கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் வீரமாமுனிவரின்
காலம் முதல் இன்று வரை கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் படைக்கப்பட்டு வருகின்றன.
கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்களில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட நூல், “தேவமாதா
பிள்ளைத்தமிழ்” என நம்பப்படுகிறது. வீரமாமுனிவரின் நூல்களைப் பற்றி ஆய்ந்த பல்வேறு அறிஞர்களும் தேவமாதா பிள்ளைத்தமிழ் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது எனக் குறிப்பிடவில்லை. பேராசிரியர் வி.மி. ஞானப்பிரகாசம் அவர்கள் 1970 இல் பாரிசிலுள்ள தேசிய நூலகத்தில்
ஓலைச்சுவடியிலிருந்த தேவமாதா பிள்ளைத்தமிழ் நூலைக் கண்டுபிடித்தார். அந்நூல்
வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது என்பதைப் பல ஆதாரங்களுடன் உறுதி செய்து, இந்நூலைக்
கைப்பட எழுதிக் கொண்டு வந்து,
தஞ்சையிலுள்ள
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு ‘வீரமாமுனிவர் நிருபங்கள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டார். இந்நூலில் தேவமாதா பிள்ளைத்தமிழ் இடம்பெற்றுள்ளது.
தேவமாதா பிள்ளைத்தமிழில் வீரமாமுனிவர்
மரியன்னையை பெரியநாயகி என்று ஊஞ்சல் பருவம் முழுவதிலும் அழைக்கிறார். மரியன்னையைப்
பெரியநாயகி என்று முதலாவது அழைத்தவர் வீரமாமுனிவரே. மாதா பிரார்த்தனை என்று சொல்லப்படும் மரியன்னை
மன்றாட்டு மலரின் பெரும்பகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளது. பிற பிள்ளைத்தமிழ்
நூல்கள் காப்புப் பருவத்தின் பத்துப் பாடல்களுடன் தொடங்குகின்றன. ஆனால் இந்நூல்
காப்புக்கு முன் ‘கடனறி அகவல்’ என்ற முன்னுரைப் பகுதியைக் கொண்டுள்ளது. பிற நூல்களில் நீராடல் என்று அழைக்கப்படுவது இங்கு அபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. முத்தப் பருவத்தில் பாட்டுடைத் தலைவி
பக்தர்களை முத்தம் செய்யுமாறு வேண்டுவதாக அமைந்துள்ளது. இந்நூலின் பாட்டுகள்
மரியாளின் பக்தர்கள் மரியன்னையின் திருவடியை முத்தம் செய்ய இசைவு தருமாறு
வேண்டுவனவாக உள்ளன. இயேசு பெருமான் பட்ட பாடுகளை, அவரது உடலில் ஏற்பட்ட காயங்களை ‘இனிய முறி ஐந்து’ என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். காப்புப் பருவத்தின் முதல் செய்யுள், கவணால் ஓர்
அரக்கனை (கோலியாத்து) வென்ற அரசனின் குலத்தைச் சேர்ந்தவளைக் காக்கவென்று
திருச்சபையைத் துதிப்போம் என்னும் பொருளில் அமைந்துள்ளது. கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ்
நூல்களாக 35 க்கும் மேல் உள்ளன. இவற்றில் பல கிறித்தவரல்லாதவர்களால் படைக்கப்பட்டவை. கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் சிற்றின்பத்தைத் தவிர்த்துப்
பேரின்பத்தை மையப் பொருளாகக் கொண்டுள்ளன.
பிள்ளைத்தமிழ் என்பது 96 வகைச்
சிற்றிலக்கியங்களில் ஒன்று. பிள்ளைத்தமிழ் என்பதன் கரு, ‘குழவி
மருங்கினும் கிழவதாகும்’ (தொல்.புறத்.24) எனத் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. இது 8 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஆழ்வார்களின் பக்தி நூல்களில் இனிமைதரும் இலக்கிய உறுப்பாக
மலர்ந்தது. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் முழுச் சிற்றிலக்கியமாகப்
பரிணமித்தது. முதல் பிள்ளைத்தமிழ் நூல் ஒட்டக்கூத்தரின் ‘குலோத்துங்கச் சோழன்
பிள்ளைத்தமிழ்’ என்பதாகும். பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுபவை குமரகுருபரர் பாடிய, ‘மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழ்’ மற்றும் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்பனவாகும். இவ்விரண்டும் கற்பனை வளம், செந்தமிழ்
சொல்லாட்சி, ஓசை நயம் ஆகியவற்றால் சிறந்து விளங்குகின்றன.
பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ குழந்தைப்
பருவத்தினராகக் கற்பனை செய்து, பருவத்திற்குப் பத்துப் பாடல்களாகப் பத்துப்
பருவங்களில் போற்றிப் புகழ்வது பிள்ளைத்தமிழ் இலக்கியம். இது ஆண்பால்
பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். பிள்ளைத்தமிழில் ஆண்பால் பெண்பால்
பருவங்கள் வேறுபடுகின்றன. முதல் ஏழு பருவங்களும் பொதுத்தன்மை உடையனவாகவும், கடை மூன்று
பருவங்கள் மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எனத் தனித்தனியே அமைத்துள்ளனர்.
சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குச்
சிறப்பாக உரியவை. அம்மானை, நீராடல், ஊஞ்சல் ஆகிய
மூன்றும் பெண்பாற் பிள்ளைத்தமிழில் இடம்பெறும். இருவகைக்கும் பொதுவானவை
காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப்
பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப்
பருவம் என்னும் ஏழு பருவங்களாகும்.
மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை பிள்ளைத்தமிழ் பாடுவது
மரபு.
தமிழ்க்குழவியின் பிள்ளைத்தமிழ் நூல்கள்
கவிஞர் தமிழ்க்குழவியின் இயற்பெயர் ஆ.
விசுவநாதன் என்பதாகும். இவர் தொலைத்தொடர்புத் துறையில் நாற்பது ஆண்டு காலம்
பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாகர்கோவிலில் குறளகம் என்னும் பெயரில் திருக்குறள்
வாழ்வியலாக்கப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, மாணவர்களுக்குக் குறள் பயிற்சி வழங்கி
வருகிறார். சாதி, சமய, இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து, காய்தல் உவத்தல்
இன்றி பரந்த நோக்குடன் 60 க்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூற்கள் எழுதி
வெளியிட்டுள்ளார். இவர் படைத்துள்ள கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்து.
அவற்றில் ஆறு ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள்; நான்கு பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள். அவை
பின்வருமாறு:
1. இயேசுநாதர் பிள்ளைத்தமிழ்
2. மரியன்னை பிள்ளைத்தமிழ்
3. புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ்
4. புனித சவேரியார் பிள்ளைத்தமிழ்
5. வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ்
6. புனித அந்தோனியார் பிள்ளைத்தமிழ்
7. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ்
8. அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
9. சிறுமலர் தெரசா பிள்ளைத்தமிழ்
10. புனித அல்போன்சா பிள்ளைத்தமிழ்
இவற்றில் மூன்று நூல்கள் விவிலியத்தையும், எஞ்சிய ஏழு நூல்கள் இறைத்தொண்டர்களையும் அடிப்படையாகக்
கொண்டவை.
விவிலிய அடிப்படை ...
இயேசு நாதர் பிள்ளைத்தமிழ், மரியன்னை
பிள்ளைத்தமிழ், புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் என்னும் மூன்று நூல்களும் விவிலியத்தை
அடிப்படையாகக் கொண்டவை.
1. இயேசுநாதர் பிள்ளைத்தமிழ்
இயேசுநாதர் பிள்ளைத்தமிழ் 2019 இல்
நாகர்கோவிலிலுள்ள நெய்தல்வெளி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இறைவன்
உலகத்தைப் படைத்தது; இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் விண்ணகம்
சென்றது வரையிலான நிகழ்வுகள் இப்பிள்ளைத்தமிழின் நூறு செய்யுட்களில்
விவரிக்கப்பட்டுள்ளன. ‘உலகம் தன்னை உதிரத்தாலே உயர்வுசெய வந்தாய்’ என இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கத்தை ஒற்றை அடியில் அடக்கிக் காட்டியுள்ளார். நூலின் முன்னுரையாக இயேசு நாதரின் வாழ்வோவியம் 52 செய்யுட்களில் பாடப்பட்டுள்ளது. காப்புப்
பருவத்தில் இறைவன் உலகத்தைப் படைத்ததை, “ஆதியில் இருந்தது வார்த்தை அதுவே| ஆண்டவ னாக
இருந்ததுவே| ஆண்டவன் அருளின் மகிமையி னாலே| அகிலம் தோன்றி உயிர்த்ததுவே” (பா.1) எனப்
பாடுகிறார். செங்கீரைப் பருவத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, யோவான்
ஸ்நாபகனிடம் ஞானஸ்நானம் பெற்றது, கானாவூர் கல்யாண வீட்டில் முதல் அற்புதம்
செய்தது, உவமைகள் வழியாக
மக்களுக்கு அறிவுரை கூறியது போன்ற நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. சப்பாணிப்
பருவத்தில் யோவான் ஸ்நாபகனிடம் இயேசு ஞானஸ்நானம் பெற்றதும், ஜெப வீட்டை
வியாபார இடமாக மாற்றி விட்டீர்களே எனச் சாட்டையால் இயேசுபெருமான் அடித்து விரட்டிய
நிகழ்வும் சுட்டப்பட்டுள்ளன.
2. மரியன்னை பிள்ளைத்தமிழ்
மரியன்னை பிள்ளைத்தமிழ் 2022 இல்
நாகர்கோவிலிலுள்ள ஆதாம் ஏவாள் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. அன்னை மரியாளின் வரலாறு பிள்ளத்தமிழ் வடிவில்
இந்நூலில் விவரிக்கப்படுகிறது. நூலின் தொடக்கத்தில் மரியன்னையின் வாழ்வியல் 20 செய்யுட்களில்
இடம்பெற்றுள்ளது. இந்நூலில் மரியாளை, “விரும்பி எவர்தான் வேண்டி நிற்பினும்| விழிகளின்
முன்வருவாள்| அரும்புகள் பூத்த புன்னகையோடு| ஆசிகள் வழங்கிடுவாள்” எனப் பாடுகிறார். செங்கீரைப் பருவத்தில் மரியாளின் இளமைப் பருவம் தூய்மையாக விளங்கியதை ஆசிரியர் சுட்டுகிறார். இப்பருவத்தில் மரியாளை, “மானுடம் உய்ய
வந்தவள் நீ| மகனாய் இயேசுவைத் தந்தவள் நீ” (2.3) என்கிறார். தாலப் பருவத்தில் “மன்னன் இயேசுவை
மகிமையுடன்| மண்ணில் தரவோ நீ வந்தாய்” (3.4) என்கிறார். இப்பகுதியில் “பெத்தேல்புரத்துப்
பூங்கொடியே”(3.10) எனப் போற்றுகிறார். சப்பாணிப் பருவத்தில்
காபிரியேல் தூதன் சூசையிடம் கூறிய செய்தி போன்றவை கூறப்பட்டுள்ளன. சூசையும்
மரியாளும் பெத்லகேம் சென்ற நிகழ்வுகளும், குழந்தை இயேசு பிறந்த செய்தியும்
விளக்கப்பட்டுள்ளன. முத்தப் பருவத்தில் மரியாளை, “ஆதாம் ஏவாள் வருகையின்பின்| அகிலம் கண்ட
அதிசயம்நீ” (5.1) எனப் பாடுகிறார். இயேசு பாலகனை இறைவனுக்கு
மனதால் ஒப்புக் கொடுத்த நிகழ்வு சுட்டப்படுகிறது.
3. புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ்
புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் 2021 இல் நாகர்கோவிலிலுள்ள புனித லூர்து அன்னை
ஆலயத்தின் மூலம் வெளியிடப்பட்டது. புனித சூசையப்பரின் வாழ்வை எடுத்துரைக்கும்
இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில், தேம்பாவணியிலுள்ள “சீரிய உலகம் மூன்றும்” எனத் தொடங்கும் செய்யுளை எடுத்தாண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இறைவணக்கமும் தமிழ் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளன. காப்புப் பருவத்தில் இறைவனை வணங்கி, சூசையப்பரின்
பூவுலக வருகையைப் பாராட்டுகிறார். வானவர்
மூலம் மரியாளை ஏற்றுக் கொள்வதற்கும், குழந்தை இயேசுவைக் காப்பதற்கும்
வழிநடத்தப்பட்டவர் சூசையப்பர் என்பதையும், இயேசுவைப் பெற்றெடுக்கும்வரை துறவறம் காத்தவர்
என்பதையும் எடுத்துரைக்கிறார். சப்பாணிப் பருவத்தில் சூசையப்பரின் அருமை
பெருமைகளை அடுக்கடுக்காய் எடுத்துரைத்து, கையோடு கைகோர்த்து கொட்டி மகிழ்க எனப்
பாடுகிறார். சிறுபறைப் பருவத்தில், தான் என்னும்
அகந்தை அழிந்தால்தான் பிறர் நலம் போற்ற முடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகிறார்.
இறைத்தொண்டர் பிள்ளைத்தமிழ்
புனித சவேரியார், வீரமாமுனிவர், தேவசகாயம், புனித அந்தோனியார், அன்னை தெரசா, புனித அல்போன்சா, சிறுமலர் தெரசா ஆகிய எழுவரையும் ஆசிரியர்
பிள்ளைத்தமிழில் பாடியுள்ளார்.
4. புனித சவேரியார் பிள்ளைத்தமிழ்
புனித சவேரியார் பிள்ளைத்தமிழ் 2021 இல்
நாகர்கோவிலிலுள்ள யாழினி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்நூலில் புனித
சவேரியாரின் பிறப்பு, சிறப்பு, இறைப்பணி, விண்ணக வாழ்வு என அனைத்தையும் ஆசிரியர்
எடுத்துரைக்கிறார். ஆசிரியர் நூலின் தொடக்கத்தில் சவேரியாரின் வாழ்வோவியத்தை 20 செய்யுட்களில்
சுருக்கமாகத் தருகிறார். காப்புப்
பருவத்தில் குழந்தை சவேரியாரைக் காக்கும் பொருட்டு ஆசிரியர் இறைவனிடம்
வேண்டுகிறார். இப்பருவத்தின் பத்தாவது பாடலில் ஓதல், தெளிதல், உணர்தல் இவையே உண்மையின் மறைக்கல்வி எனக்
குறிப்பிடுகிறார். சிற்றில் பருவத்தில் சவேரியாரின் இறைப்பணியின் வளர்ச்சியை
எடுத்துரைக்கிறார். சவேரியாரின் சிறந்த பணிகளில் ஒன்று கல்விப்பணி என்பதனை
ஆசிரியர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். குமரி மாவட்டத்தில் நிலவிய அரசியல்
சூழ்நிலையால் அவர் மணப்பாட்டில் தங்கியிருந்தமையையும் ஆசிரியர் சுட்டுகிறார்.
5. வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ்
வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் 2020 இல்
நாகர்கோவிலிலுள்ள நெய்தல்வெளி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. ஆசிரியர்
வீரமாமுனிவரின் வாழ்வியலைச் சந்தச் செறிவும், கருத்து வளமும் நிறைந்த செய்யுட்களால்
பிள்ளைத்தமிழ் வடிவில் படைத்துள்ளார். நூலின் தொடக்கத்தில் வீரமாமுனிவரின்
வாழ்வியல் 16 செய்யுட்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது.
காப்புப் பருவத்திலுள்ள பத்துப் பாடல்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
முதல் உயிர்த்தெழுதல் வரையிலான நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் நயமாகவும்
எடுத்துரைக்கிறார். செங்கீரைப் பருவத்தில் வீரமாமுனிவர் திருக்குறள் கற்றதையும், உணவு உடை
துறந்து எளிமையின் நாயகனாய் தமிழ்க் கலாச்சாரத்தின் தோழனாய் மாறிய விதத்தினையும்
ஆசிரியர், “திருக்குற
ளமுதம் தேடிஉண்டாயோ| தெளிந்து புலாலை நீமறுத்தாய்| இந்தியத் துறவி
நீயானாய்| எளிய தோற்றம்
காவிய ணிந்து| எழில் தலைப் பாகை நீகொண்டாய்| அருமைத் தமிழ்முனி ஆக எங்கும்” (பா.2.8) எனப்
பாடுகிறார். சப்பாணிப் பருவத்தில் அன்னை மரியாளுக்கு வீரமாமுனிவர் புதிய பெயர்
சூட்டியதையும், அப்பெயர் வெறும் புனை பெயராய் மட்டுமல்லாமல் மரியாளின் மாண்பினைப்
பிரதிபலிக்கும் விதமாக விளங்குவதையும் அவரின் புனிதத்தையும் 60 கண்ணிகளில்
பாராட்டியதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
வருகைப் பருவத்தில் வீரமாமுனிவரின் படைப்புகளை, “கலம்பகம் கலிப்பா அந்தாதி| கட்டுரை வண்ணம்
அம்மானை| காவியம்
காப்பியம் வெண்பாவில்| கலந்துற வாடும் வித்தகனே” (பா.6.2) என
எடுத்துரைத்துப் பாராட்டுகிறார். அம்புலிப் பருவத்தில் வீரமாமுனிவரின் தெய்வீகத்
தன்மையினைக் குறிப்பிட்டுள்ளார். இதில் வீரமாமுனிவருக்கு அன்னை மரியாள்மீது இருந்த
அன்பினை நுட்பமாக எடுத்துரைக்கிறார். சிற்றில் பருவத்தில் தமிழ் மொழி சந்திக்கும்
சோதனைகளைக் கவிஞர் எடுத்துரைப்பது, ஆசிரியரின் தமிழ்த் தேடலையும் தாகத்தையும்
வெளிப்படுத்துவதாக உள்ளது. சிறுபறைப் பருவத்தில் தமிழ் மொழியிலுள்ள ஒப்பில்லா
இலக்கியங்களைச் சுட்டி, அதன் மூலம் வீரமாமுனிவரின் தனித்தன்மையினையும், தமிழ்ப்
புலமையினையும் வெளிப்படுத்துகிறார். சிறுதேர்ப் பருவத்தில் வாழ்வியல் சிந்தனைகளை
வீரமாமுனிவரின் வாழ்வோடு கலந்து எடுத்துரைத்துள்ளார். வீரமாமுனிவரின் தமிழ்த்
தொண்டும் இறைத்தொண்டும் இந்நூலில் பிள்ளைத்தமிழ் வடிவில் அழகு பெற்றுள்ளது.
6. புனித அந்தோனியார் பிள்ளைத்தமிழ்
புனித அந்தோனியார் பிள்ளைத்தமிழ் 2024 இல்
நாகர்கோவிலிலுள்ள குறளகம் மூலம் வெளியிடப்பட்டது. ‘கோடி அற்புதர்’ எனப் புகழப்பட்ட புனித அந்தோனியார், 36 ஆண்டுகள்
இவ்வுலகில் வாழ்ந்தவர். புனித
அந்தோனியாரின் வாழ்வும் இறைப்பணியும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. அந்தோனியார் ஆன்மிகத்தை ஆழப்படுத்தி, இறைவார்த்தை
மூலம் மனித வாழ்வைப் புதுப்பிக்கும் இலட்சியப் பணியை ஏற்றவர். இறைவனின் அருளைப்
பெற்றதோடு, இயேசுவையே குழந்தை வடிவில் கரத்தில் ஏந்தப் பெற்றவர். நூலின் தொடக்கத்தில்
வேண்டல் என்னும் தலைப்பில் இரண்டு செய்யுட்கள் உள்ளன. இதில் ஆசிரியர் நூலைச்
சிறப்பாகப் படைக்க இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுதல் செய்கிறார். காப்புப்
பருவத்திலுள்ள செய்யுட்களில் அந்தோனியாரைக் காக்குமாறு மரியன்னையிடம்
வேண்டுகிறார். இப்பருவத்தில், “இன்னலால் மனம் ஏங்கிடுபவர்க் கீதலால் அருள்
செய்பவள்| இகவாழ்விலும்
பரவாழ்விலும் என்றுமேதுணை நிற்பவள்” (1.8) என மாதாவைப் புகழுகிறார். செங்கீரைப் பருவத்தில்
அந்தோனியாரின் பிறப்பு, போர்ச்சுக்கல் நாட்டின் சிறப்பு, பெற்றோர், அந்தோனியாரின்
இயற்பெயர் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. தாலப் பருவத்தில் இயேசு பிரான் போல
பாடுகள் சுமப்பதற்காக இளமையிலேயே துறவியாக மாறினாயோ? என வினவுகிறார். ஆசிரியர் அந்தோனியாரை, “சாயலில் உனையும்
இயேசுவைப்போல| சத்திய வடிவாய்க் காண்கிறேன்” (3.3) என்கிறார்.
சப்பாணிப் பருவத்தில் அந்தோனியாரின் பயணங்கள், இறைப்பணி, அருளுரைகள்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அந்தோனியார் சிசிலித் தீவில் ஆற்றிய இறைப்பணிகள், பிரான்சு
நாட்டிற்கு நடந்து சென்று இறைச் செய்தியை அறிவித்தது விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் இவரது
பணியை, “விதவிதமாய்த்
துறவிகளைச் சந்தித்துப் பல சபைகள்| வேரூன்ற விதைகள் நட்டாய்” (4.6) எனப்
பாடுகிறார். வருகைப் பருவத்தில் புனிதர் இத்தாலி சென்று பிரான்சிஸ் சபையின்
மேலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விருந்தில்
புனிதர் செய்த அற்புதங்களைக் குறிப்பிட்டு, ஓர் அற்புதத்தைக் கானாவூர் கல்யாண வீட்டில்
நடந்த அற்புதத்துடன் ஒப்பிடுகிறார். இப்பருவத்தில், “புனித இயேசுவின் புகழ்பரப்ப| புவியில்
தோன்றிய அந்தோனி” எனப் புகழ்கிறார். அம்புலிப் பருவத்தில் நிலவைக் குறித்து ஆசிரியர் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது. அந்தரத்தில் தொங்குகிறாய், உன் மேல்
ஆள்வதற்குப் பலரும் துடிக்கிறார்கள், வானத்தில் நீ தோன்றும் 15 நாட்கள்
தேய்ந்து பின்னர் மீண்டெழுவாய். ஆனால் எங்கள் அந்தோனி என்றும் வாழ்வில் சிந்தை
தளர்ந்து ஓய்வதில்லை என்கிறார். சிற்றில் பருவத்தில் புனிதர் உயிருடன்
இருக்கும்போது செய்த அற்புதங்களும், சிறுபறைப்
பருவத்தில் புனிதர் இறந்த பின்னர் செய்த அற்புதங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
7. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ்
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ் 2022 இல்
நாகர்கோவிலிலுள்ள நாஞ்சில் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. நீலகண்டபிள்ளை என்னும்
தேவசகாயம்பிள்ளை, டிலனாயின் மூலம் கிறித்தவரானார். இதனால்
திருவிதாங்கூர் அரசால் பாடுகள் பட்டு, துன்பங்கள் அனுபவித்து, சிறையில்
அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார். அவரைக் காணச் சென்ற மக்கள் பல
அற்புதங்களைப் பெற்றனர். இறுதியில் ஆரல்வாய்மொழியிலுள்ள காற்றாடி மலையில் சுட்டுக்
கொல்லப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார்.
இவ்வரலாற்றை தமிழ்க்குழவி பிள்ளைத்தமிழ் வடிவில் படைத்துள்ளார். நூலின்
தொடக்கத்தில் தேவசகாயம் வாழ்வோவியம் என்னும் தலைப்பில் 24 செய்யுட்களில்
அவர் வரலாறு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. தாலப் பருவத்தில் இந்திய இறையாண்மையில்
மன்னர் ஆட்சி முறைமையிலேயே மதியீனங்கள் மிக அதிகம் என அரசியலைச் சாடியுள்ளார்.
தேவசகாயம் அனுபவித்த துன்பங்கள், சித்திரவதைகளை ‘இயேசுபிரானின் கல்வாரிப் பாடுகள்
காற்றாடிக் குன்றில்’ என ஒப்பிட்டுள்ளார். தேவசகாயம் அனுபவித்த அத்தனை கொடுமைகளையும் வருகைப் பருவம் முதல் சிறுபறைப் பருவம் வரை விவரித்துள்ளார். தேவசகாயத்தின் பிரச்சினைகளில் அவருக்கு ஆறுதலாக இருந்த டிலனாய் பற்றிய செய்திகள் தாலப் பருவத்தில் இடம்பெற்றுள்ளன. செய்யுட்களில் எதுகை, மோனை, இயைபு, தொடை நயங்களும்
உவமை, உருவகம்
போன்ற அணிநலன்களும், கற்பனை
வளங்களும் நிறைந்து நூலுக்குப் பெருமை
சேர்க்கின்றன. காப்புப் பருவம் ஐந்தாவது பாடலில் இந்தியாவில் கத்தோலிக்கச் சமயம்
வளம்பெற புனித பிரான்சிஸ் சேவியர் காரணம் என்பதை அறிவுறுத்துகிறார். பத்தாவது
பருவமான சிறுதேர் பருவத்தில் மனிதன் புனிதனானச் செய்தியைக் கூறி நூலை நிறைவு
செய்கிறார்.
8. அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் 2019 இல்
நாகர்கோவிலிலுள்ள நாஞ்சில் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது. அன்னை தெரசா தனது பணிவாழ்வின் மூலம்
அனைவருக்கும் அன்னை ஆனவர். ஏழைகளுக்குத்
தனது பணியைத் தொடர்வதற்காகப் புதிய துறவற சபையைத் தொடங்கியவர். அன்னை தெரசாவைக் குழந்தையாகப் பாவித்து, அன்னை தெரசா
பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் அன்னை தெரசாவின் ஆன்மிகப்பணி, அறப்பணி, அருட்பணி போன்ற
உயரிய செயல்பாட்டினை எடுத்துரைக்கின்றது. நூலின் முன்பகுதியில் ‘வாழ்வோவியம்’ என்னும் தலைப்பில் அன்னையின் பிறப்பு, வளர்ப்பு, சோதனைகள், சாதனைகள், பெற்ற பெருமைகள், ஆற்றிய பணிகள்
போன்ற செய்திகள் 35 செய்யுட்களில் விவரிக்கப்பட்டுள்ளன. காப்புப்
பருவத்தில் தெரசா என்ற குழந்தையை பல்லாற்றானும் காத்திட அவர் போற்றிய இயேசு
கிறிஸ்துவை அழைத்து முழங்காலிட்டு வணங்கி வேண்டுகிறார். செங்கீரைப் பருவத்தில்
‘மண்ணில் உழன்ற மக்களுக் காக மதியாய் நடந்த மகத்துவமே’ (2.3) என்கிறார்.
முத்தப் பருவத்தில் ‘சேரிக்கரை மக்கள்படும் சிறுமைகண் டுழன்றாய்’ (5.2) என அன்னையின்
அருட்பணிகளைப் பட்டியலிடுகிறார்.
வருகைப் பருவத்தில் அன்னையின் காலம் கருதா கடின
உழைப்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார். அம்புலிப் பருவத்தில், ‘வானாடி
மகிழ்கின்றாய் வண்ணநில வேயுனக்கு வையத்திற் துணையா ருண்டு’ (7.1) எனக் கேட்டு, ‘கன்னிகையாள்
தெரசாவின் கைப்பிடித்தி ங்காட வாவா’ (7.1) என அழைக்கின்றார். அம்மானைப் பருவத்தில் தெரசா
அம்மையார் பிற நாட்டினராயினும் அன்பினடிப்படையில் பாரதத் தாயின் புதல்வியாக
ஏற்றுக் கொண்ட நம் அரிய மாண்பினைப் போற்றுகிறார். நீராடல் பருவத்தில் அன்னை மத
நல்லிணக்கத்தை, சகிப்புத் தன்மையை, புரிந்துணர்தலை போற்றிய தன்மையினைப் பாடுகிறார்.
ஊஞ்சல் பருவத்தில் பசும்பொன் தெரசாவை புன்னகை சிந்திப் பொன்னூஞ்சல் ஆடி மகிழ, மகிழ்விக்க
வேண்டுகிறார். நூலின் இறுதியில், “அன்னை தெரசா ஆற்றுப்படை” என்னும் தலைப்பில் 20 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நம் நாட்டின் இன்றைய
அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் போன்ற
துறைகளின் இழிநிலையை எடுத்துரைத்து, அவை களைந்திட
அனைவரும் அன்னையின் வழிநின்று செயல்பட நூலாசிரியர் வேண்டுகிறார்.
9. சிறுமலர் தெரசா பிள்ளைத்தமிழ்
சிறுமலர் தெரசா பிள்ளைத்தமிழ் 2022 இல்
நாகர்கோவிலிலுள்ள குறளகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. இந்நூல் வடக்கு பிரான்சு
நாட்டைச் சேர்ந்த சிறுமலர் தெரசா அவர்களின் வாழ்க்கை வராலற்றைப் பிள்ளைத்தமிழ்
வடிவில் விவரிக்கிறது. சிறுமலர் தெரசா தமது 15 ஆவது வயதில் துறவற வாழ்க்கைக்குள் புகுந்தார். 24 வயது வரை
வாழ்ந்த இவர், ‘ஓர் ஆன்மாவின் வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார். தமது முக்கிய பணியாக ஆன்மாக்களின் ஈடேற்றத்தையும், குருக்களுக்காக
ஜெபித்தலையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரால் பலர் நோயிலிருந்து குணமடைந்தனர்; பலர் மனமாற்றம்
பெற்றனர். இவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இவரது கல்லறையைத்
திறந்தபோது, கையிலிருந்த குருத்தோலை பசுமை மாறாமல் இருந்தது. தற்காலப் புனிதர்களில் மிகச்
சிறந்தவர் எனப் புகழப்படும் இவர், 1925 இல் புனிதர் பட்டம் பெற்றார். “கிறிஸ்துவே என்
அன்பு, அவரே என் நிறை
வாழ்வு, அன்புக்காக
இறப்பதே என் நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே என் ஆவல், அன்புக்காக
வாழ்வதே என் வாழ்வின் இலக்கு” என உரைத்தவர் சிறுமலர் தெரசா அவர்கள்.
காப்புப் பருவத்தில் இயேசு கிறிஸ்துவிடம் சிறுமலர் தெரசாவைக் காக்குமாறு
வேண்டுகிறார். செங்கீரைப் பருவத்தில்
தெரசாவை சிறு மலரே, அன்னப் பேடே, ஆய்மயிலே, அழகிய சிவந்த பசுங்கிளியே, வானில் மிளிர்
சுடரே, இசைக்குயிலே
என்றெல்லாம் வருணிக்கிறார். தாலப்
பருவத்தில் குடும்ப ஜெபங்கள், திருப்பலிகள், பொறுமை, மனத்திண்மை, கொள்கைப் பிடிப்பு, கனிவு, இரக்கம்
என்பவைகள் துறவறத்துக்குத் தேவை என எடுத்துரைக்கிறார். சப்பாணிப் பருவத்தில் கூடி
ஜெபம் செய்வதன் சிறப்பினை, “கூடியிருந்து செபிப்பதிலே| கொள்ளை இன்பம்
நீ கொண்டாய்” (4.8) எனப் பாடுகிறார். இப்பகுதியில் தெரசா கார்மல்
மடத்தில் சேர்ந்தது, பக்கவாதத் தந்தைக்குப் பணிவிடைகள் செய்தது, சிறுகுழந்தையாக
இருக்கும்போது தாயார் இறந்தது, அதனால் பட்ட துன்பங்கள்
விவரிக்கப்பட்டுள்ளன. நீராடல் பருவத்தில்
தெரசா கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லவர் என்பதனை
எடுத்துரைக்கிறார். புனித சிறுமலர் தெரசாவின் வாழ்வை இலக்கிய நயத்துடன் தெரிந்து
கொள்ள சிறந்த நூல்.
10. புனித அல்போன்சா பிள்ளைத்தமிழ்
புனித அல்போன்சா பிள்ளைத்தமிழ் 2019 இல்
நாகர்கோவிலிலுள்ள புனித அல்போன்சா அகாடெமி ஃபார் எக்ஸலென்ஸ் வாயிலாக
வெளியிடப்பட்டது. புனித அல்போன்சா இந்திய நாட்டின் முதல் புனிதை ஆவார். கேரள
நாட்டில் பிறந்து இறைப்பணியாற்றி, 36 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அல்போன்சா அவர்களின்
வாழ்வியலை பிள்ளைத்தமிழ் வடிவில் இந்நூல் எடுத்தியம்புகிறது. காப்புப் பருவம்
முதல் ஊஞ்சல் பருவம் வரையிலுள்ள செய்யுட்கள் படிப்பதற்கு எளிமையாக உள்ளன. புனித
அல்போன்சாவின் வாழ்வு இவ்வுலகு சார்ந்த சாதனை வாழ்வு அல்ல, மாறாக
மனத்தூய்மையிலும் இறைப்பணியிலும் உயர்ந்து விளங்கிய ஓர் உன்னத ஆன்மிக வாழ்வு.
“அவரின் ஆன்மிகப் பயணத்தால் அவர் பிறந்த இடம் பெயர் பெற்றது, வாழ்ந்த இடம்
அருள் பெற்றது, அவர் நடந்த இடம் புனிதமானது, அவர் உறங்கும் இடம் ஆலயமானது” என்னும் ஆசிரியரின் வரிகள் புனித அல்போன்சாவை சிறப்பாக நம் கண்முன்னே நிறுத்துகிறது.
காப்புப் பருவத்தில் ஆசிரியர் அல்போன்சாவைக்
காக்குமாறு அன்னை மரியிடம் வேண்டுகிறார். செங்கீரைப் பருவத்தில் புனித அல்போன்சா, சிறுமலர்
தெரசாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததிலிருந்து, அவரைப்போல் தானும் ஒரு புனிதையாக வேண்டும் என்ற
விருப்பம் அவரின் உள்ளத்தில் விதையாக விழுந்து, மரமாக வளரத் தொடங்கியது என்னும் செய்தி
இடம்பெற்றுள்ளது. இப்பருவத்தில் அல்போன்சா தமது திருமணத்தைத் தடுப்பதற்காகத் தனது
காலை நெருப்பிலிட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார். அந்த வேதனையைத் தான்
உணர்ந்தவராக, உணர்ச்சிமேலிட அவ்வழுகுரலை ஆசிரியர் பதிவு செய்கிறார். தாலப்பருவத்தில் புனித
அல்போன்சா தன் குழந்தைப் பருவத்தில் தனக்கான உணவைப் பிறருக்குக் கொடுத்து விட்டு, தான் பசியோடு
இருக்கும் ஈகை குணத்தைக் கவிஞர், “உணவில் எளிமை உற்றவர்க் கீந்துபின்| உண்ணல் அறமென்
றிருந்தாய் நீ” (3.9) எனக் குறிப்பிடுகிறார்.
வாழ்வோவியம்
தமிழ்க்குழவியின் பிள்ளைத்தமிழ் நூல்களில்
வாழ்வோவியம் என்னும் பகுதி நூலைத் தொடங்குவதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் அந்நூலின் கதைச் சுருக்கத்தினைச் செய்யுள் வடிவில்
எடுத்துரைத்துள்ளார். இது பிற பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து மாறுபட்டதாகவும், நூலைப்
படிப்பதற்கு ஆர்வம் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதை நூலின் முன்னுரை எனவும்
குறிப்பிடலாம்.
திருக்குறள் கருத்துகள்
ஆசிரியர் தமிழ்க்குழவி திருக்குறளில் மிகுந்த
புலமையும், ஈடுபாடும், செயல்திறமையும் உடையவர். இவர் திருக்குறள் தொடர்பான நூல்கள் எழுதியும், பள்ளி
மாணவர்களுக்கு திருக்குறள் தொடர்பான போட்டிகள் நடத்தியும், பரிசுகள்
கொடுத்து ஊக்குவித்தும் வருபவர். ஆதலால் இவரது படைப்புகளில் திருக்குறள்
கருத்துகள் இயல்பாகவே இடம்பெற்றுள்ளன.
இயேசுநாதர் பிள்ளைத்தமிழ் முத்தப் பருவத்தில்
இயேசு பெருமான் மக்களுக்கு ஆற்றிய அருளுரைகளை, “குவலயம் வாழக் குறள்போல் மொழிகள்| கொட்டி மனம்
மகிழ்ந்தாய்” (பா. 6) என்கிறார். புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ்
சப்பாணிப் பருவத்தில், திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும்படியாக
சூசையப்பரின் செயல்கள் அமைந்ததாகவும், திருவள்ளுவர் இங்கு வந்தால் உம்மை ஏற்றிப்
புகழ்வார் என்றும் அழகுறச் சுட்டுகிறார்.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழில்
பல இடங்களில் திருக்குறள் கருத்துகளைக் கையாண்டுள்ளார். சான்றாக, “இன்னா செய்தார் கினியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு” என்னும் குறளை ஆதாரமாகக் கொண்டு, காப்புப்
பருவத்திலுள்ள மூன்றாவது பாடலில், “இன்னா செய்தார்க் கினியவை புரிதல் இறைமை நிலை
என்றாய்”(1.3) என்கிறார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ (கு.71) என்னும் குறளின்
அடி செங்கீரைப் பருவம் முதல் பாடலில் இடம்பெற்றுள்ளது. சிறுதேர்ப் பருவத்திலுள்ள
ஏழாவது பாடலின் முதல் அடி, “எண்ணிய எண்ணியாங் கெய்துவ” (10.7) என
அமைந்துள்ளது.
அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் தாலப்பருவத்தில்
‘அறநூல் குறள்போல் இயேசுபிரான் அளித்த வேதம் ஓதுகிறாய்’ (3.5) எனவும், சப்பாணிப் பருவத்தில் ‘அன்பிற்குமுண்டோ
அடைக்குந்தாழ் இதற்கடையாளம் நீயே’ (4.10) என்றும் பாடுகிறார். இயேசுநாதர் பிள்ளைத்தமிழ்
தாலப் பருவத்திலுள்ள பாடலில் திருக்குறளின் இனிமையை, “தெள்ளத் தெளிந்த தீந்தமிழ்க் குறளின் திரவிய
மோகனமே, குவலயம் வாழக்
குறள்போல் மொழிகள் கொட்டி மன மகிழ்ந்தாய்” (3.6) எனப் பாடுகிறார். இதுபோன்று ஏராளமான திருக்குறள்
கருத்துகள் தமிழ்க்குழவியின் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இயற்கை வருணனை
புனித சவேரியார் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்
பருவத்தில் இயற்கையழகு வருணிக்கப்பட்டுள்ளது. செங்கீரைப் பருவத்தில், “கூடும் மேகக்
குன்றுகள் கண்டு| கூடிக் களித்துப் பாடுகின்றாய்| கொட்டும்
அருவிகள் ஓசைகள் கேட்டுக்| குளிர்ந்து பண்கள் இசைக்கின்றாய்” (2.2) என இயற்கையழகை
வருணித்துள்ளார். முத்தப் பருவத்தில் நாஞ்சில் நாட்டின் இயற்கை வளங்கள்
பேசப்படுகின்றன. குமரிக் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியை, “விண்ணில் பரந்து
விரிந்த நதி| வெள்ளி உருகிப் பாய்வதுபோல்| விழிகள் மயக்கும் திற்பரப்பு” (பா. 7) என வியந்து
பாடியுள்ளார். புனித சூசையப்பர்
பிள்ளைத்தமிழ்
செங்கீரைப் பருவத்தில் இயற்கை வருணனை நிறைந்துள்ளது. சான்றாக, “வாசமென் மலராய்
வந்தனை இங்கு| வண்ணத் தமிழ்ப்பூந் தொட்டிலிலே| வாழிய வாழிய வளனாய் ஈண்டு| வையகம் போற்றுக
பண்களிலே” (2.1) என்னும் அடிகளைச் சுட்டலாம். அமைதியின் வடிவாய், அறிவுச் சுடராய்
விளங்கும் சூசையின் பண்புநலன்களை ஆசிரியர் நன்கு சுவைத்து இப்பருவத்தின் பாடல்களை
இயற்றியுள்ளார்.
கற்பனைத் திறன்
இயேசுநாதர் பிள்ளைத்தமிழ் அம்புலிப் பருவத்தில்
சிதறிக் கிடக்கும் மேகத்திற்கிடையே பயணிக்கும் அம்புலியை, “கொத்திக் கொத்தி
மேகங்கள்| குலைத்த உன்திரு
மேனிக்குக்| குங்கும ஒத்தடம் தான்தருவான்| சீர்வெண் ணிலவே வாவாவா (பா.8) என அழைக்கும்
ஆசிரியரின் கற்பனைத்திறன் பாராட்டத்தக்கது. புனித சவேரியார் பிள்ளைத்தமிழ்
சிறுதேர்ப் பருவத்தில் “விண்ணின் மீன்கள்
அலங்கார| வெளிச்சத் திற்குக் கொணர்ந்திடவோ| வெள்ளை நிலவை முகம்பார்த்து| வியக்க இங்கே
அழைத்திடவோ” (10.6) போன்ற சந்த நயமிக்கப் பாடல்கள் அமைந்து, ஆசிரியரின்
கற்பனை நயத்தை வெளிப்படுத்துகின்றன. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ் சிறுபறைப்
பருவத்தில், தேவசகாயம் பிள்ளையின் உயிர் பிரிந்த வேளையில் இயற்கை அடைந்த மாற்றங்களை, “வானகத் தூதர்
வந்து வணங்கினர்| வான்மழை தூவியது| வண்ண நிலவு பார்ப்பதற் கஞ்சி| வாடிச்
சுருங்கியது| கானக மலர்கள் கருகின பூவளி| கவலையில் வாடியது| கற்பா றைகள் பிளந்தன தெற்கில்| கடலலை கலங்கியது” (9.9) எனக் கற்பனையோடு
எடுத்துரைக்கிறார்.
வரலாற்று நிகழ்வுகள்
புனித சவேரியார் பிள்ளைத்தமிழ் தாலப் பருவத்தில்
இந்திய நாடும், தமிழினமும் அடிமை இருட்டில் திசை தெரியாது அல்லலுற்ற நாளில் பொதுவுடைமை, சமுதாயப் பார்வை, தமிழ் விடுதலை
இவற்றிற்காகக் குரல் கொடுத்த பாரதிக்கு முன்னரே, இவற்றிற்காகக் குரல் கொடுத்தவர் சவேரியார்
என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறுபறைப் பருவத்தில் வடுகர் படையை ஜெபத்தினால்
வென்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.
சிறுதேர்ப் பருவத்தில் கோட்டாறு தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
திருவிழா பற்றி எடுத்துரைக்கிறார். குருசடி, இளங்கடை, மறவன்குடியிருப்பு போன்ற சுற்று வட்டாரக் கிராம
மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து திருவிழாவைச் சிறப்பிக்கும் பாரம்பரிய
முறையையும் ஆசிரியர் விவரிக்கிறார்.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழில்
அக்காலப் போர்ப் பயிற்சிகள், களரிகள் என தென்திருவிதாங்கூரில் மையப்பட்டு
இருந்த அத்தனை அடிமுறைப் பயிற்சிகளையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். செங்கீரை, முத்தப் பருவங்களில் குமரி மாவட்டத்தில்
மக்களிடையே காணப்பட்ட மருமக்கள்வழி மான்மியத்தின் கொடுமைகளை
எடுத்துரைக்கிறார். சப்பாணிப்பருவம்
முதல் பாடலில் உதயகிரிக் கோட்டை பற்றியும், புத்தன் அணை கட்டியது பற்றியும்
குறிப்பிடுகிறார்.
உவமைகள்
புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் அம்புலிப் பருவத்தில் புனித சூசையப்பரை
அழகுமிகு உவமைகளால் வர்ணிப்பதும், அம்புலியை சூசையப்பரோடு விளையாட அழைப்பதுமான
கவிதை அடிகளில் அழகு நிறைந்துள்ளது. புனித அல்போன்சா பிள்ளைத்தமிழ் முத்தப்
பருவத்தில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உவமைகளின் உத்திகள் அனைத்தும் சங்க
காலத்துத் தலைவன் தலைவியின் உள்ளத்து அன்பினையும், தலைவனுக்காய்த் தூது விடுவது போல் அமைந்துள்ளது
என்பதனையும், “சிந்தனைப் பறவையைத் தூதுவிட்டுத்| தேவ னோடு களித்திருப்பாய்” (5.5) என்கிறார்.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ் தாலப் பருவத்தில், மக்கள்
மன்னராட்சியில் மருமக்கள்வழி மான்மியத்தால் துன்பங்கள் அனுபவித்த நிலையில், நல்ல அறம்
அறிந்த அறிஞர்கள், இருதலைக் கொள்ளி எறும்பே போல் தவித்தனர் (3.2) என உவமையைப் பொருத்தமாகக் கையாண்டுள்ளார். இவை
சில சான்றுகள்.
விவிலியக் கருத்துகள்
புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் சிற்றில்
பருவத்தில் ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல
எண்ணியதை அறிந்தவுடன், குழந்தையை மறைவாக வைக்க எகிப்து செல்ல நினைத்து
சூசையப்பர், குழந்தை இயேசுவையும் தாய் மரியாளையும் அழைத்துக் கொண்டு எகிப்து வந்தடைந்த
நிலையை விவிலியக் கருத்துகளோடு பிணைத்து கவிதை வடிவில் தந்திருப்பது அருமை.
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தில், “ஒருவன் உன்னை
வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு” (மத்.5:39) என்னும் வசனத்தை, “கன்னத்
தறைந்தால் மறுகன்னத்தைக்| காட்டென் றுரைசெய்தாய்” (1.3) எனப்
பாடுகிறார். சப்பாணிப் பருவத்தில் இடம்பெற்றுள்ள, “வருத்தப்பட் டுழன்றுமிகப் பாவங்கள்
சுமப்பவர்காள்| வாருங்கள் என்னி டத்தில்” (4.7) என்னும் அடிகள், விவிலியத்தில் இடம்பெற்றுள்ள “வருத்தப்பட்டுப்
பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்னும் வசனத்தை அடிப்படாயாகக் கொண்டவை. இதுபோன்று இன்னும் பல சான்றுகளைச் சுட்டலாம்.
கவிநயம்
வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழில் இறைமகன்
இயேசுவுக்கு அநியாயத் தீர்ப்பு வழங்கி அவரை சிலுவையில் அறைந்து கொல்ல அழைத்துச்
செல்கின்றனர். அந்தக் கொலைப் பாதகர்களைக் கவிஞர் ‘கூடுகள் சுமக்கும் கொலைபாதகர்’ எனக் குறிப்பிடுகிறார். அதாவது மனித உடல் என்னும் வெறும் கூட்டைச் சுமப்பவர்களாக அக்கயவர்களைத் தனது கவிநயத்தால் கூறுகிறார். மரியன்னை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவத்தில் மரியாளை, “பொன்னா பரணம் புனையாத| புன்னகை அரசி
மரியன்னாய்” (6.7) எனக் கூறுவதில் ஆசிரியரின் கவித்துவம்
புலப்படுகிறது. அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் அம்புலிப் பருவத்தில், “வீழ்கின்றாய்
எழுகின்றாய் நடக்கின்றாய் கடலுக்குள்| வீணாகிக் கரைகின் றாயே| விதியீதென்
றெண்ணிமனம் வெம்பியழு கின்றாயோ?” (7.4); “ஓடுகின்றாய் ஒளிகின்றாய் யாரிடத்திற் கடன்பட்டாய்| ஓடாகி
மெலிந்துபோனாய்” (7.6) போன்ற அடிகள் கவிஞரின் கவித்துவத்திற்குச்
சான்று.
தேம்பாவணி
புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் வருகைப்
பருவத்தில் யூதேயா நாட்டில் பிறந்த குழந்தையான புனித சூசையப்பரை தேம்பாவணி என்ற
நூல் வழியாக வீரமாமுனிவர் தமிழகம் அழைத்து
வந்ததாக தமிழ்க்குழவி அறிமுகப்படுத்தி, தேம்பாவணிக்கும் வீரமாமுனிவருக்கும் சிறப்பு
சேர்க்கிறார்.
முடிபாக ...
இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கிறித்தவப்
பிள்ளைத்தமிழ் நூல்கள் வெளிவந்து கொண்டிருப்பது கிறித்தவ இலக்கியத்திற்குப்
பெருமையும் வலிமையும் சேர்க்கிறது. கவிஞர் தமிழ்க்குழவியின் கிறித்தவப்
பிள்ளைத்தமிழ் நூல்கள் விவிலியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டும், இயேசு
கிறிஸ்துவுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் குறித்தும்
எடுத்துரைக்கின்றன. இந்நூல்கள் மனித
வாழ்வுக்கு வழிகாட்டியாகவும் உந்துதல் சக்தியாகவும் விளங்குகின்றன. இந்நூல்களின்
வாயிலாக பல வரலாற்று நிகழ்வுகளை ஆசிரியர் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
தமிழ்க்குழவியின் பிள்ளைத்தமிழ் நூல்களில் திருக்குறள் கருத்துகள் ஏராளம்
இடம்பெற்று கவிஞரின் திருக்குறள் ஈடுபாட்டினையும், புலமையினையும் வெளிப்படுத்துவதுடன் நூலின்
தரத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும் வருணனைகள், கற்பனைத் திறன் போன்றவைகள் நிறைந்து, இந்நூல்களின் கருத்தாழத்தை வெளிக்கொணருகின்றன.
__________________
பின்னிணைப்பு
கிறித்தவப் பிள்ளைத்தமிழ் நூல்கள்
1. அச்சிறுபாக்கம் மழை மலை மாதா பிள்ளைத்தமிழ் (2005) - பி. வனத்தையன்
2. அருட்பணி அருளப்பன் பிள்ளைத்தமிழ் -
பி. வனத்தையன்
3.
அன்னை தெரசா பிள்ளைத்தமிழ் (2019) - தமிழ்க்குழவி
4.
இம்மானுவேல் பிள்ளைத்தமிழ் (1864) - ஜே.பி. மனுவேல்
5.
இயேசு பெருமான் பிள்ளைத்தமிழ் (1993) - எஸ். இராமநாதன்
6.
இயேசுநாதர் பிள்ளைத்தமிழ் (1997) – பெ. வைத்தியலிங்கம்
7.
இயேசுநாதர் பிள்ளைத்தமிழ் (2019) - தமிழ்க்குழவி
8.
இயேசுபிரான் பிள்ளைத்தமிழ் (1985) - அருள் செல்லத்துரை
9.
இறைமைந்தர் பிள்ளைத்தமிழ் (1985) - கா. அருணகிரிநாதன்
10. ஏசு பிள்ளைத்தமிழ் (1994) - க. லியோனிதின்
11. ஏசுநாதர் பிள்ளைத்தமிழ் (1965) - இ. குற்றாலம்
12. ஏசுபிரான் பிள்ளைத்தமிழ் (2004) – கா. ஆனந்தன்
13. கன்னிமரி பிள்ளைத்தமிழ் (1972) - எஸ். தம்பிரான்
தோழபிள்ளை
14. சிறுமலர் தெரசா பிள்ளைத்தமிழ் (2022) - தமிழ்க்குழவி
15. செவாலியர் தாமஸ் பிள்ளைத்தமிழ் (1989) - புலவர் பா.
கிருட்டிணமூர்த்தி
16. சேசுநாதர் பிள்ளைத்தமிழ் (1864) - சாமிநாதப்
பிள்ளை
17. சேவியர் பிள்ளைத்தமிழ் (2022) – அ. அந்தோணி எட்வர்ட் யூஜின்
18. திவ்விய இரட்சகர் பேரில் பிள்ளைத்தமிழ் (1904) - பிரான்சீஸ்குப் பிள்ளை
19. தேவமாதா பிள்ளைத்தமிழ் - வீரமாமுனிவர்
20. தொன்போஸ்கோ பிள்ளைத்தமிழ் (1985) - புலவர் தில்லை
எழிலன்
21. நசரேயர் பிள்ளைத்தமிழ் (1919) - எஸ்.
வேதமாணிக்கம்
22. புனித அந்தோனியார் பிள்ளைத்தமிழ் (2024) - தமிழ்க்குழவி
23. புனித அல்போன்சா பிள்ளைத்தமிழ் (2019) - தமிழ்க்குழவி
24. புனித சவேரியார் பிள்ளைத்தமிழ் (2021) - தமிழ்க்குழவி
25. புனித சூசையப்பர் பிள்ளைத்தமிழ் (2021) - தமிழ்க்குழவி
26. மடு அன்னை பிள்ளைத்தமிழ் (2004) – மு. சிங்கராயர்
27. மரியன்னை பிள்ளைத்தமிழ் - புலவர் சூ. தாமஸ்
28. மரியன்னை பிள்ளைத்தமிழ் (2022) - தமிழ்க்குழவி
29. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைத்தமிழ் (2022) - தமிழ்க்குழவி
30. மெய்ஞ்ஞானப் பிள்ளைத்தமிழ் (1870) - சுவாமியடியான்
உபாத்தியாயர்
31. வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் - பண்ணை சண்முகம்
32. வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் (2020) - தமிழ்க்குழவி
33. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பிள்ளைத்தமிழ்(1980)- உரோசம்மா இலாரன்சு
34. வேளை மரியன்னை பிள்ளைத்தமிழ் (1977) - புலவர் சூ.
தாமஸ்
முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்
No comments:
Post a Comment