Wednesday, 5 August 2026

ஜி. எஸ். வேதநாயகரின் கும்மிப் பாடல்களில் சமுதாய அறங்கள்

 


              கிறித்தவ இலக்கிய உலகில் வேதநாயகர் என்னும் பெயரினை உடையோர் மூவர். ஒருவர் வேதநாயக சாஸ்திரியார்; இன்னொருவர் தமிழ் நாவலின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை; மற்றொருவர் ஜி.எஸ். வேதநாயகர். வேதநாயக சாஸ்திரியாரைப் போன்று ஜி.எஸ். வேதநாயகர் தமிழிலக்கியப் பணியும், சமயப்பணியும் ஆற்றி வந்தவர்.   ஜி.எஸ். வேதநாயகரின்  சிற்றிலக்கிய நூல்களுள் சதகம், கும்மி, அந்தாதி   என்னும் இலக்கிய வகைமைகள்  குறிப்பிடத்தக்கனவாகும். இவர் ஆடவர் கும்மி, மாதர் கும்மி என்னும் இரு கும்மி நூல்களைப் படைத்துள்ளார்.

ஆசிரியர் வரலாறு      

      மதுரையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேத்தாம்பட்டி என்னும் கிராமத்தில்   சோலைமலை - கருப்பாயி தம்பதியருக்கு மகனாக 1868 ஆம் ஆண்டு  வேதநாயகம் பிறந்தார்.  இவரது இயற்பெயர் நாகையா என்பதாகும். தந்தை இறந்த பின்னர்,வாஷ்பன் ஐயரால் வளர்க்கப்பட்டார்.   பன்னிரண்டு வயதில் இயேசுவை ஏற்றுக் கொண்டு, தமது பெயரினை வேதநாயகர் என மாற்றிக் கொண்டார்.  பள்ளிக் கல்வி முடித்த  பின்னர் மூன்று ஆண்டுகள் இறையியல் கல்வி பயின்று போதகரானார்.

         1889 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் வேதநாயகர்,  சாண்ட்லர் ஐயரின் வளர்ப்பு மகளாகிய ஆசீர்வாதம் அம்மையாரைத் திருமணம் செய்தார். வேதநாயகரின் ஊழிய வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் பிரித்தறிய முடியாத அளவில் அமைந்திருந்தது. பல இன்னல்களின் நடுவிலும் இருவரும் சேர்ந்து இறைத்தொண்டு செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்று வருவர். அவர் தெருவில் நின்று நற்செய்தி சொல்லும்போது அவருடைய மனைவி அருகில் நின்று இனிமையாகப் பாடுவார்.  மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்லாண்டுகள்பணிபுரிந்தார். சென்னை சூளைமேட்டிலுள்ள தூய அந்திரேயா ஆலயத்திலும் பணியாற்றினார். அக்காலத்தில் இவ்வாலயத்தை வேதநாயகம் ஐயர் ஆலயம் என்பர். 

படைப்புகள்

     அருள்திரு. ஜி.எஸ். வேதநாயகரின் மாதர் கும்மி, ஆடவர் கும்மி, நித்தியானந்தக் காதல், அமலகுருசதகம், சற்குருசதகம், கிறிஸ்துபெருமான் சரிதைமாலை, பரலோகராச்சியப் பாமாலை, நூதன மாலிகை, உயர்வக்கண நிராகரணத் தந்தாதி, நெஞ்சுருவு கட்கம், ஜீவிய நன்றி ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன. இருமை நெறிக்குறள், தையலர் சிந்து, நகை எழுபது, நராவதாரக் கடவுள் நாமசுப்ரதீபம், நரமிருக நொண்டிச் சிந்து ஆகியவை    நூல்களாக வெளிவரவில்லை.

மாதர்கும்மி

           மாதர் கும்மி நூல் 300 பாடல்களைக் கொண்டது. இந்நூல் மகளிரின் வாழ்வுக்குரிய இலக்கணங்களையும் செயல் முறைகளையும் கும்மிப் பாக்கள் வழிநின்று புலப்படுத்துகின்றது. பெண்கள் கல்வி கற்று ஆண்களுக்கு இணையாகத் திகழவேண்டும் என்பது வேதநாயகரின் கருத்து. பெண்கள் கல்வி என்னும் தலைப்பில் காணப்படும் செய்திகள், பெண்கள் முன்னேற்றத்தில் வேதநாயகருக்கிருந்த ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றது. இந்நூல் 1892 இல் வேப்பேரி எம்.ஈ. பப்ளிஷிங் ஹவுசால் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆடவர் கும்மி

           ஆடவர்க்கென்றே இயற்றப்பட்ட முழுநீளக் கும்மி நூல் ஆடவர் கும்மி என்பதாகும். இந்நூல் 1892 இல் வேப்பேரி எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஐந்தாம் பதிப்பாக 1914 இல் வெளிவந்துள்ளது. ஆடவரின் வலிமையையும் சிறப்புகளையும் எடுத்துக் கூறுவதுடன் அவர்களின் தீய குணங்கள், அகங்காரங்கள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி அறிவுரை வழங்குகின்றார். நூல் முழுவதும் கிறிஸ்தவக் கருத்துகள் நிறைந்திருப்பினும் பெண் விடுதலை, வரதட்சணைக் கொடுமை, சமுதாயச் சீர்திருத்தம்   பற்றியும் பாடியுள்ளார்.  இந்நூலில் 341 பாடல்கள் உள்ளன. 

சமுதாய அறங்கள்

   ஜி.எஸ். வேதநாயகர் தமது இரண்டு கும்மி நூல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமுதாய அறங்களை அறிவுரையாக வழங்குகிறார். இக்கருத்துகளைப் பின்பற்றி இறை உணர்வுடன் இருபாலாரும் வாழ்ந்தால் வாழ்வில் வளம் பெறலாம் என்பது வேதநாயகரின் நம்பிக்கையாகும். 

ஆண்களுக்கான அறிவுரை

          ஜி.எஸ். வேதநாயகர்  ஆடவர் கும்மியில் ஆண்களுக்கான அறிவுரையை விரிவாக வழங்குகிறார். அறிவுரைகளுக்கு நடுவில் வேதத்தைப் பின்பற்றி வாழவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.

1. கள் உண்ணாமை

          கள் உண்ணாமை குறித்து கிறித்தவ ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளில் அதிகமாக சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக அருள்திரு. சி. மாசிலாமணி தமது மதுபானக் கண்டனக் கும்மி (1870), மது கொண்டான் கதை(1871) என்னும் நூல்களில் கள் உண்பதால் வரும் கேடுகளை விரிவாக விவரித்துள்ளார். ஜி.எஸ். வேதநாயகர் ஆடவர் கும்மியில் மதுபானக் கடைக்குச் செல்லாதே, சாராயம் குடிக்காதே, கஞ்சா, அபின், மூக்குப்பொடி போன்றவற்றைப் பயன்படுத்தாதே என சமுதாய அறங்கள் பலவற்றை  விவரிக்கிறார். 

காரணமற்று மதுபானலகிரி

கஞ்சாஅபினிகொள் துர்ப்பழக்கம்

பாரில்விளையாட்டுப் போலதுவங்காமல்

பத்திரமாயிரு ஆடவனே

 

என்னும் பாடலில் கெட்ட பழக்கவழக்கங்களை விளையாட்டுப் போலத்  தொடங்காமல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்கிறார். 

2. துர்ச் செயல்கள் செய்யாமை

   மனிதர்கள் பல்வேறு துர்ச்செயல்கள் செய்வதன் மூலம் சமூகத்தில் அவப் பெயருக்குள்ளாகின்றனர். சிற்றின்பப் பாடல், சீரற்றப் பேச்சுகளை வெறுத்திடு எனவும், துர்ப் பேச்சைக் கேளாதே எனவும், பரத்தையர் வீடு செல்லாதே எனவும் ஜி.எஸ். வேதநாயகர் வலியுறுத்துகிறார்.

சிற்றின்பப்பாடல்கள்   சீரற்றபேச்சுகள்

சிங்காரக்காமச் சரித்திரங்கள்

முற்றுக்கேளாமல் வெறுத்திடுங் காதுகள்

மோட்சசங்கீதத்தா  லின்புறுமே 

என்னும் பாடலின் இறுதியில் இவற்றை வெறுக்கும் காதுகள் மோட்ச சங்கீதங்களால் இன்புறும் என அறிவுரை கூறுகிறார். மேலும் அழகானப் பெண்ணைப் பார்த்தால் முகம் கவிழ்ந்து செல்வது ஆடவனுக்கு நல்லது என அறிவுறுத்துகிறார்.

3. உதவும் மனப்பான்மை

          ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவுதல் புண்ணியமான செயல் என இரண்டு பாடல்களில் கருத்துரைக்கிறார்.

மிஞ்சிவிரலிட்டுத் தங்கமிதியடி

மேலேயுலாவிடுஞ் சீமானே

கெஞ்சுமெளியர் பிணியரைத் தேடிப்போய்

கொஞ்சமுதவினால் புண்ணியமே 

என்னும் பாடலில் ஏழைகளையும் நோயினால் துன்பப்படுபவர்களையும் தேடிப்போய் உதவ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

4. நிலையாமை

    உடல் நிலையில்லாதது என்பதனைக் கூறி ஆசிரியர் பல கருத்துகளை எடுத்தியம்புகிறார்.   உலகில் செல்வந்தனாக வாழ்ந்தாலோ அல்லது ஏழையாக வாழ்ந்தாலோ இறுதியில் ஆறடி நிலம்தான் என்னும் கருத்தை,

பூமிமுழுமையுந் தானாண் டகன்ற

பொன்னரமனையில் வாழ்ந்தவனும்

கோமணாண்டியும் ஆறடியாகும்

குழிக்குள் ளடங்குவா ராடவனே 

என்னும் பாடல் மூலம் கூறுகிறார். மேலும் ஒருவன் இறந்தபின் அவனது பெருமைகள் கூடவராது. ஆனால் அவன் செய்த நல்வினையும் தீவினையும் கூடவரும் என்பதை, 

செல்வமலங்காரங் கீர்த்தி வலிமைகள்

செத்தபின் கூட வராதெனவும்

நல்வினை தீவினை ரண்டும் வருமென்றும்

நம்பி நடப்பாயே யாடவனே 

என்னும் பாடல் மூலம் எச்சரிக்கையாக விடுக்கின்றார். இதன் மூலம் நிலையில்லாத உலகத்தில் மனிதன் சமுதாய அறங்களைப் பின்பற்றி வாழ வேண்டும் என விரும்புகிறார் எனலாம்.

5. இறைப்பற்று

        ஆண்கள் இறைப்பற்றுடையவர்களாக விளங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். விவிலியத்தைத் தினமும்  வாசிக்க வேண்டும் எனவும் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவனுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகிறார். இக்கருத்துகளை,

வேடிக்கைபார்க்க இராவெல்லாந் தூங்காமல்

விழித்திருக்கின்ற ஆடவனே

வாடிக்கையாய்த்தினங் கால்மணி வேதத்தை

வாசித்தகக்காட்சி காணாயோ

எனவும்,

வர்த்தகரண்டையில் மிச்சப்பணங்களை

வட்டிக்குப்போடுஞ் சிநேகிதனே

கர்த்தரிடத்திலும் பத்திலொன்றைக் கொடு

நித்தியத்துக்காகு மாடவனே 

எனவும் பாடுகிறார். இன்றைய ஆண்கள் பின்பற்ற வேண்டிய கண்டிப்பான நடைமுறை இதுவாகும். இவற்றைப் பின்பற்றும்போது சமுதாயத்தில் மேன்மையானவர்களாக இறைவனால் நடத்தப்படுவார்கள் என்பது திண்ணம். இக்கருத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான அறிவுரை

         ஜி.எஸ். வேதநாயகர் பெண்களுக்கான முன்னேற்றக் கருத்துகளை மாதர் கும்மியில் விளக்குகிறார். இந்நூலில் பெண்களுக்கான கல்வி மற்றும் சீர்திருத்தக் கருத்துகள் குறிப்பிடத்தக்கன.

1. நல்ல குடும்பப் பெண்

       பெண் ஒருத்தி நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டுமெனின் பல நல்ல குணங்கள் உடையவளாகக் காணப்பட வேண்டும். ஆடம்பரங்களை நாடாதவளாக இருக்க வேண்டும்; மாமியாரோடு சண்டை போடக் கூடாது; பெரியோர்களை மதிக்க வேண்டும்; புறம் பேசக் கூடாது; சந்தேகம் தோன்ற நடக்கக் கூடாது; கோள் குண்டணி சொல்லக் கூடாது; பாத்திரமறிந்து பிச்சை போட வேண்டும்; வீண் கதை பேசக் கூடாது; ஆடவர் கூடுமிடத்தில் பேசக் கூடாது; விருந்தோம்பல் குணம் இருக்க வேண்டும்; பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்; பெருமை பேசக் கூடாது; சுத்தமாக இருக்க வேண்டும்; பேராசை கொள்ளக் கூடாது என்றெல்லாம் முன்னேற்றக் கருத்துகளைப் பட்டியலிடுகிறார்.

கற்பென்னும் பட்டை உடுத்தடியோ நாணக்

காதணி தன்னை அணியடியோ

நற்புத்தி யென்னுஞ் சரப்பணிப் போடுதல்

நல்லழகே முத்து மாதரசே 

என்னும் பாடலில் பெண்களுக்கு நல்ல அறிவுதான் நல்ல அழகு என வலியுறுத்துகிறார். ஒரு பெண்ணை நாடு புகழ வேண்டுமெனின்,

மன்னன்மகிழ உனைச்சோடி உந்தன்

மாமிமகிழவே தாழ்மையணி

சின்னமகலக் கடுமொழி சொல்லுனை

தேசம்புகழும் மாதரசே 

என ஆலோசனை சொல்லுகிறார். மேலும்,

கோளுங்குண்டணியும் சொல்லாதே மற்ற

கோளர்கள் சொல்லையும் கேளாதே

நாளுமவதூறு பேசாதே இது

நல்லதல்லமுத்து மாதரசே 

என்னும் பாடலில் எவையெல்லாம் நல்லவை அல்ல என்பனவற்றைப் பட்டியலிடுகிறார். மேலும்,

கொண்டகணவனைப் பேணடியோ அவன்

கோபிக்கும்போது நீ தாழடியோ

தண்டனைதன்னைச் சகியடியோ இது

தர்மமடிமுத்து மாதரசே 

என அறிவுறுத்துகிறார். பெண்கள் மீது காணலாகும் நிந்தையை நீக்க பாடுபட வேண்டும் என்பதை,

மாமியார்மெச்சு மருமகளில்லை

மருமகள்மெச்சிடும் மாமியில்லையென்று

நேமிபுகன்றிடும் நிந்தையைநீக்க

நினைந்திரடிமுத்து மாதரசே 

என வலியுறுத்துகிறார். இந்த உலக வாழ்க்கையையே சதம் என்று நம்பி எப்பொழுதும் ஆடம்பரங்களை விரும்பக் கூடாது. பிறர் மீது அன்பு செலுத்தி தெய்வ பக்தியுடன் நாட்களைக் கழிக்க வேண்டும். மஞ்சளழகும் மணியழகும் வாயழகும் கூந்தலழகும் சந்ததி, சாதிப் பிறப்பழகும் காலம் செல்லச் செல்ல மிகவும் வருத்தமுள்ளவைகளாக அமையும் எனக் குறிப்பிடுகிறார்.

2. பெண் கல்வி

       மேலைநாட்டு கிறித்தவ இறைத்தொண்டர்கள் பெண்களுக்கான கல்விக்கு முதன்மை கொடுத்தனர். மேலைநாட்டுப் பெண்களை உதாரணம் காட்டி,

வெள்ளைக்காரப் பெண்களெல்லாம் படித்ததால்

மேலான ஞானிகளானார்கள்

தெள்ளிய நூதனஞ் செய்தார்கள் இதைச்

சிந்தை செய்யேன் முத்து மாதரசே

 

என அறிவுறுத்துகிறார். பெண்ணானவள்  கல்வி கற்றால் பேதைமையை விட்டுவிடலாம்; பெண் புத்தி பின் புத்தி என்னும் ஏளனப் பேச்சை விரட்டலாம்; நல்லறிவு உடையவளாக வாழலாம்; பிற நாட்டவரோடு பேசலாம்; வாயிலிருந்து நல்ல சொற்கள் வரும்; சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கலாம்; சோம்பல் இராது; குழந்தைகளை வளர்ப்பதற்குப் பயன்படும்; கட்டுக் கதைகளை  நம்ப மாட்டாள்; சகுனம் பார்க்க மாட்டாள்; சிற்றின்பப் பாடலைப் பாடமாட்டாள்; அளவுக்கதிகமான நகைகளை அணிய மாட்டாள்; கொச்சை மொழிகள் பேச மாட்டாள் என்றெல்லாம் ஆசிரியர் பட்டியலிடுகிறார். எனவே பெண்ணுக்குக் கல்வி அவசியம் என வலியுறுத்தி இறுதியில்,

படித்தறியாத பெண் ஒருவாழ்க்கைக்கு

பாயற்றகப்பலைப் போலாகும்

படித்துமூட மனைவிநடுக்கடல்

பச்சைமரமிதப் பொக்குமடி 

எனக் கல்வி கற்காத பெண்ணைப் பற்றியும், கல்வி கற்றும் பயனில்லாத  பெண்ணைப் பற்றியும் குறிப்பிடுகிறார். கல்வி கற்காத பெண் கணவனை அடிக்கடி திட்டுவாள், மாமியாருடன் தினமும் சண்டையிடுவாள், ஊரார் நகைக்கும் வகையில் நடந்து கொள்வாள் எனவும் எடுத்தியம்புகிறார்.

3. இறைப்பற்று

    பெண்கள் இறைப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதைப் பல பாடல்களில் வலியுறுத்துகிறார்.

நெற்றியொதுக்கியே கொண்டைமுடிந்திட

நித்தியங்கண்ணாடி பார்ப்பதுபோல்

சத்தியவேதத்தைப் பார்த்து மனதினைத்

தான்திருத்திக் கொள்வாய் மாதரசே

என்றும்,

ஒன்றானதெய்வத்தைச் சிந்தைசெய்தே அதின்

உண்மையைக்காணப் பெலன்கேட்டு

நன்றாக வேதத்தை வாசியப்போதவர்

ஞானந்தருவாரே மாதரசே

 

எனவும் பாடி பெண்கள் விவிலியத்தைப் படிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.


       கிறித்தவ இலக்கியங்கள்  விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு செய்திகளைக் கூறுவது மட்டுமன்றி கிறித்தவ சமுதாயத்தில் மக்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் அவர்கள் கடவுள் பக்தியுடன் விவிலியத்தைத் தினமும் படித்து அதன்படி வாழ்ந்தால் கிடைக்கும் நன்மைகளையும் சமுதாய மேம்பாடுகளையும் வலியுறுத்துகின்றன. பெண்கள் கல்வியறிவில் பின்தங்கியிருந்த காலக்கட்டத்தில் பெண்கல்வியினை வலியுறுத்தி ஜி.எஸ். வேதநாயகர் மாதர் கும்மியில் பாடல்கள் பாடியுள்ளார். எனினும் இரண்டு கும்மி நூல்களிலுமுள்ள சமுதாய அறக்கருத்துகள் இன்றும் சமுதாயத்திற்கு தேவையானதாகவே காணப்படுகின்றன.

 

 முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன்

 

 

No comments:

Post a Comment