும் அவரது
குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த கவலையடைந்தனர். அச்சூழலில் சாஸ்திரியார்,
என் மனமே மகிழ்ந்திரு
உன் மாளிகை விழாது
பேய், லோகம், துன்பம் உனக்குப்
பொல்லாப்பை உண்டாக்காது.
இம்மானுவேல் யாவுக்கும்
மேல்
முன்தான் ஜெயஞ் சிறந்தார்
தயாபரர் இரட்சிப்பவர்
உன் நோவை அவர் கண்டார்
என்னும் பெப்ரீசியசின் ஞானப்பாடலைப்
பாடினார். "பயப்படாதே மனமே உன் கர்த்தர் ஆதரிப்பார்" எனத் தொடங்கும் இப்பாடல்
எட்டு சரணங்களை உடையது. இந்த
ஞானப்பாடல் அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது. மட்டுமன்றி, சாஸ்திரியாருடைய விருப்பத்தின்படி
அவர் இறந்தபோது பெப்ரீசியஸ் மொழிபெயர்த்த ஞானப்பாடலான,
என் மூச்சொடுங்கும் அந்தக்
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்
அப்போ நான் உம்மைப் பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக் கொண்டு காத்துத்
தூங்குவேன் இயேசுவே
என்னும் பாடலைப் பாடினார்கள். "இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து நிந்தைக்கே" எனத் தொடங்கும் பெப்ரீசியசின் இப்பாடல் பத்து சரணங்களை உடையது. 1938 ஆம் ஆண்டு அருள்திரு. சான்ட்லர் பதிப்பித்த ஞானப்பாட்டுகள்
நூலில் இப்பாடல் சில மாற்றங்களுடன் நான்கு சரணங்களைக் கொண்டதாக இடம்பெற்றுள்ளது. தஞ்சையிலுள்ளவர்கள் சாஸ்திரியாருக்குப்
பலவிதமானத் தொல்லைகளைக் கொடுத்தனர். இதையறிந்த சாஸ்திரியார் பெப்ரீசியஸ் மொழிபெயர்த்த,
கர்த்தர் தான் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே,
உண்டாம் இக்கட்டனைத்தையும்
கழிப்பர் அவர்தாமே
பொல்லாங்கனின் சினம்
இப்போமா விஷம் துஷ்டம்
சூதையும் அணிந்து உறுமும்
நிகர் புவியில் இல்லை
என்னும் ஞானப்பாடலைப் பாடி
ஆறுதலையும் தைரியத்தையும் அடைந்தார். இப்பாடல் ஜெர்மன் மொழியில்
மார்ட்டின் லூதரால் 1529 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்பாடல் நான்கு சரணங்களைக் கொண்டது.
கால்டுவெல் இயற்றிய கீர்த்தனையில்
தழுவல்
இறைப்பணியிலும் மொழி ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்த கால்டுவெல், கீர்த்தனை
இயற்றுவதிலும் தேர்ச்சி உடையவராகக் காணப்பட்டார். கால்டுவெல் சென்னையிலிருந்து
இடையன்குடிக்கு மேற்கொண்ட தம் நடைப் பயணத்தின்போது தஞ்சாவூருக்குச் சென்று, அங்கு வேதநாயக
சாஸ்திரியாரிடம் உரையாடினார். அவர்களது
உரையாடலில் கீர்த்தனை முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த உரையாடலின்
தாக்கத்தினாலும் கீர்த்தனைகளை மக்கள் ஆர்வமுடன் பாடிவருவதாலும் கால்டுவெல், "ஏசையா பிளந்த ஆதிமலையே, மோச நாளில் உன்னில் ஒளிப்பேனே" என்னும் கீர்த்தனையை இயற்றினார். இக்கீர்த்தனை
ஆங்கிலத்தில் A.M. Toplady
(1740-1778) என்பவர்
எழுதிய "Rock
of Ages cleft for me" என்னும் பாடலின் தழுவல் ஆகும். ஆங்கிலப் பாடலின் தமிழ்
மொழிபெயர்ப்பு "பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே" என்பதாகும்.
வே. சந்தியாகுவின் கீர்த்தனைகளில்
ஞானப்பாடல்களின் தழுவல்
கீர்த்தனைக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் அருள்திரு. வே. சந்தியாகு (1869-1929). இவர் இயற்றிய கீர்த்தனைகள் "கிறிஸ்தவ அனுபவக் கீர்த்தனைகள்" என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளன. மேலைநாட்டுக் கவிஞர்களின் HYMNS இவரைப் பெரிதும் கவர்ந்ததால், இவருடைய
கீர்த்தனைகளில் பல அவற்றைத் தழுவி எழுதப்பட்டன. ஐசக் வாட்ஸின் “When I survey the wondrous cross’’ என்னும் பாடலைத் தழுவி, "விந்தை கிறிஸ்தேசு ராஜா" என்னும் கீர்த்தனையை இயற்றினார். “When I survey the wondrous cross’’ என்னும் பாடல் மகாத்மா காந்திக்கு
மிகவும் பிரியமான பாடல்.
இதைப் போன்று “O happy day that fixed my
choice’’ என்னும் ஆங்கிலப் பாடலைத் தழுவி, "அந்த நாள் பாக்கிய நாள்" எனத் தமிழில்
இயற்றியுள்ளார். மேலும் “Nearer my God
to thee’’ என்னும் ஞானப்பாடலின்
தழுவல் "தேவனே நான் உமதண்டையில்" என்னும்
கீர்த்தனையாகும். “Draw me
nearer’’ என்னும் ஆங்கிலப் பாடலை
"உந்தன் மகா இன்ப சத்தம்
நான் கேட்டவன்" என்னும் கீர்த்தனையாகத்
தருகின்றார். “O love that will not let
me go’’ என்னும் பாடலைத் தழுவி தமிழில் "என்னை விடாத அருளே சேர்ந்தாவி உம்மில் பூரணம்" எனப் பாடியுள்ளார்.
இவருடைய கீர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இவரை ஒரு பக்திக் கவிஞர் எனலாம்.
சீகன்பால்கு, பெப்ரீசியஸ், கால்டுவெல் போன்ற பல்வேறு அருட்தொண்டர்களால் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட ஞானப்பாடல்கள் லுத்தரன் சபையினரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்போது,
எவ்வித மாற்றங்களும் செய்யாமல் அனைத்து சரணங்களுடன் பதிப்பிக்கப்பட்டன. இந்நூலில் அதிக
அளவில் 24 சரணங்கள் உடைய ஞானப்பாடலும் உள்ளது. ஆனால் கிறித்தவ இலக்கியச் சங்கம் ஞானப்பாட்டுகள்
நூலை வெளியிடும்போது, ஞானப்பாடல்களிலுள்ள சரணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன; பல
சொற்கள், அடிகள் மாற்றப்பட்டன.
பல்வேறு அருட்தொண்டர்கள் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் கிறித்தவ வழிபாட்டிற்கு
பாடல்கள் தேவை என்பதனை உணர்ந்தும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சூழல்களில், பல்வேறு
இக்கட்டுகளில் பாடல்களை மொழிபெயர்த்தனர். சுமார் 400 க்கும் மேற்பட்ட ஞானப்பாடல்கள்
மொழிபெயர்க்கப்பட்டு, இன்று வழக்கிலுள்ளன. தென்னிந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக
அளவில் ஞானப்பாட்டுகள் உள்ளன என்பது பெருமைக்குரியது. கால்டுவெல்லின் காலத்தில் ஆலய
ஆராதனைகளில் ஞானப்பாடல்களை மட்டும் பாடுவார்களாம்; ஆலய ஆராதனை முடிந்த பின்னர் கீர்த்தனைகளைப்
பாடுவார்களாம். இன்று தமிழ் ஆராதனைகளில் ஞானப்பாடல் பாட வேண்டுமா என்னும் கேள்வியை
சிலர் முன் வைக்கின்றனர். தமிழ் மக்களின் காதுக்கோ, கருத்துக்கோ, சுகமாகவோ, சுவை பயப்பதாகவோ
அவை அமையவில்லை எனக் குறிப்பிட்டு அவற்றை வெறுத்து ஒதுக்குகின்றனர். ஞானப்பாட்டுகள் பலவும் பொருட் சிறப்பு வாய்ந்தன
என்பது மறுக்க முடியாத உண்மை. கருத்துள்ள பாடல்கள்
எதுவாயினும் அவற்றை புறம்பே தள்ள முடியாது. கிறிஸ்மஸ் காலங்களில் ஞானப்பாடல்களின் சிறப்பும்
கம்பீரமும் அதைப் பாடுபவர்களுக்கு நன்கு புரியும். ஞானப்பாடல்களும் கீர்த்தனைகளும்
கிறித்தவர்களின் இரு கண்கள். அவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு கிறித்தவரின்
கடமை.
- முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்
No comments:
Post a Comment