Friday, 10 July 2026

கிறித்தவ இலக்கியம் நானூறு

 




அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய சங்க இலக்கியங்கள் 400 பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப் பெற்றுள்ளன. இத்தகைய மரபில் நம் முன்னோர்களின் அடிச்சுவட்டில் கிறித்தவ இலக்கியம் நானூறு என்னும் இந்நூல், 400 கிறித்தவத் தமிழ்ச் செய்யுள் இலக்கியங்களை அறிமுகப்படுத்துகிறது. தமிழுக்கும் கிறித்தவத்திற்கும் எவ்வளவு அழகான, அழுத்தமான, ஆழமான பரந்துபட்ட உறவாடல் இருந்துள்ளது என்பதை இந்நூல்கள் வெளிப்படுத்துகின்றன. ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பெற்ற கிறித்தவம் சார்ந்த பொருண்மையினையும், பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த புற வடிவினையும் இணைக்கும் புதிய இலக்கிய வகையாக உருப்பெற்று வளர்ந்து, காலப்போக்கில் தமிழிலக்கியத்தின் தனிப்பிரிவாகக் கிறித்தவ இலக்கியம் மலர்ந்துள்ளது.

தமிழகத்திலும், இலங்கையிலும் ஆங்காங்கே காணப்படும் செய்யுள் வடிவிலான கிறித்தவத் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து, அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டதே இந்நூல். ஒவ்வொரு நூல்களும் ஒவ்வொரு பக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 400 செய்யுள் நூல்களுள் மரபிலக்கணத்திலுள்ள 54 காப்பியங்களும், 17 புதுக்கவிதைக் காப்பியங்களும், 41 அம்மானை நூல்களும், 29 பிள்ளைத் தமிழ் நூல்களும், 17 கும்மி நூல்களும், 19 அந்தாதி நூல்களும், 5 சதக நூல்களும், 8 கலம்பக நூல்களும், 3 குறவஞ்சி நூல்களும், 3 உலா நூல்களும், 4 ஆற்றுப்படை நூல்களும், இன்னும் பல வகையான இலக்கிய வகைமைகளும்  இடம்பெற்றுள்ளன. இந்நானூறு நூல்களுள் 41 நூல்கள் 34 இலங்கைத் தமிழர்களால் படைக்கப்பட்டவை. இத்தொகுப்பில் 40 நூல்கள் புதுக்கவிதை வடிவிலானவை.

   இந்நூலில் தமிழில் முதலில் 1586 க்கும் 1600 க்குமிடையே எழுதப்பட்ட சிற்றிலக்கியமான, “புனித அந்தோனியார் அம்மானை என்னும் நூலின் அறிமுகமும்; 1603 இல் கருவைநகர் கவிராயன் சிதம்பரநாதன் எழுதிய முதல் காப்பியமான “பன்னிரு புனிதர் காதை என்னும் நூலின் அறிமுகமும் இடம்பெற்றுள்ளன. தேம்பாவணி எழுதப்படுவதற்கும் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டக் காப்பியம் பன்னிரு புனிதர் காதை என்பதாகும். வீரமாமுனிவரால் எழுதப்பட்டதாக நம்பப்படும், “தேவமாதா பிள்ளைத்தமிழ் நூல் குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன.  

இலங்கையிலிருந்து கிடைக்கும்  காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. இலங்கையில் தொடக்கக்காலக் கிறித்தவ இலக்கியங்கள் போர்ச்சுக்கீசியர் காலத்திலும், ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்திலும் படைக்கப்பட்டன. போர்ச்சுக்கீசியர் காலத்தில் சந்தியோகுமாயோர் அம்மானை (1647), ஞானப்பள்ளு, ஞானானந்த புராணம் ஆகிய நூல்கள் படைக்கப்பட்டன. இலங்கையில் இயற்றப்பட்ட முதல் கிறித்தவ நூல் சந்தியோகுமாயோர் அம்மானை என்பதாகும். இந்நூல் எழுதப்படுவதற்கும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் புனித அந்தோனியார் அம்மானை இயற்றப்பட்டுவிட்டது.

தமிழகமும் இலங்கையும் மேலைநாட்டுக் கிறித்தவ இறைத்தொண்டர்களின் வருகையால் பெற்ற நன்மைகளுள் ஒன்றாக, தமிழிலக்கியம் செழுமையும் வளமையும் பெற்றதைக் குறிப்பிடலாம். தமிழால் கிறித்தவம் வளர்ச்சி பெற்றது; கிறித்தவத்தால் தமிழ் வளர்ச்சி பெற்றது. கிறித்தவ இலக்கியத்தில் காணலாகும் செய்யுள் இலக்கியங்களை ஒருசேரத் தொகுத்து வழங்கும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள, “கிறித்தவ இலக்கியம் : அறிமுகமும் ஆவணமும் என்னும் பகுதி கிறித்தவ இலக்கியங்கள் தொடர்பான செய்திகளை விரிவாகத் தருகிறது. கிறித்தவ இலக்கியங்கள் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு வழிகாட்டும் நூல் இது.

இந்நூல் 2026 ஜனவரி மாதத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் மூலம் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. மொத்த பக்கங்கள் 448; விலை ரூ. 375/-

யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

No comments:

Post a Comment